நிந்தவூர் பிரதேசத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு




(எம்.எம்.ஜபீர்)

தேசியஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் நிந்தவூர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் வாழ்வாதார உபகரணங்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.எம்.அன்ஸார், கே.எம்.எம்.ஏ.ஜாரீஸ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்ஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தையல் இயந்திரம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், கேஸ் அடுப்பு, மீன் பெட்டி, துவிச்சக்கர வண்டி, சில்லறைக் கடை உபகரணம் உள்ளிட்ட பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கம்பெரலிய வேலைத் திட்டத்தின் ஊடாக பள்ளிவாசல்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதுடன், அடுத்த கட்ட பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரினால் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே நிந்தவூர் பிரதேசத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்களுக்கான நிதி கிடைக்கப்பெற்று அதனூடாக வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.