Sunday, December 02, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சிகுடியாறு கிராமத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவான மாணவனின் ஏக்கம்....!

ads

(கல்லடியூர் ஆனந்த்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு கிராமம் பொத்துவில் பிரதான பாதையின் தாண்டியடிக் கிராமத்திலிருந்து சுமார் 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் போரின் வடுவை தாங்கி நிற்கும் கிராமங்களில் ஒன்று. 1990 களில் இங்கே 420 குடும்பங்கள் வாழ்ந்ததாக இப்பகுதியில் கிராம சேவகராகக் கடமையாற்றிய  இராஜரெத்தினம் (கண்ணன்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் 1997 ஆகஸ்ட் மாதத்தில் நந்தினி மேகராசா தம்பதிகளுக்கு மூத்த மகனானக் பிறக்கின்றார். மேகராசா தனுசன் இவர் தனது ஆரம்பக் கல்வியின் தரம் 1, 2 வகுப்புகளை கற்கின்றார். இவ்வேளையில் உரிமைக்கான போராட்டம் இவர்களது குடும்பத்தையும் அவ் ஊரை விட்டு இடம்பெயர வைக்கின்றது. இவர்கள் மத்திய முகாம் எனும் இடத்திற்கு இடம் பெயருகின்றார்கள் அங்கே 3, 4, 5 வகுப்புக்களை மத்திய முகாம் ஸ்ரீ முருகன் அ.த.க. பாடசாலையில் கல்வி கற்கின்றார்.

தொடர்ந்து போராட்டம் இவர்களை இடம் பெயர வைக்கின்றது. மீண்டும் திருக்கோயில் விநாயகபுரம் கிராமத்திற்கு செல்கின்றார்கள். அங்கே தனுசன் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்கின்றார்.

இவரது திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். பல்வேறு இக்கட்டான சூழலுக்கு மத்தியில் கல்வியே தனது மூலதனம் என்று குறிக்கோளுடன் கல்வி கற்று மருத்துவத் துறைக்குத் தெரிவாகி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கற்க ஆயத்தமாகின்றார்.

இவரது இன்னுமொரு திறமையென்னவெனில் திருக்கோவில் தவிர்ந்த வேறெந்த இடங்களுக்கும் ரியூசன் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. இதற்கு உறுதுணையாக இவரது பெற்றோர் காணப்படுகின்றார்கள். தந்தையிடம் உரையாடிய போது தான் மூன்றாம் ஆண்டு வரையே கல்வி கற்றதாகவும் தான் இழந்த கல்வியை தனது பிள்ளை இழந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

 கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசிலுக்குரிய மாணவர்களது குடும்ப நிலை தொடர்பான ஆராய்விற்காக சங்காரவேல் பவுண்டேசன் ஸ்த்தாபகரும் லண்டன் சிவன் கோயில் அறங்காவலர் சபை பொருளாளருமான  சுகுமார், சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினர்களான உப தலைவரும் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளருமான  லோகராஜா, செயலாளர்   பிறேமானந்தன், பொருளாளர்  குபேந்திரராஜா, மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்   ஹரிகரராஜ், வெல்லாவெளி கோட்டக்கல்விப் பணிப்பாளரும் செட்டிபாளையம் சிறுமியர் இல்லத் தலைவருமான  அருள்ராஜ், செட்டிபாளையம் சிறுமியர் இல்லப் பொருளாளர்   யோகராஜா,    சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்  கந்தசாமி, திருக்கோவில்  பிரதேச செயலக மேற்பார்வை கிராம உத்தியோகஸ்த்தர்   இராஜரெத்தினம் (கண்ணன்) ஆகியோரும் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதன் போது தனுசன் பிறந்து ஆரம்பக் கல்வியைக் கற்ற இடமான கஞ்சிக்குடிச்சாறு பகுதிக்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றோம்.

அவர் தனது அப்பா தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். தான் அந்த இடத்திற்கு அடிக்கடி செல்வதாகவும் குறிப்பிட்டார். அங்கே செல்லும் போது இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று அநாதரவாகக் காட்சியளித்தது. தற்போது அதனை மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதுதான் தனுசன் ஆரம்பத்தில் படித்த கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலயம் ஆகும்.


 இதில் தரம் 1 தொடக்கம் 5 வரை வகுப்புகள் இருந்ததாக தனுசன் குறிப்பிட்டார். தற்போது இங்கே 190 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எனவே இங்கும் என்னைப் போன்ற திறமைசாலிகள் இருக்கலாம் இவர்களுக்காக இப்பாடசாலையை மீண்டும் இயங்க வைத்து இப்பகுதி மாணவர்களுக்கு கல்விக்கான உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்று ஏக்கத்தோடு கூறினார்.
இவரது கோரிக்கையையும் இப்பகுதி மாணவர்களின் கல்வித் தாகத்தையும் ஊடகங்கள் ஊடாக தெரிவிக்கவே எங்களால் முடியும். புலமைப் பரிசில் சிபார்சுக்குழு இவரது நிலைமையையும் தேவையையும் கருத்திக் கொண்டு மாதாந்த புலமைப் பரிசில் நிதியாக ரூபா 8000.00 மாதாந்தம் இவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடவும் தொடர்ந்து இவரது கல்வி நடவடிக்கைகள் முடியும் வரை இந்நிதியை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சிகுடியாறு கிராமத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவான மாணவனின் ஏக்கம்....! Rating: 4.5 Diposkan Oleh: Sayan
 

Top