கன்னிப்பெண்கள் வேண்டுதலுக்கு உரிய பலன் தரும் திருவெம்பாவை

இந்துக்களுக்கு மார்கழித் திங்கள் நற்பெருவாழ்வை நல்கும் மாதமாகும். மார்கழி ஒரு தேவாம்சம் பொருந்திய மாதம். ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் தேவர்களுக்கு இராக்காலம் ஆகும். ஆகவே மார்கழி விடியற்காலைப் பொழுதாகவுள்ளது.

இரவு போய் பகல் வரையுள்ள வைகறைப் பொழுது ஒரு சந்தியாகாலம். இந்துக்கள் விடியற்காலையிலே துயில் நீங்கி, ஸ்நானம் செய்து, சந்தியா வந்தனம், சிவபூஜை ஆகியவற்றை மேற்கொண்டு கோயில் தரிசனம் மேற்கொள்கின்றனர். மாணிக்கவாசகப் பெருமானால் பாடப்பட்ட திருவெம்பாவை பாடல்கள் தோழியர்கள் ஒருவரை ஒருவர் துயில் நீங்கி எழுமாறு அழைக்கும் பாடல்களாகும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவை காலமாகும்.திருவெம்பாவை இன்று ஆரம்பமாகிறது.

இக்காலத்தில் அதிகாலையிலே எல்லாக் கோயில்களிலும் அபிஷேகம், பூசை என்பன நடைபெறுகின்றன. அதன் பின்னர் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு ஒவ்வொரு பாடல் முடிவிலும் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து கற்பூர ஆராத்தி காண்பிக்கப்படுகின்றது. மும்மலங்களினின்றும் விடுபட்டு ஆன்ம ஈடேற்றத்துக்கான முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை திருவெம்பாவை பாடல்கள் எடுத்தியம்புகின்றன. திருவெம்பாவை காலத்தில் பல கோயில்களில் திருவாதவூரடிகள் புராணம் பாடப்பட்டு வருகின்றது.

திருவெம்பாவை என்பது திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்துள்ள திருவாசகத்தில் நடுநாயகமாகத் திகழும் ஒரு பகுதி ஆகும்.

ஒவ்வொரு பாடலும் ‘ஏலோ ரெம்பாவாய்’ என முடியும், இருபது பாடல்களைக் கொண்டது, சைவ மரபினர் அனைவரது வீடுகளிலும் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி வைகறைப் பொழுதில் பக்தியுடன் ஓதப் பெறுவது, ஆதியில் தாய்லாந்து நாட்டிலும் திருவெம்பா பாடப்பட்டு திருவிழா நடைபெற்றதாகவும் அறிய முடிகின்றது.

பண்டைக் காலத்தில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் ‘பாவை நோன்பு’ என நோன்பு நோற்று வந்தனர். அந்த நோன்பிற்கு இப்பாவை பாடல்கள் துணைபுரிந்தன எனலாம்.

இந்த நோன்பு மார்கழி திங்களில் திருவாதிரைக்குப் பத்து நாட்களுக்கு முன் தொடங்கி திருவாதிரையன்று முடிவு பெறும். ஐந்து வயது முதல் பதினெட்டு வயது வரையுள்ள பெண் பிள்ளைகள் இந்த நோன்பிற்குரியவராவர். இவர்கள் துயிலெழுந்து வீடு வீடாகச் செல்வர். அனைத்து கன்னியரும் துயிலுணர்ந்த பின் ஒன்று சேர்ந்து நீர் நிலைக்குச் செல்வர். அம்மை அப்பர் புகழ்பாடிக் கொண்டே நீராடுவர். பிறகு இறைவனுடைய சக்தி எனவும், திருவடி எனவும் சாஸ்திரங்கள் கூறும் இறைவன் திருவருளைக் கெளரி என்று நாமமிட்டு வழிபடுவர்.

இவ்வாறு பத்து நாட்கள் தொடர்ந்து வழிபடும் வழிபாட்டால் தாம் விரும்பும் நற்கணவனை பெறுவர்.

ஆண்டாள் திருப்பாவையில் முப்பது பாடல்கள் காணப்படுவதால் மார்கழித் திங்களில் வரும் முப்பது நாட்களும் ஒவ்வொரு பாடல் ஓதுவதற்கு உரியதாகவுள்ளது.

திருவெம்பாவையில் இருபது பாடல்களே இருந்ததால் பத்து பாடல்கள் காணாமல் போயின என்பது சிலர் கருத்தாகும்.

திருவெம்பாவின் இறுதிப் பாடலான இருபதாம் பாடல் போன்றியுணர்த்தி முடிவுபெறும் எனலாம் ‘ஏலோ ரெம்பாவாய்’ என்பதில் ஏல் ஓர் என்பன சில விசேட அர்த்தங்களைக் குறிக்கின்றன எம்பாவாய் என்பது அம்பிகையாம் கௌரியை விளிக்கும். எனவே ‘ஏலோ ரெம்பாவாய்’ என்பது கௌரியை நினைவுபடுத்தும் மந்திரமாகவும் கொள்ளலாம். திருவெம்பாவில் முதல் எட்டுப் பாடல்கள் கன்னிப் பெண்கள் தம்முள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்புவதை உணர்த்துபவன.

ஒன்பதாம் பாடல் தமக்குரிய நற்கணவர் இயல்பு கூறி அத்தகையவரை தமக்கு அருள வேண்டும் என்ற வேண்டுதலை உணர்த்துவதாகும். பத்தாம் பாடல் இறைவன் புகழ் உறுதியிட்டு கூறத்தகையது அல்ல என உரைப்பது. மங்கையர் வேண்டுதலைக் கூறுவதும் இதில் அடங்கும்.

சைவசிந்தாந்த தலைமைச் சாஸ்திரம் எனப்படும் சிவஞான போதத்திற்கு ஊன்றுகோலாக பரிணமித்திருப்பது திருவெம்பாவை. கன்னிப் பெண்களின் வேண்டுதலுக்கு துணை போவதும் திருவெம்பாவை.

அருணா தருமலிங்கம்
வந்தாறுமூலை