மாணவர்களின் பயணம் இலக்கு நோக்கியதாக அமையவேண்டும்

ஒரு சமுதாயத்தின் வெற்றிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி முக்கியமாகும்.  சவால்கள் நிறைந்த இவ்வுலகில் இலக்கை நிர்ணயித்து ஒரு நோக்கத்துடன் தெளிவான பாதையில் பயணிக்க வேண்டும். "உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள் ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள் நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது"  என்பது ஹிட்லரின் கருத்தாகும்.


  இலக்கு என்றால் என்ன என்பது பற்றி நோக்கும் பொழுது "நமக்கு வேண்டியது என்ன என்பதை விஞ்ஞான ரீதியில் நிர்ணயித்து அதை முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் அடைவதே இலக்கு எனப்படும்".  இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சான்றோர்கள் கூறுவார்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. இலக்கு இல்லாத மனித வாழ்க்கை துடுப்பு இல்லாத படகு போன்றது எனலாம்.

 நாம் செய்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கின்றது . நோக்கம் எதுவும் இன்றி அலைந்து திரிய வேண்டும் என்பது பல மாணவர்களின் நோக்கமாக உள்ளமை வேதனைக்குரிய விடயமே. பெயர்ப் பலகையை பார்க்காமலேயே ஒரு பேருந்தில் செல்பவர் உரிய இடத்திற்கு போய் சேர முடியுமா?இவ்வாறே குறிக்கோளற்ற மாணவர்களின் பயணங்களும் காணப்படுகின்றன.

 சாதாரணமாக பேருந்து பயணம் புறப்படும்போது கூட நாம் எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டு புறப்படுகின்றோம். அது போல வாழ்க்கை என்னும் பயணம் மேற்கொள்ளவும் எந்த இலக்கை அடைய வேண்டும் , அதற்கு என்னென்ன பணியை செய்ய வேண்டும், எந்த வேலையை தேர்வு செய்யவேண்டும் என்று மாணவர்கள் தெளிவாக முடிவு செய்தபின் அதற்காக உழைக்க வேண்டும்.

 மாணவப் பருவத்தில் சரியான இலக்கை நோக்கி பயணம் செய்வது வாழ்வில் சாதிக்க பெரிதும் உதவும் . மாணவர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவ பருவத்தில் தான் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நெருக்கம் அதிகமிருக்கும் அந்த நேரத்தில் தனது இலட்சியத்தை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் பெற்றோர்களும் மாணவர்களின் ஆசையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் பெற்றோர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை மாணவர்களின் மீது திணிக்கக்கூடாது அவர்கள் சரியான இலக்கின் பாதையில் பயணிக்க உதவ வேண்டும்.

 விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தங்களுக்கான ஒரு இலக்கின் பாதையில் செல்வது மிக அரிதாக காணப்படுகிறது . தாம் எவ்வாறான பாதையில் செல்கிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர். மனம்போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நினைக்கும் இன்றைய தலைமுறையினர் குறிக்கோள் இன்றி காலம் கடத்திக் கொண்டிருப்பவரது நிலை பரிதாபமாகவே முடிவடையும் என்பதை உரிய மாணவர்கள் உரிய நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கு என்ற ஒன்றை நோக்கி பயணிக்க வேண்டும் இதனை மனதில் இருத்தியவர்களாக   செயற்பட வேண்டும்.

 இன்று எல்லாவற்றையும் எளிதில் தேடி பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப உழைக்கும் மாணவர்களுக்கே வெற்றி நிச்சயம்..

 மாணவர்கள் தமது இலக்கை தெளிவாக சாத்தியப்படக் கூடிய தாகவும் நன்கு திட்டமிடப்பட்ட தாகவும் சூழ்நிலைக்கு பொருந்தக்கூடியதாகவும் அமைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் . தற்போதைய உலகம் நிச்சயமின்மை , சிக்கல்கள் ,நெருக்கடிகள் , ஆபத்துக்கள் மற்றும் மோசடி நிறைந்தது எமது இலக்கு சரியாக அடையபடுமா? என்பதை நம்மால் உறுதி செய்ய இயலாத நிலை உள்ளது சுருக்கமாக கூறின் "நமது வாழ்க்கை நம் கையில் இல்லை " என்று சொல்லும் நிலையே உள்ளது . ஏனென்றால் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நம்மைஅறியாமலேயே நடந்து விடுகின்றன . எனினும் தாம் நிர்ணயித்த இலக்கை நோக்கி மாணவர்கள் பயணிக்கும்போது எதிர்பாராத சவால்கள் வந்தாலும் அதனை சமாளித்து மனம் தளராமல் பயணிக்க வேண்டும் அப்போது தான் இலக்கை அடைய முடியும்.

 இலக்கை மூன்று விதமாக பிரிக்கலாம்
 1)நீண்டகால இலக்கு
2) இடைக்கால இலக்கு
3) உடனடி இலக்கு
 நீண்டகால இலக்கு என்பது  மூன்று முதல் பத்து ஆண்டு கொண்டது. இடைக்கால இலக்கு என்பது நீண்டகால இலக்கு நோக்கி எப்படி முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை மையப்படுத்தியது. இங்குதான் நாம் சரியாக செயல்பட வேண்டும் . ஏதாவது காலதாமதம் ஏற்பட்டால் உடனே அதற்கான மாற்று வழியை பயன்படுத்த வேண்டும். உடனடி இலக்கு என்பது ஒவ்வொரு நாளும் நாம் மேற்கொள்ளும் முயற்சி மிகப் பெரிய இலக்கை சிறு சிறு பகுதிகளாக பிரித்து ஒன்றன்பின் ஒன்றாக செய்ய எளிதாகி விடுகின்றது.


இலக்கை எட்ட கூடிய எளிய வழிகள்

 1) இலக்கை பெரிய எழுத்துகளில் எழுதி நம் கண்முன்னால் எப்போதும் படும்படியாக வைத்து அதனை திரும்ப திரும்ப படித்து உள்வாங்கிக் கொள்வது.

2) நம்மை சுற்றியுள்ளவர்களிடம் தமது இலக்கு பற்றி சொல்லுவது இதில் இரண்டு நிகழ்வுகள் நடக்கும் .ஒன்று நமக்காக அவர்கள் உதவுவார்கள் , மற்றொன்று அவர்களிடம் சொல்லி விட்டோமே என்று அதற்காக நாம் இயங்குவது

3) இலக்கை எட்டி விட்டது போலவும் அதனால் ஏற்படும் சந்தோசத்தை அனுபவிப்பது போலவும் அடிக்கடி காண்பது

4) ஒவ்வொரு நாளும் வழக்கத்தைவிட கூடுதலாக நாம் நம் இலக்கை அடைய 0.3 வீதம் கூடுதலாக உழைக்க முடிந்தால் ஓராண்டில் 100% நம் இலக்குக்காக நாம் கூடுதலாக வைத்து விடுவோம். 100% உழைப்பு இருக்கும்போது நூறு வீதம் உயர்வு என்பது உறுதி.

 இவற்றை மாணவர்கள் கடைப்பிடிக்கும் பொழுது அவர்கள் இலக்கை நோக்கி சிறப்பாக பயணிக்க முடியும். இலக்கு நோக்கி பயணிக்கும் போது தான் நமது வாழ்க்கை முழுமை அடையும். எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் இலக்கை நோக்கி பயணிக்கும் போது வாழ்வின் வெற்றியாளர்களாவர்.

க.குவேந்திரா
2ம் வருடம்
கல்வியியல் சிறப்புக்கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்