மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் வங்கியின் பாடசாலைக்கிளை திறந்து வைப்பு





(அதிரன்)

பிரதேச அபிவிருத்தி வங்கியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியின் சுற்றுமதிலுக்கு வர்ணம் பூசப்பட்டதுடன், அங்கு கல்விபயிலும் 1400 மாணவிகளின் நன்மை கருதி வங்கியின் பாடசாலைக்கிளை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு நகரில் நடை பவனி ஒன்றும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.எம்.ஜயசிங்க, பிராந்தியப் பொது முகாமையாளர் ஆர்.என்.ஆர்.ரந்தெனிய, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் வை.பி.அஸ்ரப், கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் கே.சத்தியநாதன், கிளை முகாமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் வியாபார மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் சந்தைப்பிரிவை விரிவுபடுத்துதல், நகரகளை மேற்கொள்ளுதல், பொது இடங்களைத் தூய்மைப்புடத்துதல், என்ற அடிப்படையில் இவ்வேலைத்திட்டங்கள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

வங்கிகளுக்கு வியாபார நோக்கம் மாத்திரமல்ல சமூகப் பொறுப்பும் உள்ளது என்பதனை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் போது, மாணவிகளுக்கு வங்கிக்கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், வங்கியின் சின்னமான வலம்புரிச் சங்கு வடிவிலான உண்டியல்களுமு; வழங்கப்பட்டன. 

 2011ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. 

பிரதேச அபிவிருத்தி வங்கியானது மட்டக்களப்பு நகரக் கிளை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய 7 கிளைகளைக் கொண்டு கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வருகிறது. 

வாடிக்கையாளர்களது நலன் கருதி பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு நகரக் கிளையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தானியங்கி பணம் பெறும் இயந்திரம் (ஏ.ரி.எம்.) திறந்து வைக்கப்பட்டது. இந்த ஏ.ரி.எம்.இயந்திரம் பிரதேச அபிவிருத்தி வங்கிக்கிளைகளில் கிழக்கின் முதலாவதும் இலங்கையில் 11ஆவதும் ஆகும். 

பிரதேச அபிவிருத்தி வங்கியானது இலங்கையில் 3ஆவது பெரிய வலையமைப்பைக் கொண்டதும் அரசாங்கத்தின் ஒரேயொரு அபிவிருத்தி வங்கியாகவும் இருந்து செயற்படுகிறது. 

1985ஆம் ஆண்டு புளத் சிங்கள என்னுமிடத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ரொனி டி மெல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வங்கியே பிரதேச அபிவிருத்தி வங்கியாகும்.

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்கள ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையின் சனத்தொகையின் 70 வீதமாக உள்ள கிராமிய மக்களை முன்னேற்றுவதற்காக 85ஆம் ஆண்டு களுத்துறை, குருநாகல், மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 17 மாவட்டங்களில் 268 கிளைகளைக் கொண்டு இயங்குகிறது.