சாய்ந்தமருது மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் கேடு

ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்' என்பார்கள் .கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குள் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பெரும் கிராமம் சாய்ந்தமருது ஆகும். கிழக்கே கடலையும் மேற்கே வயல் நிலத்தையும் தெற்கே மாளிகைக்காடு, காரைதீவு பிரதேசத்தையும் வடக்கே கல்முனை மாநகரத்தையும் கொண்ட சாய்ந்தமருதினூடாக ஊடறுத்துச் செல்கிறது தோணா.


மேற்படி தோணா மழைக் காலங்களிலும் வெள்ள காலங்களிலும் ஊர் ெவள்ளத்தில் மூழ்கி விடாமல் மேலதிகமான நீரை முகத்துவாரத்தினூடாக கடலில் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கினை வகிக்கின்றது.

முன்னொரு காலத்தில் இந்தத் தோணா மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் ஒரு நீர்நிலையாகக் காணப்பட்டது. நாளடைவில் கரையோரமாக வாழ்ந்த மக்கள் நாளாந்தம் கொஞ்சம்கொஞ்சமாக தோணாவை ஆக்கிரமித்துக் கொண்டதும், தோணாவின் பரப்பு ஓடையாக மாற ஆரம்பித்தது. இத்தோணாவை மேலும் பொதுமக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தோணாவின் இருபுறமும் பாதைகளை அமைத்தார்.

தூய நீர் நிறைந்த, பார்ப்போர் மனதில் ஆசையை உண்டுபண்ணிய அழகிய இத்தோணா இன்று நீர்க்களைகள் வளர்ந்து, புல்புண்டுகள் சூழ்ந்து, விஷ ஜந்துக்களும் நுளம்புகளும் தொற்றுநோய் கிருமிகளும் வாழும் இடமாக மாறி இருப்பது இப்பிரதேச மக்களுக்கு மிகவும் மனவேதனையை அளிக்கின்றது.

சாய்ந்தமருது பிரதேச மக்கள் மட்டுமல்ல அயல் பிரதேசத்தைச் சேரந்தவர்களும் தமது வீட்டுக்கழிவுகளையும் மிருகக் கழிவுகளையும் குப்பை கூளங்களையும் கொட்டும் கழிப்பிடமாக இதனைப் பயன்படுத்துகின்றனர். மழை பெய்யும் காலங்களில் இந்த தோணாவிலிருந்து வீசும் வெறுக்கத்தக்க மணம் இப்பிரதேசத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும் . அந்த அளவு சகிக்க முடியாத வாடை அது!

தோணாவின் இருமருங்கிலும் குடியிருக்கும் மக்கள் நாளாந்தம் பலவிதமான சுவாச நோய்களுக்கும் தொற்றுநோய்களுக்கும் உள்ளாகி வருவதுடன் இரவும் பகலும் நுளம்புக் கடியில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் போது மட்டும் தோணாவை துப்புரவு செய்வதாகவும், அதனை மிகவும் அழகான சுற்றாடல் பொழுதுபோக்குப் பிரதேசமாக மாற்றுவதாகவும் மேடைகளில் வாக்குறுதி வழங்கி மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் காணாமல் போய் விடுகின்றனர்.

தோணாவை வைத்து பல வருடங்களாக உழைத்து வரும் ஒரு கூட்டம் அடுத்த தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.இதனைக் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் எவரும் இல்லாத நிலையில் தோணாவின் கதை தொடர்கதையாகின்றது.

தோணாவின் அதிகமான இடங்களில் நீர்க்களைகள் நிலத்துடன் வேரூன்றி மரமாக மாறியுள்ளன. சில இடங்களில் பெரிய புற்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கின்றது. இந்தப் புற்கள் பூக்கும் காலத்தில் அப்பூக்கள் வெடித்து காற்றில் பறந்து செல்வதால் மக்களுக்கு தோலில் ஒருவகை சொறிச்சல் நோய் ஏற்படுகின்றது. இத்தோணாவின் பக்கத்தில் பாடசாலைகள் , பொதுநிறுவனங்கள், மக்களிடம் வாழிடங்கள் , ஹோட்டல்கள் அமைந்து காணப்படுகின்றன. இப்புல்பூண்டுகளை பிரதேச மக்கள் சிரமதானம் மூலம் அகற்றுவதற்கு எடுத்த முயற்சியும் கைகூடவில்லை.

சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்களும்,பொலிஸாரும் இணைந்து வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்புகள் பரவும் சாதகமான நிலையில் காணப்படும் வகையில் தமது சூழலையும் வீட்டுச் சுற்றாடலையும் வைத்திருப்போருக்கு எச்சரிக்கையும் அதனையும் மீறுவோருக்கு தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவும் பிறப்பிக்கின்றனர்.

ஆனால் பொதுமக்களின் வீடுகளில் காண்பதனை விட எத்தனையோ மடங்கு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இளநீர் குரும்பைகள் , பொலித்தீன் பைகள் , பிளாஸ்டிக் போத்தல்கள், வாளிகள் , உடைந்த சிதைந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள், சிரட்டைகள் என்று எத்தனை வகையான பொருட்கள் இங்குள்ள தோணாவில் வீசப்பட்டு காணப்படுகின்றன.

இத்தோணாவில் வளர்ந்து காணப்படும் நீர்க்களையான சல்வீனியா , பிஸ்ரியா மற்றும் ஐக்கோணியா போன்ற தாவரங்களின் இலைகளுக்குள்ளும் நுளம்புக் குடம்பிகள் காணப்படுவது இந்த வீடுகளுக்கு வரும் பொதுசுகாதார பரிசோதகர்களின் கண்களுக்கு புலப்பட ஏன் மறுக்கின்றது. இப்படியான நிலமையைப் பேணி பாதுகாக்கும் கல்முனை மாநகர சபையிடமிருந்து இதற்கான தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் என பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த தோணாவிற்கு அருகில் வாழும் சித்தி சுபைதா என்ற பெண் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தோணாவிற்கு அருகாமையில் தனது சிறு பராயத்திலிருந்தே வாழ்ந்து வருவதாகவும் இந்த தோணாவில் குளித்து பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்து விளையாடியதாகவும் கூறுகிறார்.

இந்த மாளிகா வீதியில் மரப்பாலம் ஒன்று இருந்ததாகவும் வெள்ள காலத்தில் ஆறு பெருக்கெடுத்து ஓடுவது போல் இந்த தோணாவில் நீர் ஓடியதாகவும் இரவு பகல் என்று பாராது நூற்றுக்கணக்கானோர் இதில் மீன் பிடித்ததாகவும், அவர்கள் பிடிக்கும்மீனை தனது பெற்றோர் வாங்கி கறிசமைத்து உண்டதாகவும் அப்பெண் கூறுகிறார்.

கிடுகு பின்னுவோர் காய்ந்த ஓலைகளை இத்தோணாவில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கிடுகு இழைத்து விற்பனை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மேசன் தொழிலாளி முஹம்மது நௌசாத் கருத்துத் தெரிவிக்கையில்,

இத்தோணாவினால் தானும் தனது குடும்பத்தவர்களும் சுற்றத்தாரும் பலவிதமான சுற்றாடல் தாக்கங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இரவு வேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு நீர்ப்பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

மழைக்காலங்களில் இப்பகுகியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தோணா விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இம்மக்கள் எதிர்நோக்கும் சுற்றாடல் சவாலுக்கு மிக விரைவிலி நிதந்தரமான தீர்வொன்றினை பெற்றுத் தருமாறு இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்