பிளேட்டோவின் கல்வி சிந்தனைகள்





கிரேக்கத்தின் தலைசிறந்தவர்களுள் தத்துவம், கலை, அறிவியல், கணிதவியல் போன்ற துறைகளுள் தனது புலமையினை
வெளிக்காட்டியவராக பிளேட்டோ காணப்படுகின்றார். இவர் தனது திறமையினை கல்வித்துறையிலும் வெளிக்காட்டத் தவறிவிடவில்லை. இதனால் அனைத்திலும் தலைசிறந்து விளங்கிய ஒருவராக பிளேட்டோ திகழ்ந்தார். எதென்ஸ் நாட்டில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த பிளேட்டோ சோக்கிரட்டீஸின் இலட்சியவாத சிந்தனைகளால் கவரப்பட்டு அவரை தனது ஆசிரியராக கொண்டு தன்னை ஒரு இலட்சியவாதியாக இனங்காட்டினார். இலட்சியவாதத்தின் வழியில்சென்ற பிளேட்டோ கல்வித்துறையில் ஆற்றிய பங்களிப்பானது அளப்பெரியது எனலாம்.

அந்தவகையில் ஆசிரியராகவும் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கிய பிளேட்டோ 'அக்கடமியா' எனும் கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். இவருடைய அக்கடமியா நிறுவனத்தில் கல்வி பயின்றவரே அரிஸ்ரோட்டில் எனும் மாபெரும் தத்துவவியலாளர். இவரைப் போன்று பல அறிவியலாளர்களை உருவாக்கிய பெருமை பிளேட்டோவினையே சாரும். அந்தவகையில் கல்வி தொடர்பாக பிளேட்டோ பல்வேறு விதமான சிந்தனைகளை வெளியிட்டார். இது தொடர்பாக 'குடியரசு', 'சட்டங்கள்' என்ற தனது நூல்களில் பல கருத்துக்களை கல்வி தொடர்பாக வலியுறுத்தினார். குழந்தைகளுடைய வளர்ப்பு முறை, கல்விச் செயற்பாட்டுடன் இணைந்த இணைப்பாடவிதான செயற்பாடு, அழகியற்கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, ஆண்பெண் கூட்டுக் கல்விமுறை, தேடிக்கற்றல் கொள்கை, ஆசிரியர்வாண்மை, கல்வியில் வர்க்க ரீதயான வேறுபாட்டுத்தன்மை போன்றவை தொடர்பாகவும் பல கருத்துக்களை சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளுடைய வளர்ப்பு முறை தொடர்பாக பிளேட்டோ குழந்தைகளினுடய உள்ளமானது தூய்மையானதும் நல்லதை கொண்டதுமாகும். அதனை தவறான வளர்ப்பு முறையினாலும் அணுகுமுறையினாலும் ஆசிரியர் மாசுபடுத்தி விடுதல் கூடாது என்று கூறுகிறார். ஒரு குழந்தையினுடைய உள்ளமானது வெற்றுக் குடமாகவே காணப்படும். அதில் நன்மையான விடயங்களை உள்ளடக்கம் போதே அக்குழந்தை நற்பிரஜையாக வளரமுடியும். அது பெற்றோரினதும் ஆசிரியரினதும் பொறுப்பாகும். பாடசாலைச் சூழலும் வீட்டுச் சூழலும் குழந்தைக்கு நல்ல விடயங்களை கற்றுக் கொடுத்தல் அவசியம் என்கின்றார். அத்துடன் குழந்தையானது தாயினுடைய கருவில் இருக்கும் போதே கற்றுவிடுவதாகவும் அங்கேயே குழந்தை தனது கல்வி செயற்பாட்டினை முதலில் ஆரம்பிக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். குழந்தையானது அறிவுபூர்வமானதாக பிறக்க வேண்டும் எனின் 'தாயானவள் குழந்தை கருவில் இருக்கும்போதே நல்ல இன்னிசையினை கேட்டு மகிழ்தல், நல்ல நூல்களை வாசித்தல் போன்ற விடயங்களை கையாள்வது அவசியம் என்கின்றார்.

அடுத்ததாக பிளேட்டோ உடற்கல்வி தொடர்பாகவும் வலியுறுத்துகிறார். ஒரு
மாணவன் கல்வி கற்பதற்கு அறிவு மட்டும் அவசியமானதன்று. உறுதியான உடலும் உறுதியான உள்ளமும் அவசியம் என்கின்றார். உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டுக் காணப்படுதல், ஆசிரியரால் மன உழைச்சலுக்கு ஆளாதல், வீட்டுச் சூழலில் முரண்பாடான தன்மை காணப்படல் போன்ற பாதகமான விளைவுகளுடன் ஒரு மாணவனால் சிறந்த முறையில் கல்வி கற்க முடியாது. இதற்கு மாணவனது ஆரோக்கியமும் மனமானது ஒருநிலைக்குட்பட்டு மகிழ்ச்சிகரமாகவும் உறுதியாக அமைதல் அவசியம் என்பது பிளேட்டோவின் கருத்தாகும். பிளேட்டோ வாழ்க்கை நீடித்த கல்வி தொபாக வலியுறுத்துகின்றார். கல்வியானது ஒரு முடிந்துவிடும் செயற்பாடு அல்ல பாடசாலைக் கல்வி முடிந்தவுடன் புதையுண்டு போகும் விடயமாக கல்வியினை நாம் பார்க்கக் கூடாது. கல்வியில் எவ்வளவு விடயங்களை கற்கமுடியுமோ அனைத்தினையும் வயது ஒரு தடையில்லை என்று எண்ணி கற்பது அவசியம் என வாழ்க்கை நீடித்த கல்வி தொடர்பாக சுட்டிக்காட்டினார்.

மனிதன் பூரணத்துவம் அடைய உடற்பயிற்சி, உளப்பயிற்சி, இசைப்பயிற்சி போன்றவை அவசியம் எனக் கூறி கல்வியுடன் இணைந்த இணைப்பாடவிதான செயற்பாட்டிற்கு முக்கியத்தும் அளிப்பதனை காணமுடிகிறது. அழகியற்கல்வி தொர்பாக பிளேட்டோ கூறுகையில் அழகு என்பது உள்ளத்தையே அடிப்படையாகக் கொண்டது. கலையாக்கங்கள் வடிவங்கள் என்று குறிப்பிட்டு அவை என்றும் நிலைத்துள்ள 'தாழ்ந்த நிலைப் பிரதிகளாகவும், பிரதிகளின் பிரதிகளாகவும் அமைதலை வெளிக்காட்டினார். கற்றல் என்பது மகிழ்ச்சிகரமான செயற்பாடாக இருக்க வேண்டுமே தவிர ஒறுத்தற் செயற்பாடாக அமைதல் கூடாது எனக் குறிப்பிட்ட பிளேட்டோ ஆண்பெண் இருபாலாரும் இணைந்து கற்கும் கூட்டுக் கற்றலை வலியுறுத்தினார். இவருடைய கூற்றின் உள்நோக்கமானது ஆண் பெண் வர்க்க வேறுபாட்டினை தகர்ப்பது மட்டுமன்றி பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதுமாகும். ஏனெனில் தனிப்பட்ட ஆண்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு பெண்பிள்ளைகளைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் வௌ;வேறு விதமான சிந்தனைகள் உருவாக வாய்ப்புண்டு. அதனால் ஆண்பெண் கலவன் பாடசாலையில் கூட்டுக் கற்றலை மேற்கொள்வதனால் அவ்வாறான விடயங்கள் தடுக்கப்படுவதுடன் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் பார்க்கும் நிலை உருவாகும். இவ்வாறு பிளேட்டோ கூட்டுக் கற்றலை வலியுறுத்துகின்றார்.

பாடசாலைகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் இடமாகவும் அமைதல் அவசியம் என்றதுடன் பாடசாலைகள் உளம் சார்ந்த உடற்கலை அரங்கமாகவும் விளையாட்டுக் களமாகவும் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றார். 'உடல்நோய் என்பது அறியாமையில் தோற்றுவிக்கப்படுவதுடன் அறியாமை நீங்கும் போது உறுதியும் வலுவும் பெறும் என்பது பிளேட்டோவின் முன்மொழிவாகும். வினாக்கள் வாயிலாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது பல்வேறு விதமான உண்மைகளை தரிசிக்க முடியும் என்கின்றார். ஏனெனில் ஒவ்வொரு மனிதனது எண்ணங்களும் வௌ;வேறுவிதமானவை ஒவ்வொருவரும் தம்முடைய உண்மைகளைக் கூறும் போது அங்கே பல்வேறு வதமான உண்மைகள் கிடைக்கின்றன. இதனூடாக தேவையான விடயங்களை எம்மால் பெறமுடியும் என்று கூறி குழுச் செயற்பாட்டில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் வாண்மை தொடர்பாக பிளேட்டோவின் கருத்தாக ஆசிரியர் இருள் புலத்திலே ஒளியை ஏந்திச் செல்பவராகவும் வழிகாட்டியாகவும் பொருண்மை கொண்ட வினாக்களை விடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். 'ஒளிகாலும் விளக்கில் அறியாமை எனும் இருளை உடைத்துச் செல்லும்' எனக் கூறி ஆசிரியரை மேலான இடத்தில் வைத்துப் பார்க்கின்றார். இவருடைய கல்விக் கருத்துக்களில் வர்க்கவேறுபாடு அடிப்படையில் கல்வி வழங்குதல் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. மனிதார்கள் சமூகத்தில் வௌ;வேறுபட்ட பணிகளைச் செய்ய வேண்டியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஏற்ப கல்வி நிலையினை உலோக வடிவில் வடிவமைத்தார். தங்க நிலையில் அரசை நிர்வகிக்கும் ஆற்றலுடையவர்களையும், வெள்ளி நிலைப்பட்டவர்களை வர்த்தகம், இராணுவ செயற்பாடுகளுக்கும், இரும்பு நிலையில் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் கல்வி வழங்குதல் வேண்டும் எனக் கூறினார். இவர் ஓர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவரராக காணப்பட்டதால் ஏழைகளின் கல்வி நிலை பற்றி கவனம் செலுத்தவில்லை. அத்துடன் ஏழு தொடக்கம் இருபது வயது வரையுள்ள அனைவரும் கட்டாயக்கல்வி மற்றும் இராணுவப்பயிற்சி, தொழிற்கல்வி போன்றவையும் இவரது சிந்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவ்வாறு பலதரப்பட்ட கல்விச் சிந்தனைகளை முன்வைத்த பிளேட்டோ பலவாறான எதிர்மறையான கல்விச் சிந்தனைகளையும் கூறியுள்ளார். தொழிலாழி வர்க்கத்தினருக்கு சிறிதளவு கல்வி இலக்கியக்கல்விக்கு எதிர்மறையான போக்கினை வழங்கியமை. கருத்துக்களுக்கு அதியுயர் முக்கியத்துவம் அளித்து பொருள்சார் நிலைமைகளுக்கு நடப்பியல் வாழ்வும் பிற்தள்ளப்படல், ஆசிரியர்களுக்கு நடுநாயப்படுத்தும் கல்வியே அவரால் முன்மொழியப்படல், விஞ்ஞான தொழினுட்ப கல்வித்திட்டங்கள் புறக்கணிப்பு, தனியாள் சிறப்புத்தேர்ச்சிக்கு போதுமான இடமளிக்காமை போன்றன இவரது இலட்சியவாத சிந்தனையில் குறைபாடுகளாக காணப்படுகின்றன. எவ்வாறெனினும் இன்றைய கல்விப் போக்கிற்கு வித்திட்டவராக பிளேட்டோ காணப்படுகின்றார் என்றால் மிகையாகாது. இவரதுவிடயங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வித்திட்டங்கள் உருவாக வழிவகுத்ததும் குறிப்பிடத்தக்கது.


பொ.சர்ஸ்னி
2ம் வருடம், சிறப்பு கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கலைகலாசாரபீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்.