இலங்கையில் கல்வித்துறையின் எதிர்காலம் முறையானதும் முன்னேற்றகரமானதாகவும் அமைக்கப்பட வேண்டும்




கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவது கல்வி என கூறலாம். கல்வி என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் இலங்கையரைப் பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. ஆரம்ப நிலை தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம், மொழி போன்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பொதுவானதாகவும், அனைவராலும் ஆர்வத்துடனும் போட்டி மனப்பான்மையுடனும் முறையான திட்டமிடலுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்டளவு வாய்ப்புக்களை பாரியளவு மக்களுக்கு வழங்குவதில்லை இலங்கை போன்றதொரு நாடு சமூக, பொருளாதார சவால்களின் விளைவாக மாணவர்கள் போட்டி இட்டுக்கொண்டு தங்களது வாய்ப்புக்களை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் நிலையும் நாம் அறிவோம். ஏழை விவசாயி ஒருவரது பிள்ளை கூட தனது திறமையை வெளிப்படுத்தி கல்வியில் உயரந்த்த மட்டங்களை அடையலாம். இந்த நிலையில் இன்று இருக்கின்ற இலங்கையின் கல்வியானது கடந்த காலங்களில் இவ்வாறு எளிதாக இருக்கவில்லை.

இன்று உலகளாவிய ரீதியில் கல்வி கற்கும் முறைமைகள் எமது கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவு மாற்றத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக திறன்பேசிகள், கணினிகள், இணையம், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட எண் முறையான கற்றல் உபகரணங்கள் போன்ற பல்வேறுபட்ட பரிமானங்களில் வளர்ச்சி கண்டுள்ள சர்வதேச கற்கை முறைகளோடு ஒப்பிடுமிடத்து இலங்கை இன்று இருக்கின்ற நிலை மிகவும் பின்தங்கியே உள்ளது என்பதில் ஐயம் இல்லை.

அந்த வகையில் நோக்கும் போது காலணித்துவத்தின் பின்னரான இலங்கையின் கல்வித்திட்டம் மற்றும் கல்விகற்ற முறைமைகளில் புதிய அணுகுமுறைகளின் வருகை எந்த விதமான முன்னேற்றகரமான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை. கடந்த ஐம்பது ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி முறைகளில் பாரிய மாற்றம் இடம்பெறவில்லை என்று கூறலாம். உலகத்தரத்தோடு கூடிய கல்விமுறைமைகளைப் பின்பற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வகையில் பாடசாலைகளில் கணினி கூடங்கள், டிஜிட்டல் தொழிநுட்ப வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்ற போதும் அவை பாரிய விளைவுகளை கொடுப்பதில் பின்தங்கிய நிலைகளை உருவாக்கி உள்ளது.

இலங்கையின் கல்விநிலை இவ்வாறு பின்தங்கி இருப்;பதற்கு பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்த போதும், கல்வியாளர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தோடு கூடிய கல்வி முறைமையின் முன்னேற்றம் மற்றும் அதன் அவசியம் பற்றி அறிந்திராமையும், அவ்வாறான கற்கை நிலைகளைப் போதிக்கக் கூடிய ஆசிரியர் வளம் இல்லாமை போன்ற பல காரணங்களாலும் இவ்வாறான நிலை உருவாகின்றது. கல்வி முன்னேற்றத்தை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட செயல் முறையானது மூன்று படித்தரங்களைக் கொண்டிருக்கின்றது.

ஏஊசு, தொலைக்காட்சிகள் போன்ற ஓடியோ - வீடியோ கருவிகள், ஊனு – சுழுஆ, குறைந்த வேக இணையத்தொடர்புகள், கணினி விகிதத்திற்கு அதிகமான மாணவர்கள் மற்றும் தேவையான தகவல் தொழிநுட்ப திறன்களைக் கொண்ட ஆசிரியர்கள் போன்றவை.

மல்டி மீடியா, புரஜெக்டர்கள், அதிவேக இணையத் தொடர்புகள், கணினி வேகத்திற்கு குறைந்த மாணவர் போன்ற மிகவும் முன்னேற்றகரமாக கருவிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவு கொண்ட போதியளவு ஆசிரியர்கள்.

ஆசிரியர்கள் முன்னெடுப்புக் கல்வி அல்லது மாணவர் வழிநடத்தும் கல்வி.

போன்ற டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கல்வி முன்னேற்றத்தை காண முடியும். நிலமை இப்படி இருக்க இலங்கையானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கல்வியின் முதல்படியில் பெரும்பாலான பகுதியையே இன்னும் தாண்ட வில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாது சர்வதேச ரீதியில் உள்ள மாணவர்கள் அறிவைப் பெறுவதற்காகவும், தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுவிக்கவும், வாய்ப்புக்களை நாடவும், தகவல் தொழிநுட்பத்தை சமூக வலைத்தளங்களில் யூடியூப் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் அவர்களது தேடல் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும், கல்வியின் மூலம் தமது வாழ்க்கை மற்றும் சமூகத்திற்குத் தேவையான உள்ளீடுகளை வழங்கவும் அவர்கள் முயன்று கொண்டே இருக்கின்றனர.; இதுவே அவர்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்கின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில் வினாத்தாள்களையும், அவற்றிலுள்ள கேள்விகளுக்கான குறிப்பிட்ட பதில்களையும் மட்டும் உள்வாங்கி இதன் மூலம் தமது கல்வி என்ற இலக்கை அடைகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது. இதனால் மாணவர்களின் தேடல் முடக்கப்பகின்றது. மற்றும் தொழிநுட்பத்தின் உதவியோடு அவர்கள் பரந்துவிரிந்த உலகை நோக்கும் வாய்ப்பும் இல்லாமல் செய்கின்றது.

முறையான முன்னேற்றகரமான ஆரோக்கியமான வழிகளில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை இலங்கையர்களில்; பெரும்பாலானோர் பயன்படுத்தத் தவறுகின்றமைக்கு அவற்றை முறைமையாக கையாளும் விதிகளை பாடசாலை மட்ட கல்வித்திட்டம் கட்டமைக்காமையே எனலாம். உரிய விதத்தில் உரிய தேவைக்காக, சிறந்த நிலைபேறான விளைவுகளை பெறும் வகையில் மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழிநுட்ப கல்வியோடு சேர்ந்து ஊட்டப்பட எமது கல்வித்திட்டத்தில் சீரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெறவில்லையாயின் இலங்கையின் கல்வியால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படும் என்பதே எனது கருத்தாக்கமாகும்.

5 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு கட்டாயக்கல்வியும் 92 சதவீதம் தேசிய கல்வி அறிவு, ஆரம்பப பாடசபலையில் இணையும் மாணவர்கள் 99 சதவீதமாகவும், மிகுந்த போட்டித்தன்மை கண்ட பொதுப்பரீட்சைகள் அத்தோடு சிறந்த சித்திகளைப் பெறுவதற்காக மாணவர்கள் தமது பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் வகுப்புக்களை நாடுதல் என எமது கல்வி முறைமை படுவேகமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் எதிர்காலத்தில் தகவல் தொழிநுட்பத்தின் நுழைவு இலங்கையின் கல்வி முறைமையில் அவசியமாக வேண்டி நிற்கின்றது.

இன்று பெருமளவில் பரினாம வளர்ச்சி கண்டுள்ள இலங்கையின் கல்வி முறைமையில் 10026 பாடசாலைகள் இயங்கிய போதும் தனியார் பாடசாலைகளின் வளர்ச்சியும் அவற்றுக்கான கேள்வியும் அபரீதமான வளர்ச்சியை எட்டியுள்ள போதும் மாணவர்களுக்கு எதிர்காலத்துக்குத் தேவையான நடைமுறை சார் கல்வியினை வழங்குவதில் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் மாணவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தைக் குறித்து பயந்த வண்ணமாகவே இருக்கின்றது. மேலை நாடுகளைப் போன்று மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மாணிக்கும் பயனுள்ள கல்வியானது நம் நாட்டில் வழங்கப்படாமையும் எதிர்காலம் குறித்து இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் கல்வி நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும்போதுதான் நம் நாடு அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்மடைந்து வளமான நாடாக மாறுகின்ற நிலையும் உருவாகும். இதற்கு இலங்கையில் தற்காலத்தில் இருக்கின்ற கோட்பாட்டு நடைமுறையிலான கல்வி முறையினை மாற்றி நவீன மயப்படுத்தப்பட்ட கல்விக்கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் பரவலாக கொண்டுவரப்பட்டு மேலை நாட்டு மாணவர்கனைப்போன்று இலங்கை மாணவர்களையும் தன்னார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தத்தக்க வகையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இதனால் இலங்கையின் எதிர்கால கல்வி குறித்து எவ்வித திண்டாட்டமும் கொள்ளத்தேவையில்லை.

சனத்தொகையில் 92 சதவீதமான மக்கள் எழுதவும், வாசிக்கவும் தெரிந்த இலங்கை நாட்டில் பல்கலைக்கழக பட்டத்தினைப்பெறுவதில் இந்த எண்ணிக்கையின் பிரதிபலிப்பானது குறைவாக இருப்பதே கவலையளிக்கின்றது. கல்விதிட்டமானது முழுமையாக பாடத்திட்ட அறிவை மையமாக கொண்டதாகவே இருப்பதனால் செயற்பாட்டு அறிவைப்பெற்றுக் கொள்வதில் மாணவர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். பல்கலைக்கழக கல்வியை பெறத்தகுதி பெறும் அனைவரும் உள்வாங்கும் அமைப்பு முறையை உள்நாட்டு அரச பல்கலைக்கழகங்கள் கொண்டமைவதில்லை. உண்மையில் சுமார் 25000 மாணவர்களுக்கு மாத்திரமே அதற்கான சூழலை வழங்கமுடியுமாக உள்ளது. இதனால் சுமார் 30000 மாணவர்கள் தகமை பெற்றும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறமுடியாமல் போகின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தில் கல்விக்காக செலவிடும் பொதுத் தொகையானது உலகிலேயே மிகக் குறைவானதாகக் காணப்படுகின்றது. இதனால் நம்நாட்டு அரசாங்கத்தால் தற்காலத்தில் வினைத் திறன்மிக்க நவீன தொழிநுட்பம் கொண்ட கல்வித்திட்டங்களை மேற்டிகாள்ள முடியாது உள்ளது. இது எதிர்காலம் குறித்து மாணவர்கள் மத்தியில் விரக்த்தியை ஏற்படுகின்றது.

இலங்கையின் எதிர்கால கல்வியானது தற்கால முறைசார்ந்தே பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆகவேதான் தற்காலத்தில் கல்வி தொடர்பாக இருக்கின்ற பல பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அமுலாக்கல் வேண்டும். அதனால் எதிர்காலக் கல்வியில் மாணவர்கள் தங்களது வாழ்க்கைக்கு பயனுடையவாறு கல்வியினை பெற்றுக் கொள்வார்கள். நாட்டின் விருத்திக்கு படிப்பறிவு அவசியமானதொன்றாகும். தற்போதுள்ள கல்வி வளர்ச்சி விகிதம் மேலும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. படிப்பறிவு பெறுவோரில் ஆண், பெண் விதாசார வேற்றுமை அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் அவற்றின் தரமும் நன்றாக இருக்கவேண்டும். ஆனால் தற்போதய தர நிலவரம் ஏற்புடையதாக இல்லையென்பதே உண்மை.

தரமான கல்வி மட்டுமே சமூகத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது தரமான கல்வி எல்லோருக்கும் பாரபட்சமில்லாமல் கிடைக்கிறதா? என்றால் இல்லை. கல்வி நிறுவனங்கள் தரும் சான்றிதல்கள் சமூக அந்தஸ்த்துக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் மட்டுமே பயன்படுவது போல் தெரிகிறது. கல்வியென்பது வெறும் பட்டங்கள் பெறுவது மட்டுமல்ல படித்த கல்வி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்கு உதவ வேண்டும் தற்போது கல்வி நிறுவனங்கள் வளர்ந்தளவு கல்வியின் தரம் உயரவில்லை. உதாரணமாக படித்த கல்விக்கும் சிந்தனைக்கும் தொடர்பில்லாத நிலை மேலும் இக்கல்வி முறை சமூக முன்னேற்றத்திற்கு உதவுமா? என்பது கேல்வியாக உள்ளது.

எனவே மேற்கண்ட விடயங்களினை அனைவரும் கருத்தில் கொண்டு இலங்கையின் கல்வி முன்னேற்றத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இனிவரும் காலங்களிலாவது மாணவர்களின் வாழ்க்கைக்கு உகந்த கல்வியினைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். மேலும் இலங்கையின் கல்விக் கொள்கையில் எதிர்காலத்திற்கு உகந்த வகையில் பல நவீன திட்டங்களை உள்வாங்கி ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையினையும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றமடையச் செய்வதற்கு சிறந்த கல்விக் கொள்கைள் மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மாணவர்களும் ஏதோவொரு வகையில் முன்னேறுவதற்குரிய கல்வியினையும் ஊக்குவிப்புக்களையும் நம் நாட்டரசாங்கம் தற்கலத்திற்கு மிகவும் இன்றியமை யாததாகும்.

தி.ஜீகரன்
2ம் வருடம் சிறப்புக்கற்கை
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.