மாற்றமும் கல்வியும்.




'மாற்றம் ஒன்றே மாறாதது'. எனும் மாபெரும் தத்துவத்தினை கூறியவர் ஹெராகிளிடஸ். இவர் கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவஞானிகளுள் ஒருவர். இவருடைய தத்துவத்திற்கு இணங்க மாற்றம் எப்போதுமே நடந்து கொண்டேயிருக்கின்றது. நிமிடத்துக்கு நிமிடம் நாளுக்கு நாள் வருடத்திற்கு வருடம் நூற்றாண்டுக்கென மாற்றம் தொடர்ச்சியாக இடம் பெற்ற வண்ணமே உள்ளது. மாற்றத்தினை யாராலும் தடுத்துவிட முடியாது. மனித வாழ்விலும் சரி இயற்கை நிகழ்விலும் சரி எல்லாவிடயங்களும் காலத்தின் போக்கிற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்கின்றது. அந்த வகையில் சமூகமாற்றம் என்பதற்கு பலவித அர்த்தங்களை வழங்கமுடியும்.

சமூகமுன்னேற்றம்,சமூகபடிமலர்ச்சி,சமூக ஒழுங்கு, சமூகமறுமலர்ச்சி என்னும் சமூகமாற்றத்தினை குறிப்பிடமுடியும். காலத்தின் கட்டாயமாக மாற்றம் நிகழ்கின்றது. சமூகமாற்றமானது மனிதனை நல்ல பாதைக்கு இட்டுச்செல்லும் சிறந்த விடயம் என்றாலும் கூட மனித குலத்தினை தீமைக்கு இட்டுச் செல்லவும் தவறிவிடவில்லை.

இவ்வாறான ஒரு தொடர்ச்சியான சமூகமாற்றம் முன்னேற்றகரமாக நிகழ கல்வியின் பங்களிப்பானது ஆதிமனிதன், விவசாயயுகம், விஞ்ஞானயுகம், தொழினுட்பயுகம் என்று பல யுகங்களை எட்டியுள்ளது என்றால் அது கல்வியில் மட்டுமே சாத்தியமாகும். மனிதன் அறிவுபூர்வமாக வாழ்க்கைக்கு அத்திவாரமிட்டதும் கல்விச் செயற்பாடாகும். மனிதன் மாற்றம் என்ற ஒரு விடயத்தினை விரும்பாவிடினும் இன்னும் மனிதகுலம் உணவுக்காக வேட்டையாடி இருப்பிடத்தினை தேடி அலையும் நாடோடி வாழ்வினையும் நாகரிகம் இல்லாத ஒரு காட்டவாசியாகவே மனிதகுலம் இருக்கக்கூடும். மனித குலத்தினது தேவை அதிகரிப்பு அல்லது ஒரு சமூகத்தினது எழுச்சியாகவோ சமூக மாற்றம் இடம் பெற்றது எனலாம். எவ்வாறெனில் கல்விச் சிந்தனையின் விளைவே சமூகமாற்றம் என்று கூறமுடியும்.

சமூகமாற்றமானது நாட்டினது அரசியல், பொருளாதாரம்,கல்வி,சுகாதாரம்,எனபல துறைகளிலும் அதன் செயற்பாட்டினை நிகழ்திக் கொண்டே வருகின்றது. எத்துறையாயினும் மாற்றம் என்ற ஒன்றை விரும்பாவிடின் நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி என்ற விடயங்கள் சாத்தியமாகாது. எவ்வாறான துறையின் அபிவிருத்தியும் கல்வி எனும் பெருந்துறையின் அபிவிருத்தியில் தங்கியுள்ளது. மனிதனது நவநாகரீக வாழ்க்கை முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை நிகழ்வதற்கு கல்வியே முதற்காரணம் எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு கல்விச் செயற்பாடு சமூகமாற்றத்திற்கு உதவுகின்றது என நோக்கும் போது நாட்டினது அரசியல் துறையினை ஆராயும் போது நாட்டினை ஆள்பவர்கள் கல்வி கற்ற கல்விமான்களாக திகழ வேண்டும். கல்வி கற்ற ஒருவரால் மட்டுமே அறிவுபூர்வமாக சிந்தித்து நாட்டு மக்களுக்கு தேவையான விடயங்களை பூர்த்தி செய்யமுடியும். சிறந்த திட்டமிடலுடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். கல்வியறிவற்றவர்களை தேர்வு செய்தால் நாட்டின் அபிவிருத்தி,சமூக முன்னேற்றம் என்பது வெறும' ஏட்டுச்சுரக்காய் போன்றது. எனவே ஒவ்வொரு மக்களும் அறிவுபூர்வமாக சிந்தித்து சிறந்த கல்விகற்ற முன்போக்கு சிந்தனையாளர்களை தெரிவு செய்தல் அவசியமாகும்.

பொருளாதார துறையில் கல்விச் செயற்பாடு எவ்வாறு சமூகமாற்றம் நிகழ்வதற்கு உதவுகின்றது என்றால். ஒரு நவநாகரீகமடைந்த கல்வியறிவுள்ள சமூகத்தினால் மட்டுமே பொருளாதாரம் என்ற ஒரு விடத்தினை பற்றி சிந்திக்க முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உற்பத்தி அதிகரிப்பு, எப்பொருளுக்கான கேள்வி அதிகரிப்பு,ஏற்றுமதி, முதலீட்டாளர்கள் பெறல்,எப்பொருளின் உற்பத்தியில் அதிகலாபம் என சிந்தித்து செயல்படமுடியும். கல்வியறிவற்ற ஒரு சமூகத்தினால் இவ்வாறான விடயங்கள் நிகழ்த்தவது கடினமான காரியம். இவ்வாறு பொருளாதார முன்னெற்றத்திற்கும் கல்வியறிவு அவசியமாகின்றது.

அதுமாத்திரமின்றி தொழினுட்ப வளர்ச்சிக்கும் மாற்றம் என்பது முக்கியம். மாற்றம் நிகழ்வதற்கு கல்வியறிவுள்ள அறிவுபூர்வமாக சிந்திக்க கூடிய மக்கள் தேவை. இன்று பல புதிய கண்டுபிடிப்புக்களை நாம் அனுபவித்து பலன் பெறுகின்றோம். இலகுவாக வேலைபுரிதல், மனித விரயத்தினை குறைத்தல், நேரவிரயமின்மை என்றால் அதற்கு காரணம் கல்வியறிவு என்ற ஒரு விடயமாகும். அது மனிதனை சிந்திக்க தூண்டாவிடின் இன்றும் மனிதனே எல்லா வேலைகளையும் செய்திருக்கமுடியும். ஆரம்பகாலத்தில் காணப்பட்ட தொழினுட்ப வளர்ச்சிக்கும் இன்று காணப்படும் தொழினுட்பவளர்ச்சிக்கும் மாற்றம் என்ற ஒரு விடயமே காரணமாகும். மனிதன் மாற்றத்தினை விரும்பும் சந்தர்ப்பத்தில் புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றான். ஒன்றிலுள்ள குறைபாட்டினை விரும்பும் சமூகத்திற்கு வழங்குகின்றது. உதாரணமாக நாம் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசியினை எடுத்துக் கொண்டால் எமது காலத்திற்கும் இனிவரும் காலத்திற்கும் நிறைய மாற்றங்கள் உருவாகும். எமது தலைமுறையினரின் தேவைக்கு அனைத்தும் நிகழ்விற்கும் கல்விச்செயற்பாடே காரணமாகின்றது.

இவ் அனைத்து துறைகளினது மாற்றமும் கல்விச் செயற்பாட்டின் மூலமாக முன்னெடுக்க முடியும். சமூகத்திற்கு நல்ல பிரஜைகளை உருவாக்கிக் கொடுப்பது கல்வியாகும். கல்வி என்ற ஒரு துறை இல்லாவிடின் நாட்டின் அபிவிருத்தி சமூகமாற்றம் என்பது இடம் பெறமுடியாது. மாற்றம் என்ற ஒரு செயற்பாடு நாகரீக முன்னேற்றம், சமூகமுன்னேற்றம்,புதிய கண்டுபிடிப்பு, அபிவிருத்தி, போன்ற நல்ல விடயங்களை எமக்கு அழித்தாலும் பல தீமையான விடயங்களையும் வழங்குகின்றது.

நவநாகரீகம் அடைந்துவரும் சமூகமாற்றத்தால் சமூகங்களிடையே காணப்படும் பண்பாட்டுக் கோலங்கள் பழக்கவழக்கங்கள் அழிக்கப்படுகின்றன. உதாரணமாக எமது தமிழர் கலாச்சாரத்தினை எடுத்துக் கொண்டால் இன்று எவ்வளவோ பல விடயங்கள் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் விட்டது. உணவுப்பழக்கம் முதல் அனைத்து விடயங்களும் கால மாற்றத்திற்கு ஏற்ப அழிக்கப்படுகின்றது. தமிழர் எனும் அடையாளமும் அழிக்கப்படலாம். மேலை நாட்டவர்களின் கலாச்சார மோகமும் ஈர்ப்பும் எமது கலாச்சாரத்தை மறந்துவிடச் செய்கின்றது. இதனால்தான் பலவிதமான பிரச்சனைகள் உருவாகின்றது. கலாச்சாரம் என்ற ஒரு விடயமே மனிதனை வாழ்வாங்கு வாழச்செய்யும். அதனை விடுத்து தீயமாற்றங்களை உள்வாங்காமல் நல்ல விடயங்களை மட்டும் மாற்றியமைத்துக் கொள்ளல் வேண்டும்.

அதுமாத்திரமின்றி இன்று பல உலகநாடுகளிடையே பல போட்டிகள், யுத்தங்கள், புரட்சிகள் என்ற விடயங்கள் இடம் பெறுவதற்கும் மாற்றம் என்ற விடயமே காரணம். கல்வி கற்ற சமூகத்தினராலே பிரச்சினைகளை உருவாக்கமுடியும். எமது நாட்டிலும் முப்பது ஆண்டு காலயுத்தம் இடம் பெற்றமையும் மாற்றத்தினை எதிர்பார்த்து கல்விகற்ற தமிழ் இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டமையாகும். புரட்சிகள் யுத்தமாகும் யுத்தங்கள் அழிவினை ஏற்படுத்தும். அழிவுக்கு இட்டுச் செல்வதும் மாற்றமாகும். இன்று பல அணுஆயுதங்களால் மக்கள் அழிக்கப்படுகின்றார்கள். கல்வி அறிவு மிக்க உலக நாடுகளே இதனை உற்பத்தி செய்கின்றன. அணுஆயுதங்கள் முதல் பல புதிய புதிய நோய்கள் பரப்புவது வரை மாற்றத்தினை நோக்கி ஏற்பட்ட புரட்சியும் உலகநாடுகளிடையே காணப்படும் போட்டியும் காரணமாகும்.

இவ்வாறு மாற்றம் என்ற ஒரு விடயம் அனைவருக்கும் அவசியமாகும் என்றாலும் மாற்றத்தினை நல்ல வியங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலமாக மனிதகுலமானது முன்னேறும். அத்துடன் எமது நாட்டினது மாற்றத்தினை திறன்பட செயற்படுத்த வேண்டும் என்றால் உலக நாடுகளினைப் போன்று கல்விச் செயற்பாட்டினூடாக முன்னெடுக்க வேண்டும்.ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையினை விட கல்விக்கு அதிகம் ஒதிக்கீடு வழங்குதல் அவசியம். அத்துடன் உலக நாடுகளின் தரத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை உள்வாங்குதல் வேண்டும். கல்விச் செயற்பாடுகளில் புதிய மாற்றங்களை உள்வாங்கும் போதே அது சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக எமது நாட்டின் தொழினுட்ப கல்வி அறிமுகப்படுத்தப் பட்டமையால் இன்று தொழினுட்பரீதியில் எமது நாட முன்னேறுகின்றது. இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்;து மாற்றத்தினை நோக்க கல்விச் செயற்பாடு அவசியமாகும்.

பொ.சர்ஸ்னி
2ம் வருடம், சிறப்பு கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கலைகலாசாரபீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்.