ஜனாதிபதியின் கூற்று உண்மையாகியது !

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் பாராளுமன்றத்தில் ஏற்படக் கூடிய மோதல்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி தீர்மானித்திருந்தார். ஜனாதிபதி அஞ்சியது நேற்றைய பாராளுமன்ற மோதல்களால் ஊர்ஜிதமாகி யிருப்பதாக சர்வதேச ஊடகவியலாளர்களும், இராஜதந்திரிகளும் தெரிவித்துள்ளனர். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் உயரிய சபையில் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வது கவலையளிப்பதாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி விடுத்த விசேட அறிக்கையில் முன்கூட்டியே இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும். சில சமயம் சிலர் மரணிக்கவும் நேரிடும் எனவும் சிலர் தெரிவித் தனர். அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்திருந்தேன்.ஆகையால் இதற்கான சிறந்த தீர்வாக எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மிக உயர்வாக மதித்து சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந் தெடுப்பதற்கும், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டின் வாக்குரிமை பெற்றிருக்கும் ஒரு கோடியே 50 இலட்ச வாக்காளர்களிடம் அந்த அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க தீர்மானித்தேன்.

இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மை, சபாநாயகரின் செயற்பாட்டினால் ஏற்பட்ட முரண்பாடான நிலைமை உள்ளிட்ட அனைத்தையும் கருத்திற் கொண்டு மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக அப்பொறுப்பை பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான் பாராளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.