வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 29 மாணவர்களை கௌரவிப்பு





(ஜெ.ஜெய்ஷிகன்)

கல்குடா வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்றுக் கோட்டப் பாடசாலையான வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 29 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று(07) காலை நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி , விசேட அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.அனந்தரூபன், கோட்டக்கல்விப் பணிப்பபாளர் நா.குணலிங்கம், பிரதி அதிபர்களான திருமதி.சு.அருந்ததி, எஸ்.பாலமுரளி, கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் க.ஜெகதீஸ்வரன், பழைய மாணவர் சங்க செயலாளர் பு.சுதன் மற்றும் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

துறைமுக வீதி சந்தியிலிந்து பாண்ட் வாத்தியம் முழங்க நடைபவனியாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் அதிதிகள் புடைசூழ அழைத்து வரப்பட்டதுடன் வளாக நுழைவாயிலில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டதன் பின்னர் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி , விசேட அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.அனந்தரூபன், கோட்டக்கல்விப் பணிப்பபாளர் நா.குணலிங்கம் ஆகியோர் மாணவர்களது சாதனைகளை பாராட்டிப் பேசியதுடன் பல்கலைக் கழகத்திலும் உங்கள் சாதனைகள் மிளிர  வேண்டும் என வாழ்த்திப்பேசினர்.