“தூரிகை பேசும் நேரம்” சித்திரக் கண்காட்சியானது மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்றது



செல்வி லக்ஷிஜாவின் “தூரிகை பேசும் நேரம்” சித்திரக் கண்காட்சியானது மட்டக்களப்பு மாகாஜனக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று (15.11.2018) ஆரம்பமானது. மட்டக்களப்பு மாகாஜனக் கல்லூரியின் கலைப்பிரிவு மாணவியான சுஜிதரன் லக்ஷிஜாவின் படைப்பில் உருவான நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் இக் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே சித்திரத்துறையில் தனது அதீத திறமைகளை வெளிக்காட்டிவந்த செல்வி லக்ஷிஜாவின் சுய முயற்சியில் தீட்டப்பட்ட சித்திரங்களின் கோர்வையாக உருவான இக் கண்காட்சியை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் விஷேட அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. சியாமலாங்கி மற்றும் மாநகர பிரதி முதல்வர் க. சத்தியசீலன் ஆகியோருடன் கௌரவ அதிதியாக மகாஜனாக் கல்லூரியின் அதிபர் கே. அருமைராஜாவும் கலந்து கொண்டு இக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்ததுடன் படைப்பாளினி செல்வி லக்ஷிஜாவினை வாழ்த்தி, கௌரவித்தும் இருந்தனர். இந்தச் சித்திரக் கண்காட்சியானது தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.