பாராளமன்றம் கலைக்கப்படுகிறது ! ஜனவரியில் பாராளமன்ற தேர்தல்




நாடாளுமன்றை கலைப்பதற்குரிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெப்பம் இட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்பிக்களின் ஆதரவை பெற மகிந்த தரப்பினர் மும்முரமாக முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.

அரசியலில் நேரெதிர் துருவங்களான தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன், ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.


எதிர்ப்பு

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் சட்டவிரோதமானது, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தின் மேன்மையை உறுதிசெய்யும் வகையில் இதை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது




தான் உண்மையான ஜனநாயகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், மக்களின் விருப்பம் எப்போதும் மரியாதைக்குரியது, அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்




உச்சநீதிமன்றத்தின் கருத்து கேட்கப்படாமல் நாடாளுமன்ற தேர்தலை நடத்தமுடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரரும், மூத்த ஊடகவியலாளரான சுனந்தா தேசப்பிரிய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.