நான் பதவிகளை எதிர்ப்பார்க்கவில்லை. இரு தலைவர்களையும் இணைத்துக்கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவே எண்ணினேன் : சஜித்


பிரதமர் பதவிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் பேசியதை ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த அழைப்பினை, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியை இணைத்துக்கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதனாலேயே தான் நிராகரித்ததாக கூறினார்.

அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த வாரம் இடம்பெற்ற பொது பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகராக கரு ஜெயசூரியவிற்கு அழைப்பு விடுத்ததாகவும், இந்த அழைப்பை ரணில் மீதான பயத்தின் காரணமாக அவர்கள் ஏற்கொள்ளாத நிலையிலேயே மஹிந்தவிற்கு வழங்கியதாகவும் கூறினார்.

இந்நிலையில் குறித்த கருத்திற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, சவாலைப் பொறுப்பேற்க தாம் எச்சந்தர்ப்பத்திலும் அஞ்சப்போவதில்லை என கூறினார்.

மேலும் இந்த அரசாங்கத்தில் செயற்படும்போது நான் பதவிகளை எதிர்ப்பார்க்கவில்லை. இரு தலைவர்களையும் இணைத்துக்கொண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவே எண்ணினேன் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, நான் மட்டுமல்ல கரு ஜயசூரியவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டார். ஆகவே, தான் எடுத்த தீர்மானம் சரியென்று நினைக்கின்றேன் என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.