எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் எத்தனை கதிரைகள் உடைபடப்போகின்றது என தெரியாது

எதிர்காலத்தில் வரவிருக்கின்ற ஏழு நாட்களுக்குள் இன்னும் யாரை பிரதமராக்குவார் என்று எனக்குச்சொல்ல முடியாது. ஏன் யாரிடத்திலாவது ஜனாதிபதி பதவியைக் கொடுத்து விட்டு போவாரா? என்று கூடச்சொல்ல முடியாதென முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் காணியில் கம்பரெலிய திட்டத்தின் மூலம் கலாசார மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

ஒரு வாரத்திற்குள் நாட்டினுடைய பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தருவேன் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். என்ன தீர்வை சொல்லப்போகின்றார் என்று எங்களுக்குத் தெரியாது. நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றது.

எதை எப்படிச்சொன்னாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியைக் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்ற சிறு பிள்ளைத்தனமான ஜனாதிபதியாக நான் இவரைப் பார்க்கின்றேன்.

சிறு பிள்ளைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பது போன்று அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் அதனைப் பற்றி தெளிவான சிந்தனை இருந்தும் கூட, அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருந்ததாலும் கூட இவ்வாறு பிடிவாதமாக இருப்பது நாட்டு தலைமைக்கு நல்லதொரு சகுணமாக எனக்குத் தெரியவில்லை.

இந்நாட்டிலே மாத்திரமல்ல, பல உலக நாடுகளில் இவ்வாறு தலைவர்கள் இருந்தும் எப்படி பெயர் சொல்லாமல் போனார்கள் என்ற வரலாறை நாம் படித்திருக்கின்றோம். இதை எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அரசியலமைப்பு என்பது சாதாரண மனிதனுக்கு மாத்திரமல்ல. இந்நாட்டினுடைய எல்லா பிரஜைகளுக்கும் அரசியலமைப்பு விதிகளுக்கு கட்டுப்பட்டே நடந்து கொள்ள வேண்டும். முட்டாள்தனமாகச் செயற்படுவதென்பது எமது நாட்டுக்கும், சர்வதேசம் எமது நாடு மீது வைத்துக் கொண்டுள்ள அளப்பரிய எதிர்பார்ப்புக்கு மோசடி செய்வதாக இருக்குமென்பது எனது கருத்தாகும்.

எனவே, எதிர்காலத்தில் வரவிருக்கின்ற ஏழு நாட்களுக்குள் இன்னும் யாரை பிரதமராக்குவார் என்று எனக்குச் சொல்ல முடியாது. ஏன் யாரிடத்திலாவது ஜனாதிபதி பதவியைக் கொடுத்து விட்டுப் போவாரா? என்று சொல்ல முடியாது. அரசியலமைப்புக்கு முரணான வகையில் செயற்பாடுகளைச் செய்வார் என நான் நினைக்கின்றேன்.

இந்நிகழ்வுகளிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர்கள், சட்டவல்லுனர்கள் தெளிவான சட்டத்தையும் வழிகாட்டலையும் செய்ய வேண்டுமென்பது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய நிலைப்பாடு என்பதைக் கூறுகின்றோம்.

பாராளுமன்றத்திலுள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குங்கள் என்று சொன்னாலும் நான் பிரதமராக்க மாட்டேன் என்று சொல்லும் வேடிக்கையான மனிதனை நான் இன்று தான் பார்க்கின்றேன்.

இது இந்நாட்டுக்கு ஏற்பட்டுப்போன துரதிஷ்ட வசமான விடயம். எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் எத்தனை கதிரைகள் உடைபடப்போகின்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது.

கல்குடாப்பிரதேசத்திலிருக்கின்ற அனைவரும் கட்சி பேதங்களின்றி ஒற்றுமையாக இருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகின்றேன். நீங்கள் எனக்கு வழங்கிய வாக்குறுதிக்கேற்ப உங்களுக்கு பல உதவிகளை வழங்கியுள்ளேன். எதிர்காலத்திலும் இன்னும் வழங்குவதற்கு உள்ளேன்.

எனவே, நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீ லங்கா சுந்திரக்கட்சி என்று அடிபடாமல், வாக்குவாதப்படாமல் இருங்கள். உங்களுக்கு நாங்கள் ஒரு சிறந்த வழிமுறையை எதிர்காலத்தில் தருவோம் என்று நினைக்கின்றேன்.

எனவே, நீங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு இந்த பிரதேசத்தின் அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் இந்நாட்டில் அரசியல் பிரலயம் இருக்கின்ற சூழலிற்குள்ளும் 110 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டின் மூலம் கலாசார மண்டபத்திற்கு அடிக்கல் வைத்துள்ளோம் என்று சொன்னால், நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் நாங்கள் இந்த காலகட்டத்திற்குள் இந்த இறுக்கமாக சூழலுக்குள் நாங்கள் நடாத்திக் கொண்ட அரசியல் விடயம் தான் என்றார்.

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் ஏ.சீ .ஜிப்ரி கரீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உப தவிசாளர் அஹமட் லெப்பை, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், சட்டத்தரணி எம்.எச்.ராசீக், முன்னாள் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ்.தௌபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.