மகாபொல சகாய நிதியத்தினூடாக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்படும் – ரவூப் ஹக்கீம்



மகாபொல சகாய நிதியத்தினூடாக வழங்கப்படுகின்ற மானியத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டியா தேர்தல் தொகுதி, கொட்டராமுல்ல மின்ஹாஜ் அரபுக் கல்லூரிக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்து, மத்ரஸா மற்றும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மகாபொல நிதியத்தினூடாக நாட்டிலுள்ள எல்லா கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளை இணைத்து சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரு பெருபேறுகள் வெளியாகிய உடனே அவர்களுக்கான உயர் கல்வி வசதிகள், அவற்றை தெரிவு செய்வதிலுள்ள சிக்கல்கள், தொழில்வாய்ப்புகளோடு சம்பந்தப்பட்ட கல்விச் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டுமென்ற விவகாரங்களை தெளிவுபடுத்துகின்ற கருத்தரங்குகளை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றேன்

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் வசதிகுறைந்த மாணவர்களுக்கும் மகாபொல சகாய நிதியத்தினூடாக கொடுக்கப்படுகின்ற மானியத்தை இரு மடங்காக கூட்டியிருக்கின்றோம்.

மேலும் தற்போது இலங்கை உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தினூடாக (SLIATE) இதுவரை 1500 ரூபா வழங்கப்பட்டிருந்தை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆறாயிரம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இது தொடர்பாக அறிவதற்கு இணையத்தளமொன்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கு பணித்துள்ளேன்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.