இலங்கையின் இன்றைய கல்வி இலக்குகளினால் தகர்த்தெறியப்படும் மாணவர்களின் அபிலாசைகள்

காலம் என்னும் ஓடம் தன்னில் கதிகலங்கிய நிலையில் கண்ணீரைச் சுமந்தவாறு கரையை நோக்கி சுழல்கின்றது இன்றைய இலங்கையின் கல்வி என்னும் இலக்கு. ஆரம்ப இலங்கையின் பசுமரத்தாணி போல பதிய வைக்கும் பல சமய பாடவிதானங்கள் ஆலமர விருட்சமாய் விழுது பரப்பி துளிர்த்து நின்றன. ஆலயங்கள், விகாரைகள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என பல சமயத்தலங்கள் மாணாக்கரை நல்வழிப்படுத்தும் பிரிவெனாக்களாகவும், குருகுலங்களாகவும் மிளிர்ந்து வர மாணவச் செல்வங்களின் ஒழுக்கநெறி கல்வியோடு மொழியறிவும் விருத்தியடையலானது.


ஆனால் மாறி வருகின்ற உலகில் எதுவும் மாறலாம். நிரந்தரமானதென்று எதுவுமில்லை. இலங்கையின் கல்வி முறையிலும் சில மாற்றங்கள் நிகழலாயின. 1945 ஆம் ஆண்டு ஜீலை மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, 1945 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சகல மாணவர்களுக்கும் இலவசக் கல்வி ஊ.று.று கன்னங்கரா அவர்களினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இலவசமாக கல்வியினை வழங்க முடிவெடுத்த இலங்கை அரசு அதனை நடைமுறைப்படுத்தலானது. நாட்கள் பல நகர்ந்து சென்றன. நல்ல அறிஞர்கள் பலர் தோன்றி நாட்டின் அபிவிருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்தமையும் உன்னதமானதே. இதனால் ஆரம்ப காலத்தில் இலங்கையின் கல்வி முறை என்னவோ சாலவும் பொருந்தும் வண்ணமே அமையப்பெற்றது.

ஆண்டு ஒன்று செல்லும் பிள்ளையின் மனதில் ஆயிரமாயிரம் ஆசைகள் பட்டாம் பூச்சியாக சிறகடித்துப் பறக்கும். அத்தருணத்தில் அவர்களிடம் கேட்டால் தான் வைத்தியனாகவோ அல்லது பொறியியலாளனாகவோ ஏன் விஞ்ஞானியாகக்கூட வருவேனென்று அந்த பிஞ்சு மழலை கள்ளம் கபடமில்லாது பட்டென்று பதிலினைக் கூறி நிற்கும். அதற்கான முயற்சிகளில் ஆரம்பத்திலிருந்து அயராது உழைத்து புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வெற்றிப்படியில் தடம் பதிப்பார்கள். க.பொ.சாதாரன தர ஆரம்பப் பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்தில் கற்கவேண்டியுள்ள சில தெரிவுகளுள் ஒரு துறையினுள் குதித்து அதில் ஆழமாக நீச்சலடித்து அதன் கரையினைத் தொட்டு பல்கலைக்கழகம் என்னும் வாயிலை அடைந்து வெற்றிக்கனியினை பறித்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்க வினைத்திறனோடு விடாது முயன்று பட்டம் என்னும் படிப்பை முடித்து விட்டு பறித்த கனியை உண்ண முடியாமல் கதி கலங்கி நிற்கும் அவலம் கண்ணீர்த் துளிகளைச் சுமந்து கனத்த மழையாக பொழிகின்றமை இன்றைய இலங்கையின் நிதர்சனமே.

ஜரோப்பிய நாடுகளில் மாணவர்களின் எண்ணங்களின் சிந்தனை விருத்திக்கேற்றாற் போல் கல்வி முறை அமைக்கப்பட்டு பிள்ளையின் நாட்டம் எத்துறையின்பால் ஈர்க்கப்படுகின்றதோ அத்துறையில் பிள்ளையை பண்டிதனாக்கி மகிழ்கின்றது. ஆதலாலே ஜரோப்பிய நாடுகள் வளர்ந்த நாடுகளாக மதிக்கப்படுகின்றது. ஆனால் இலங்கையின் கல்விமுறையானது ஒரு சில கல்வியின் இலக்குகளை மையமாகக் கொண்டு நகர்வதனால் தொழிற் கல்வியினை பெற்றுக் கொள்ளாது பொருத்தமற்ற துறையில் கற்று வேலையில்லாப் பட்டதாரிகளாக உருவெடுத்து அபிவிருத்திக்காக உழைக்க வேண்டிய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருப்பது துர்ப்பாக்கிய நிலையே.
இது ஒருபுறமிருக்க சமகால இலங்கையில் அரசியல் தடம்புரலள்கள் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் கல்விக்காக கொண்டு வரப்படும் திட்டங்களும் நீரின் மேலிடப்பட்ட பொறிப்பு போலவே நிச்சயமற்றதாகி விடுகிறது. இறந்த கால நினைவுகளுடன்; நிகழ்காலத்தை வளப்படுத்தியவாறு எதிர்காலத்திற்காக ஏங்குகின்ற மாணவர்களின் வாழ்கை வரண்ட பாலைவனமாகிக் கொண்டிருப்பதனை அறிந்தும் அறியாததனைப் போல் கல்விக் கொள்கையில் மாற்றங்களை உறுதியாகக் கொண்டு வர முன்வராமல் அரைத்த மாவை அரைப்பது போலவே ஒரேமாதிரியான கல்வி இலக்குகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருப்பதனால் மாணவர்களின் அபிலாசைகள் கானல் நீராக தகர்தெறியப்படுவது கண்கூடு.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமெனின் நாமும் ஏனைய நாடுகளின் கல்வி முறையினையும் சற்று சிந்தித்து பார்த்தால்தான் புரியும். அப்படியான நாடுகளுள் ஒன்றுதான் பின்லாந்து. இந்நாட்டின் கல்வி முறை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரனமாக அமைகின்றது. பின்லாந்தில் ஒரு குழந்தை பாடசாலை செல்லும் வயது ஏழு. அதற்கு முன்னதாக குழநதைகளை பாடசாலைகளிள் அனுமதிப்பதில்லை. ஏனெனில் குழந்தைகளை குழந்தைகளாகவே வாழவிட வேண்டும். ஏழு வயதிற்கு முன்னர் கல்வியினை திணித்தால் அக்குழந்;தையின் வாழ்கை நரகமாகிவிடும் என்பது பின்லாந்து நாட்டின் தாரகை மந்திரமாகவே அமைகின்றது. இதேவேளை முதல் ஆறு வருடங்கள் வரை கற்கும் திறன் அளவிடப்படுவதில்லை. விளையாட்டுத்தனமாகவே கல்வி என்னும் உணவு ஊட்டப்படுகின்றது. ஓன்பது வருடஙகள் கடந்ததும் அதாவது மாணவனுக்கு பதினாறு வயதாகும் போதே முதலாவது பரீட்சை நடாத்தப்படுகின்றது. அம்மதிப்பீட்டின் பின்னர் குழந்தை எத்துறையில் ஈடுபாடு கொண்டிருக்கின்றதோ அத்துறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடாத்தப்படுகின்றது. அதுவரை காலமும் குழு முறையில் கூட்டு முயற்சியில் பாரபட்சமற்ற கல்வி முறையில் பயின்று வந்த மாணவர்கள் இளவயதில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் பிரதிபலிப்புடன் தொழிலொன்றுடன் வெளியேறுகின்றனர்.


பின்லாந்து கல்விமுறைதான் இலங்கைக்கு அவசியமென்றில்லை. ஆனால் குழந்தையை குழந்தையாகவே விட்டு பிள்ளைகளின் எண்ணம் போல் அவர்களின் வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கேற்ப வழிசமைத்துக்கொடுக்கும் வகையிலான தொழிற் கல்வியோடு இலங்கையின் கல்வி இலக்குகள் நகருமானால் இன்னலகன்று இன்பம் பிறக்கும் அல்லவா? ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் கல்வியானது அவனுக்கு ஏழு பிறப்புகளிலும் தொடரும் என 'கேடில் விழுச்செல்வம் கலவி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து' என்றவாறு திருக்குறலாசிரியர் வரையறைத்திருக்கின்றார். ஆனால் பெற்ற கல்வி கடன் நிறைந்த வாழ்க்கையினையும் பசி நிறைந்த துயரினையும் மாணவர்களுக்கு தருகின்றதென்றால் கல்வி இலக்குத்தானே தவறு.

உள்ளத்தில் தோன்றும் அபிலாசைக்கேற்றாற் போல் கல்வியினை விதைத்தால் அது வளர்ந்து பின்னாளில் விருட்சமாய் பயன் தராதா? நிச்சயமாக பயனளிக்கும். ஆதலால் கல்வி முறை தொழிலோடு ஒன்றித்ததாக அமைக்கப்படுவது அவசியமானதொன்றே. இதனை அறிந்து கொள்ளவேண்டியது அறிஞர் சமூகம். புரிந்து கொள்ளவேண்டியது இலங்கையின் அரசு. இவை நடந்தேறப்பட்டால் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் சுபீட்சம் நிறைந்த இலங்கை மலர்வது திண்ணம்.

சி.புனிதா
2 ஆம் வருடம் (சிறப்புக் கற்கை)
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.