அமைச்சரவை பட்டியலை ஜனாதிபதியிடம் கையளிக்க தயாராகிறது ஐ.தே.க

புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று(சனிக்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்கவுள்ளமையினை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளைமறுதினம் திங்கட்கிழமை இடம்பெறலாம் என்றும் எதிர்பாார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்களும் இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

இன்று அமைச்சர்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கையளிப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.