மழையால் மட்டக்களப்பில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்கள் ( 1106 நபர்கள் ) தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்- அரசாங்க அதிபர் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்களைச் சேர்ந்த 1106 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்த அந்தப் பிரதேச செயலாளர்கள் வழங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை மாவட்ட மட்ட அவசரகால அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நீர்ப்பாசனத் திணைக்களங்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, திணைக்களம், கல்வித் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

வானிலை அவதான நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் படி 5ஆம் திகதி முதல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக காலநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 3 நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 5 நலனோம்பு முகாம்களும் வாழைச்சேனையில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 499 குடும்பங்களைச் சேரந்த 1106 நபர்கள் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்த அந்தப் பிரதேச செயலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்று நிருப அடிப்படையில் 3 நாட்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.