Wednesday, December 05, 2018

இன்றைய கல்வி அமைப்பில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம்

ads

இன்றைய கல்வி அமைப்பில் வழிகாட்டுதலும் அதனுடன் இணைந்த அறிவுரைகளும் முக்கிய  இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாணவனும் நல்ல பொருத்தப்பாட்டினைப் பெற்று மனநலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்த உதவும் இயக்கமாக, வழிகாட்டல் அமைகிறது. ஒவ்வொரு மாணாக்கனும் நல்வளர்ச்சி பெறவும், தன் திறமைகளை கண்டறிந்து அவற்றை தனக்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் முறையில் முழுமையாக பயன்படுத்தவும், தனது சமூக சூழ்நிலையுடன் நன்கு பொருந்தி வாழவும் அவனுக்கு உதவும் செயல்முறையாக இவ் வழிகாட்டுதல் விளங்குகிறது. இன்று கல்வியின் நோக்கங்கள் விரிவடைந்துள்ளன. கற்றல் எத்தனை  சிக்கலானது,  அதன் தன்மையை கட்டுப்படுத்தும் காரணிகள் எத்தனை வேறுபட்டவை. கற்பித்தல்  செயல் எத்தனை சிக்கலான அமைப்பு போன்றன பற்றிய கல்வியியல் மனவியல் கருத்துகள், வழிகாட்டுதலின்றி இன்று கல்வியின் நோக்கங்களை அடைய முடியாது என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. மற்றும் மாணாக்கர் பால் குடும்பச் செல்வாக்கு  இன்று குறைந்து காணப்பட்ட நிலையில், குடும்பம் முன்பு மேற்கொண்டுள்ள பல்வேறு பொறுப்புகளை பள்ளி  ஏற்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இப்  பொறுப்புகளில் வழிகாட்டல் பொறுப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆசிரியரது கடமைகளுள் ஒன்றாக வழிகாட்டுதல் காணப்படுகின்றது. எனவேதான் ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்புமிக்க வழிகாட்டி எனக் குறிப்பிடப்படுகிறார்.பல்லாண்டுகலாகவே கற்பித்தலுடன் வழிகாட்டுதல் இணைந்து காணப்பட்டு வந்துள்ளது என்பது கல்வி வரலாற்றை ஆராய்ந்தால் தெளிவாக விளங்கும். நமது கல்வி அமைப்பில் ஆசிரியர் சிறப்புமிக்க வழிகாட்டியாக விளங்கினார், ஆனால் காலப்போக்கில் ஆசிரியர் பணி பாடப் பொருளை மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றே என்ற கருத்து  எழுந்து, அவரது  வழிகாட்டும் பொறுப்பைப் பின்னுக்குத் தள்ளியது. இன்று மீண்டும் புதிய தேவைகளின் விளைவாக கல்வியின் நோக்கங்கள் விரிவடைந்துள்ளன. மாணாக்கர்களின் தனியாள் வேற்றுமைகளைக் கருத்திற்கொண்டு பல்வகைக் கல்வி ஏற்பாடுகள் உருவாக்கப்படுச்.    செற்படுத்தப்பட்டுள்ளன. மாறுபட்டு வரும் உலகச் சூழ்நிலையுடன் சிறப்பான முறையில் இசைவுடன் வாழ மாணவர்களுக்கு  அளிக்கப்படும் அடிப்படை பயிற்சியாக கல்வி  விளங்குகிறது.இத்தகைய விரிவான கல்வி நோக்கம் நன்கு  நிறைவேற வழிகாட்டுதல் கல்வி அமைப்பில் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.  முக்கால வாழ்க்கை ஓரளவு எளிமையானதாகவும் பிரச்சனைகள் அற்றதாகவும் காணப்பட்டது. பல்வேறு சமூகப் பிரச்சினைகள் பற்றிய உணர்வும் அன்று மக்களிடையே காணப்படவில்லை எனலாம். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பல நேரங்களில் பல சிக்கலான பிரச்சனைகளை தோற்றுவித்தது நமது தேவைகள் பெருக்கி  உள்ளன. மக்கள் தொகைப்பெருக்கம், எரிசக்தி பிரச்சனை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற மனித இனத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. இவையாவும் போராட்டங்கள், பதட்டநிலை, மனமுறிவுகள், மனநல குறைபாடுகள் போன்றவற்றை பெருமளவில் தோற்றுவித்துள்ளன. இவற்றை  அகற்றவும் எழாமல் செய்யவும் இவ்வழிகாட்டல் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.இன்றைய உலகில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் வியக்கத்தக்க வளர்ச்சியின் விளைவாக பல்வேறு  வேலைவாய்ப்புகள் எழுந்துள்ளது. இத்தகைய பல்வேறு வாழ்க்கைப் பணிகளுக்குத் தனித்திறமையும் தனித்தனி பயிற்சியும் தேவை. பிற்கால வாழ்க்கைப் பணியாக எதனைத் தேர்ந்தெடுப்பது என்பது குமர பருவத்தினருக்கு குழப்பம் ஏற்பட கூடும். இதில் பெற்றோர்களது உதவியும் போதுமானதன்று. தனது திறமைக்கு அப்பாற்பட்ட பணியினை தேர்ந்தெடுப்பது தோல்வியையும் மனமுறிவினையும் தோற்றுவிக்கும். எனவே தொழில் தேர்வில் மாணவர்களுக்கு உதவும் வழிகாட்டுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் எதிர்காலப் பணிகளுக்கு தனித் திறன்கள் தேவை. இதற்கான, பாடங்களையும் அறிமுக பயிற்சியையும் கல்வி காலத்தில் மாணாக்கர் பெறவேண்டியுள்ளது. பல்வேறு புதிய கல்வி ஏற்பாடுகளில் எதனை தேர்ந்தெடுத்து, எதில் தனது திறன்களும் கவர்ச்சிகளும் முழுமையாகத் தனக்கு  பயனளிக்கும் போன்றவற்றில் கல்வி  காலத்திலேயே மாணவர்களுக்கு உதவி தேவை. இதனை அழிப்பதற்கும் வழிகாட்டுதல் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. அதுமாத்திரமல்லாது மாணாக்கரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் எழும். அவர்களது குடும்பம், சமுதாயம் போன்ற நிலைமைகளில் இவை தென்றல் கூடும். பிரச்சனைகள் அவர்களது கல்வி முன்னேற்றத்தையும் பாதிக்கும். இவற்றை தீர்க்க தேவைப்படும் அறிவு, முதிர்ச்சி ஆகியன பெற்றிராத மாணவர்களுக்கு இத்துறையிலும் வழிகாட்டுல் முக்கியத்துவம்  பெறுகின்றது. எனவே வழிகாட்டுதல்  கல்வியின் தொடக்கம் முதல் இறுதிவரை முக்கியத்துவம் பெறுகிறது. கல்வியின் ஏதாவது ஒரு கட்டத்தில் வழிகாட்டுதல் புறக்கணிக்கப்பட்டால் அது அடுத்தகட்ட வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.மாணவர்களிடையே எல்லா உடல் , மன பண்புகளிலும் தனியாள் வேற்றுமைகள் உள்ளன. இவ்வேற்றுமைகளுக்கு ஏற்ற கல்வி மற்றும் தொழில் தேர்வு அமைதல் சிறப்பான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. வேகமாக மாற்றம் பெறும் இன்றைய சமூகத்துடன் பொருந்திய தேவைகளை சமாளிக்க மாணவர்களுக்கு உதவி தேவைப்படும். நம் நாட்டின் துரித நல்வளர்ச்சிக்குப் பல திறமையான ஈடுபட தேவை. தொழில்களுக்கு ஏற்ற திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்க வழிகாட்டுதல் இன்றியமையாதது. முக்கியமாக நாட்டின் மனித வளத்தை ஒன்றுதிரட்டி பயிற்றுவித்து வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்த வழிகாட்டல் தேவைப்படுகிறது. இன்றைய வாழ்க்கையில் பல்வேறு காரணிகளின் விளைவாக மாணாக்கர்களது நல்வளர்ச்சியில் குடும்பம் போன்ற நிலையங்கள் ஓரளவு செல்வாக்கு இழந்து காணப்படும் நிலையில் இதனை ஈடு செய்திருக்கும் வழிகாட்டுதல் தேவையாகும். இவ்வாறு வழிகாட்டுதல்  நல்ல முறையில் அமைய ஆசிரியர், மாணாக்கர் நல்லுறவு அடிப்படை. இது அன்பு, பரிவு, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைதல் வேண்டும்.  வழிகாட்டுதலில் ஒவ்வொரு மாணாக்கன் பற்றிய எல்லா விபரங்களும்    தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனிடமும் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.பல்வேறு கல்வி நிலையங்களில் வழிகாட்டலின் முக்கியத்துவத்தை நோக்கலாம், இதில் முதலாவதாக மழலையர் பள்ளி(Nursery school) நிலையினை நோக்கலாம். மழலையர்பள்ளி நிலையிலும் (3-5வயது) வழிகாட்டல் தேவைப்படுகிறது. குறிப்பாக சிறு குழந்தை தனது குடும்பச் சூழ்நிலையை விட்டு வெளியே வருகிறது, இந்நிலையில் அது மன வளர்ச்சிக்கு குழப்பமடைந்த பிறருடன் கூடி செயற்படும்  செயற்பாடுகளில் பயிற்சியும் இருக்காது. பலதரப்பட்ட குடும்பப் பின்னணியுடைய குழந்தைகள் முறையான பள்ளிகளில் கல்விக்கு முற்பட்ட (Pre School )  இம்மழலையர் பள்ளிகளில் இடம்பெற்றிருப்பர். பெற்றோர்களது வழிகாட்டுதலை இப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்கின்றனர். குழந்தைகளை நன்கு புரிந்து கொண்டு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு முறைகள் வழியே பல கருத்துக்களையும் திறன்களையும் அவர்களிடையே வளர்ப்பது ஆசிரியர்களின் கல்விசார் வழிகாட்டுதலில் அடங்கும். குழந்தைப் பருவ வளர்ச்சி செயல்களில் தேர்ச்சி பெற அவர்களுக்கு உதவுதலும் அன்பு, பரிவு, காப்புணர்ச்சியளித்தல், தனி கவனம் செலுத்துதல் போன்றன அடங்கிய பள்ளி சூழ்நிலையை உருவாக்கும் ஆசிரியர்கள் கல்வி வழிகாட்டுதலின் கூறுகளாகும்.அடுத்ததாக தொடக்கப்பள்ளி நிலை குறித்து நோக்கும்போது, தொடக்கப்பள்ளி நிலை பருவத்தினர் இப்பருவ இயல்புகளின் அடிப்படையில் இவர்களது வளர்ச்சி தேவைகளுக்கு ஏற்ப இங்கு காணப்படும். இந்நிலையில் கல்வி வழிகாட்டுதலின் முக்கிய நோக்கங்களாக நல்ல உடல், மன, சமூக, பழக்கவழக்கங்கள் உருவாக குழந்தைகளுக்கு உதவுவது, அடிப்படையான தாய்மொழித் திறன்கள், அறிவியல், வரலாறு போன்றவற்றுடன் தொடர்புடைய கற்றல் திறன்கள் போன்றன வளர உதவுதல், கல்வியின் தேவை பற்றிய நன்மனப்பான்மையை உருவாக்குதல், கற்றலில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் தடைகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், அன்பும் பரிவும் அளித்து குறைபாடுகளில் ஈடு செய்தல் போன்றன வழிகாட்டலின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.அடுத்ததாக உயர்நிலைப் பள்ளி , உயர்நிலைப் பள்ளி நிலையில் கல்வியில் வழிகாட்டுதலின் நோக்கங்கள் என்ற ரீதியில், நம் நாட்டின் கல்வி அமைப்பு பற்றி ஒவ்வொரு மாணாக்கனும் அறிய உதவுதல் , எதிர்காலத்தில் தங்களது கல்வி, தொழில் ஆகியன பற்றி சிந்தித்து தங்களது திறமைகள்,ஆர்வங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுத்தலில் உதவுதல் , நல்ல பழக்கவழக்கம் ஒவ்வொரு மாணவரிடமும் ஏற்படவும் ,எந்த பாடங்களை கற்றால் பிற்காலத்தில் எத்தகைய மேற்படிப்பு அல்லது தொழிலுக்கு உதவுதம் போன்ற அறிவு பெறவும் இந்நிலையில் கல்வி வழிகாட்டுதல் துணைசெய்கிறது.  தங்களது திறமைகள், கவர்ச்சிகள் போன்றன பற்றிய உண்மை அறிவை மாணவர்கள் பெறும் நிலையை ஏற்படுத்துதல் ,இவ்வறிவு மேல்நிலை கல்வி, உயர்கல்வி ஆகிய நிலைகளில் கல்வி பயில மிகவும் தேவை. உயர்கல்வி, தொழில் சார்பில் கல்வி, பல்தொழிற்கல்வி போன்றவற்றுக்கான வாய்ப்புகள் பற்றிய அறிவும் இந்நிலையில் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.மேலும் மேல்நிலைக் கல்வி நிலையினை நோக்கும் போது, உயர்நிலைக் கல்வி வழிகாட்டல் நோக்கங்களின் தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது. உயர்கல்வி  வாய்ப்புகள்,  வேலைவாய்ப்புகள் எதிர்கால வாழ்க்கை  பிரச்சனைகள் போன்றவற்றுடன் இணைந்து இப்போது கல்வி வழிகாட்டல் அமையும். எனவேதான் இவ்வாறான மேல்நிலைக்கல்வியில் வழிகாட்டுதலின் முக்கியமானதும் மாணாக்கரது செயற்பாடுகளிற்கும் அடித்தளமாக அமைகின்றன எனவும் குறிப்பிடலாம்.இறுதியாக உயர்கல்வி நிலையினை சற்று நோக்கலாம்.உயர் கல்வி நிலையில் கல்வி வழிகாட்டல் மாணாக்கர்கள் நோக்கமின்றி கல்லூரி செல்லும் போக்கை தடுக்கவல்லது. தங்களது திறமைக்கு ஏற்ற பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கவும் இது உதவும். நூலக வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுதல் ,விரிவுரைகளிலிருந்து சிறப்பாகப் பயன் பெறுதல் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதும், கல்லூரிகளில் கல்வி வழிகாட்டுதலின் பொறுப்பு. பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு உதவ தனி அலுவலகங்கள் இன்று உள்ளன . உயர்நிலைக் கல்வியை வழிகாட்டுதலின் முக்கியமானது மாணவர்களுக்கு எதிர்காலத்தை  மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது எனவும் குறிப்பிடலாம்.சாராம்சமாக தங்களது நிறைகுறைகளை மாணவர்  ஒவ்வொருவரும் உணர்ந்து நற்பண்புகளை முழுமையாக வளர்த்துக்கொள்ளவும், குறைபாடுகளை புரிந்துக்கொள்ளவும், அவர்களுக்கு தங்களது கல்வியில் சிறப்பான பயனை பெற கல்வி வழிகாட்டுதல் அவர்களுக்கு உதவுகின்றது. பல்வேறு பள்ளிப்பாடங்களில் திறமை, கவர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப பாடங்களைத் தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற அவர்களுக்கு உதவுவது ஆகியன கல்வியில் வழிகாட்டுதலில் நோக்கங்களாக காணப்படுகின்றது. எனவேதான் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இன்றைய ஒவ்வொரு ஆசிரியர்களும் சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

       
 உ.முரளிதரன்,
இரண்டாம் வருடம் சிறப்புகற்கை, 
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

இன்றைய கல்வி அமைப்பில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் Rating: 4.5 Diposkan Oleh: Sayan
 

Top