பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களுள் முதன்மையானவர் பாரதியார்.



தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விளைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்கமுடியாத மகாகவியாக சுப்பிரமணியபாரதியார் திகழ்கின்றார். தன் எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிருபித்துக்காட்டியவர். அதனால் தான் சாகும் வரை பேனாவை ஆயுதமாகப்பயன்படுத்தினார் பாரதியார்.

இவ்வாறு ஊடகவியலாளர் அகரம் செ.துஜியந்தன் தெரிவித்தார். மகாகவி சுப்பிரமணியபாரதியாரின் பிறந்தநாள் நினைவு தினம் பாண்டிருப்பில் நடைபெற்றது. பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் அகரம் ஆலோசகர் ஓய்வுநிலை அதிபர் சமாதானநீதவான் இ.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஈழத்தின் மூத்தகவிஞர் மு.சடாட்சரன் கலந்துகொண்டார்.

இங்கு பாரதியின் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தமிழ்த்தாய்மொழி வாழத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அங்கு பேசிய அகரம் அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர் செ.துஜியந்தன்...
பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களுள் பாரதியார் முதன்மையானவர். நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் கொண்டுவாழ்ந்தவர். ஏழ்மையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை தன் நாட்டு மக்களிடையே கொண்டு சென்றவர். சமூக நலனுக்காக பாடுபடவிரும்பும் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாக பாரதியாரின் பங்களிப்பை வணங்கிபோற்றவேண்டும்.

பாரதியார்தான் இந்திய பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர். முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களை துணிச்சலாக வெளியிட்டவரும் பாரதியார்தான். இவர் சித்திராவளி என்ற பெயரில் கார்டூன் இதழ் நடத்த எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை.
பாரதியார் பேசாதபாடு பொருள் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள் ஒழிந்திருக்கும் மிருககுணங்களைப் பற்றிப்பாடினார். சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடினார். சுதந்திர தாகம் பற்றிப்பாடினார், புதுமைப்பெண்கள் பற்றிப்பாடினார், தமிழ் மொழியின் சிறப்புப்பற்றிபாடினார், கண்ணம்மா என் காதலி என்று பாடினார், இயற்கை பற்றிப்பாடினார், இறையைப்பற்றிப்பாடினார், ஓடிவிளையாடுபாப்பாபாடினார், பாஞ்சாலி சபதம் பாடினார், தன்பாட்டினால் எமனையே வாடா காலா உன்னை சிறு புல் என நினைக்கிறேன், எட்டி உதைக்கிறேன் என அழைத்தவர் பாரதியார்.
இன்றை சமூக அவலங்களை அன்றே பாட்டில் பாடிய பாரதியின் சாவிற்கு சென்றவர்கள் பதினான்கு பேர்மட்டுமே. பாரதி செத்தபிறகே பலராலும் அவரின் பெருமையை அறிந்து கொள்ள முடிந்தது. சுவாமி விபுலாநந்தரே பாரதியை மகாகவி பாரதியாகக் காட்டியவர் என்றார்.