கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை




மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் பிரதான ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கைகள் இன்று(வியாழக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பன இணைந்து இந்த ஆற்றுவாய் வெட்டும் பணியை முன்னெடுத்துள்ளன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரன் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.