ஐ.தே க அரசாங்கத்தின் சலுகையை பெற்றிருந்தும், சந்திரிக்காவுடனான ஒப்பந்தத்தினை மீறாத தலைவர் அஸ்ரப்


(முகம்மத் இக்பால்)


ஐ.தே க அரசாங்கத்தின் சலுகையை பெற்றிருந்தும், சந்திரிக்காவுடனான ஒப்பந்தத்தினை மீறாத தலைவர் அஸ்ரப்

1994 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கு முன்பாகவே தலைவர் அஸ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசுக்கும், சந்திரிக்கா தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் சந்திரிக்கா - அஸ்ரப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டதுடன், முஸ்லிம் காங்கிரசின் சில தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சந்திரிக்காவும் கலந்திருந்தார்.

சாய்ந்தமருதில் இன்று வைத்தியசாலை அமையப்பெற்றுள்ள அன்றைய தாமரை மைதானத்திலும் முஸ்லிம் காங்கிரசின் பாரிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு சந்திரிக்கா வருகை தந்து கொட்டும் மழையில் பிரச்சாரம் செய்தது இன்றும் எனக்கு நினைவுள்ளது.

அந்த தேர்தலில் சந்திரிக்கா தலைமையில் போட்டியிட்ட PA க்கு 1௦5 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரசுக்கு 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றது.

அப்போது ஒரே ஒரு ஆசனத்தை பெற்ற மலையாக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கி 113 ஆசனங்களுடன் சந்திரிக்கா ஆட்சியமைத்தார்.

ஆட்சி அமைக்க சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்காமல், முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் ஐ.தே கட்சியினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.

ஏனென்றால் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த அன்றைய காலத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் 5 ஆசனங்களும், ஈரோஸ் இயக்கத்தின் 3 ஆசனங்களும் எந்த சிங்கள கட்சிக்கும் ஆதரவு வழங்குவதில்லை என்று அறிவித்திருந்தார்கள்.

17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே கட்சியயை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆவலுடன் தமிழர்கள் வரிந்து கட்டிக்கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில், சந்திரிக்காவின் வரவு புலிகளாலும் விரும்பப்பட்டது.

தேர்தல் முடிந்ததும் கல்முனையில் இருந்த அஸ்ரப்பை ஜனாதிபதி டி பீ விஜதூங்க அவர்கள் ஹெலிகொப்டரை அனுப்பி கொழும்புக்கு அழைத்திருந்தார். தலைவர் அஸ்ரப்பும் அவசரமாக கொழும்பு செல்லவேண்டி இருந்ததனால், அவர்களால் அனுப்பப்பட்ட ஹெலியிலேயே கொழும்பு சென்றார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அனுப்பப்பட்ட ஹெலி அரசாங்கத்துக்கு சொந்தமானது. அது தனிப்பட்ட கட்சியினதோ, தனி நபரினதோ அல்ல.

எனவே தேர்தலுக்கு முன்பாக செய்துகொள்ளப்பட்ட சந்திரிக்கா – அஸ்ரப் ஒப்பந்தத்தின் பிரகாரமே அஸ்ரப் அவர்கள் ஆட்சி அமைக்க ஒத்துழைத்தார்.

ஏற்கனவே ஒப்பந்தம் இருக்கத்தக்கதாக அந்த ஒப்பந்தத்தை மீறுவதற்கான எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் எவ்வாறு ஐ.தே கட்சியுடன் அஸ்ரப் பேசுவது ?

ஹெலியை ஜனாதிபதி அனுப்பினார். அதில் அஸ்ரப் சென்றார் என்பதற்காக ஓர் சரித்திரம் வாய்ந்த ஒப்பந்தத்தை முறிக்கலாமா ? அதனைத்தான் தலைவர் அஸ்ரப் செய்தார்.

இங்கே குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் சந்திரிக்காவுடன் தேர்தலுக்கு பின்பு எந்தவொரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அனைத்து ஒப்பந்தமும் தேர்தலுக்கு முன்பாகவே செய்துகொள்ளப்பட்டது.

ஆட்சி அமைக்க சந்திரிக்காவுக்கே அஸ்ரப் ஆதரவு வழங்குவார் என்பது தேர்தலுக்கு முன்பே தெரிந்தவிடயம். அதனால் எந்தப்பக்கமும் தடுமாற வேண்டிய தேவை தலைவர் அஸ்ரபுக்கு அன்று இருக்கவில்லை.