பிரதமரின் செயலாளராக மீண்டும் சமன் ஏக்கநாயக்க நியமனம்



புதிய பிரதமராக இன்று (16) பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அரசியலமைப்பின் 51 (1) பிரிவுக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பதோடு, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சிறிசேன அமரசேகர, பிரதமரின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமன் ஏக்கநாயக்க, இலங்கையின் பொதுநிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியாவார்.

சமன் ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி என்பதோடு தன்னுடைய பொதுநிர்வாக முதுமாணி பட்டப்படிப்பினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் நிறைவு செய்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குடியேற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் (UN-Habitat – United Nations Human Settlement Programme) இலங்கைக்கான பிரதான தலைமை அலுவலராகவும் பணியாற்றியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.