இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றவை

சரத் பொன்சேகா, 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு எதிராக ஆங்காங்கே சென்று பல்வெறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த விடயம் குறித்து நான் எழுத்து மூலம் சபாநாகருக்கு அறிவித்தேன். இந்த வகையில் அது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்துவார் என, கருதுகிறேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்:-

தற்போது அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கருத்துரைத்த சரத் பொன்சேகா,

ஒவ்வொரு நாளும் அவர் கொலை செய்திடுவார் இவர் கொலை செய்திடுவார் என, பயந்து வாழ மாட்டேன். அவ்வாறு பயந்து வாழ்வது ஒரு வித நோயாகும் என குறிப்பிட்ட அவர், நாம் அரசமைப்பை மாற்றியாவது, அமெரிக்காவைப் போன்று பிரதான அதிகாரிகளை மனநோய் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான முறையொன்று தயாரிக்க வேண்டும் என்றார்.


--------------------------------------------

சால்ஸ் நிர்மலநாதன் எம்.பி

ஜனாதிபதி எடுக்கின்ற தீர்மானங்களினாலேயே நாட்டில் இவ்வாறான நிலை  ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியே இது ஆரம்பமானது. இவ்வாறான நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

அரசாங்கம் அமைக்க சதித்திட்டம் தீட்டுவோரின் ஒரு செயற்பாடே, மட்டகளப்பில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்த சதித்திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய தினமே இடம்பெற்றது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்தேன்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். இது தவறாகும். மாவீரர் தினத்தை அனுஸ்டித்த பெற்றோருக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இருவரை கைது செய்தனர் என்றார். 

ஜோன் அமரதுங்க எம்.பி

அரசமைப்பின்படி பிரதமர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில், அடுத்த அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. மாலை 5 மணிக்கு முன்னர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எதிர்வரும் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தை சுற்றிளைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அன்று சபாநாயகரை சபைக்குள் வரவிடாது குழப்பம் விளைவித்தவர்கள் இதனையும் செய்வார்கள்.

நாம் நீதிமன்றத்தை பாதுகாக்க வேண்டும்.பொலிஸாரும், இராணுவத்தினரும் இதற்கு இடமளிக்கக்கூடாது. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க  சபையில் தெரிவித்தார்.

--------------------------------------------------------------------

நாடாளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய  அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து, சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

குறித்த விவாதம் இன்று மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------- 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கு, நிதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை கடைபிடிக்காது செயற்பட்டு வருகிறார் எனவும் குறிப்பிட்ட அவர், இரண்டு, மூன்று தடவைகள் கூறியும் அதனை கவனத்தில் எடுக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

----------------------------------------------------- 

விஜித ஹெரத் எம்.பி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல்வாதிகளுக்கும், நீதிமன்றில் பிணையில் விடுதலையானவர்களுக்குமே அமைச்சுப் பதவிகளையும், தலைவர் பதவிகளையும் வழங்கினார் என, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் இன்று (05), உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் அன்று சபாநாயகர் ஆசனத்தை சுற்றிவளைத்து, மிளகாய் தூள் தாக்குதல் நடத்தினர் என்றார்.

------------------------------------------------------

நளின்த ஜயதிஸ்ஸ எம்.பி

ஜனாதிபதி அரசமைப்புக்கு அமைய நடந்துக்கொள்வாராயின், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியை தீர்க்கலாம்.

​அரசமைப்பை ஒருபுறம் வைத்துவிட்டு செயல்படும் ஜனாதிபதியினால், உலக நாடுகளில் இலங்கைக்கு இருந்த வரவேற்று இல்லாது போயுள்ளது.

சிலருக்கு மஹிந்த ராஜபக்ஷவே இன்னும் நாட்டின் பிரதமர். சதித்திட்டத்தின் பக்கம் இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

--------------------------------------------------

அநுரகுமார திஸாநாயக்க எம்.பி

நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் ஒன்று நடத்தப்படவிருந்தது. அதனை வாபஸ் பெற்றனர். அடுத்து செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாகும். தற்போது நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இடமளியாது ஒரு சிலர் எழுந்து பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதற்கு இடமளியாதீர்கள் என, சபாநாயகரை கேட்டுக்கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

அவ்வாறாயின் நாம் ஒத்திவைப்பு விவாதத்துக்கு செல்வோம் என்றார்.

---------------------------------------------

நளின் பண்டார எம்.பி

நாடாளுமன்றத்துக்கே நாட்டின் நிதி சம்பந்தமான பொறுப்பு உள்ளது. நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் நிதியை பயன்படுவதாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

26 ஆம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதும், பொலிஸ்மா அதிபர் சென்று மரியாதை செலுத்தி அவருக்கு பாதுகாப்பு வழங்கினார். நாடளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை குறைத்தனர்.

நாட்டில் பிரதமர் ஒருவர் இல்லாத போது, பிரதமருக்கான பாதுகாப்பு பிரிவு தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை மாத்திரம் வழங்குங்கள்.

------------------------------------------------ 



ஜே.சி.அலவத்துவல எம்.பி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுகளின் செயலாளர்களை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளார். அது அரசமைப்பை மீறிய செயலாகும். ஜனாதிபதிக்கு தனது அமைச்சுகளின் செயலாளர்களுக்கு மாத்திரமே ஆலோசனை வழங்க முடியும். தற்​போது நாட்டில் அரசாங்கம் என்பது இல்லை.

---------------------------------------------------

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் பங்குபற்றலின்றி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற அமர்வு,  இன்று(05), காலை 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. அதற்கு முன்னதாக காலை 9.30 க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற அமர்வை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.