கல்லடிப்பாலம் சுற்றுலாத் தளமாக மாற்றப்படுமா?




செ.துஜியந்தன்


'ஏன் தான் நம்மட புள்ளைகள் இந்தப் பாலத்தில இருந்து குதிச்சு சாகுதுகலோ தெரியாது?. யுத்தமும், சூறாவளியும், சுனாமியும் வந்து செத்தது போதாதென்று இப்ப புதினமாக தற்கொலை செய்து சாகுதுகள். இந்தக்காலப் புள்ளைகளுக்கு பெத்தவங்க புத்திமதி சொன்னா கேட்குதுகள் இல்ல. மூக்கில கோபம் வந்து பிழையான முடிவுகள எடுக்குதுகள். அந்தக் காலத்தப்போல எதையும் தாங்கும் தைரியம் இந்தக்காலப் புள்ளைகளிட்ட இல்ல தம்பி. காதல் கத்தரிக்கா எண்டு மனவிரக்தியில சாகிற சின்னஞ்சிறுசுகள நெனச்சா நெஞ்சுக்க கொதிக்குது. இந்த பள்ளிக்கூடங்களில புள்ளைகளுக்கு மனத் தைரியத்தை வளர்க்கிற எப்புடி எண்டு சொல்லிக்கொடுக்கோணும். போன கிழமையும் ஒரு புள்ள பாலத்தில இருந்து குதிச்சு செத்துப்போயிட்டுது தம்பி ' என்றார் கல்லடிப்பாலத்தின் கீழ் மீன் பிடித்துக்கொண்டிருந்த சதாசிவம் என்பவர்.

மட்டக்களப்பு வாவிக்கு குறுக்கே செல்லும் கல்லடிப்பாலம் பலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் ஒரு தளமாக மாறிவருகின்றது! இதனால் இப்பாலத்தைப் பற்றியே தற்போது இம்மாவட்டத்தில் அதிகம் பேசி வருகின்றனர். 1928 ஆம் ஆண்டு கல்லடிப்பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட அதே ஆண்டில் கரைசேர முடியாத நிலையில் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் இருந்த வௌ;வேறு இரு இனங்களைச் சேர்ந்த தமிழ் பெண்ணும், முஸ்லிம் ஆண் ஒருவரும் தமது காதல் கைகூடாத காரணத்தினால் முதன் முதலில் கல்லடிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பிரதேசத்திலுள்ள மூத்த பிரஜைகள் சிலர் அந்நினைவுகளை அசைபோடுகின்றனர். காதலர்களின் காவியப் பாலமான கல்லடிப்பாலத்தில் ஏறி அன்றிலிருந்து இன்று வரை குதி;த்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்புக்கு அழகு சேர்க்கும் அம்சங்களில் கல்லடிப்பாலம் மிகப்பிரதானமானது. இலங்கையின் மூன்றாவது பெரிய பாலம் என்ற பெருமை இதற்குண்டு. மட்டக்களப்பு நகரையும் ஏனைய கிராமங்களையும் இணைக்கின்ற கல்லடிவாவிக்கு முன்னர் பாலம் இன்மையால் அம் மக்கள் தோணி, வள்ளங்கள், படகு அகியவற்றைப் பயன்படுத்தியே கடந்து வந்தனர்.

1924 ஆம் ஆண்டில் சேர் வில்லியம்ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இங்கு பாலம் கட்டுவதற்கான ஆரம்பப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அன்றிலிருந்து நான்கு வருடங்கள் கழித்து 1928 ஆம் ஆண்டு இரும்புக் கேடர்களைக் கொண்டு ஒரு வழிப்பாதையாக இப் பாலம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இக்கரையில் இருந்து அக்கரைக்கும், அக்கரையில் இருந்து இக்கரைக்கும் மக்களை கரைசேர்க்கும் சுறுசுறுப்பான பாலமாக கல்லடிப்பாலம் இருந்தது. ஒரு வழிப்பாதையாக இருந்த இப்பாலம் 85 வருடங்களின் பின்பு 2013 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் காலத்தில் புதிதாக விஸ்தரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இப்பாலம் 170 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இதன் நீளம்288.35 மீற்றராகும். அகலம் 16.5 மீற்றராகும். இதன் பின்பு மட்டக்களப்பு நகர் சகல வழிகளிலும் போக்குவரத்தில் புதிய மாற்றங்களைச் சந்தித்தது. புதியபாலமும், பழைய பாலமும் அருகருகே காட்சியளிக்கின்றது. அதனால் இந்தப்பாலம் இருக்கும் பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப்பயணிகளும் பார்வையிட வருகின்றனர்.

இக் கல்லடிப்பாலத்திற்கு மட்டும் பேசும் திறமையிருந்தால் இப்பாலத்தைக் கடக்கும் மக்களின் கதையை கதை கதையாச் சொல்லும். அது மட்டுமல்ல இங்கிருந்து குதித்து உயிரை மாய்த்தவர்களின் சோகங்களையும் ராகம் இசைக்கும். சமீப காலமாக கல்லடிப்பாலம் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பேசுபொருளாகியிருக்கின்றது.
காரணம் எங்கிருந்தோ வருகின்ற பலர் இப்பாலத்திற்கு வந்து கீழே குதித்து தன் கதையை முடித்துக் கொள்கின்றனர். ஒரு வருடத்திற்கு சுமார் 17 பேராவது தற்கொலை செய்து கொள்கின்றனர். வாரம் ஒருவர் அல்லது மாதம் இருவர் என அப்பட்டியல் நீள்கின்றது. இதனால் தற்கொலைப்பாலம் என்ற அடைமொழியோடு பலரால் இது அழைக்கப்படுகின்றது.
கல்லடிப்பாலம் நான் என்ன பாவம் செய்தேன். ஏன் என் மீது வந்து குதித்து உங்கள் வாழ்வை வீணாக்கி கொள்கின்றீர்கள். நானா உங்களை வந்து குதியுங்கள் என்று சொன்னேன். என்பதைப்போன்று கேட்பதாக அது காட்சியளிக்கின்றது.

கடந்த வருடத்தின் இறுதி வாரத்திலும் இவ் வருடத்தின் முதல் வாரத்திலும் இப் பாலத்தின் மேல் இருந்து குதித்து இளம் இரு உயிர்கள் உயிரிழந்திருந்திருந்தனர். காதல் தோல்வி, மனவிரக்தி, குடும்பச்சுமை என பல்வேறு பட்ட காரணங்களுக்காக 13 வயது தொடக்கம் 60 வயது வரையிலான பலர் தங்கள் வாழ்நாளை முடித்துக்கொண்ட துயரச்சம்பவங்கள் பதிவாகியுள்ளது. பதிவாகியும் வருகின்றது. அது மட்டுமல்ல இரவு வேளையில் இப்பாலத்தை போதைப்பொருள் பாவiனாளர்கள் பயன்படுத்துகின்றார்கள். இங்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் எவரும் கடமையில் இருப்பதில்லை. தற்கொலையும், போதைப்பொருள் பாவனையும் தலைவிரித்தாடும் இக் காலகட்டத்தில் அதிலிருந்து கல்லடிப்பாலத்தை மீட்கவேண்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு பழைய இக் கல்லடிப் பாலத்தை சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடியதான வகையில் மாற்றியமைக்குமாறும் நீண்டகாலமாக மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. இப் பாலத்தில் நடைபெறும் தற்கொலைகளைத் தடுக்கவும், சமூக விரோதச் செயல்களைத்தடுக்கவும் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துமாறும்; மற்றும் பாலத்தின் அரைவாசிப் பகுதிக்கு பாதுகாப்பான வலைகளை பொருத்துமாறும் கோரிவருகின்றனர்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல தற்கொலை செய்பவர்கள் அவர்களது எண்ணத்தை மாற்றாத வரைக்கும் தற்கொலையைத் தடுக்க முடியாது என்பதே உண்மையாகும். தற்கொலை செய்து கொள்பவர்கள்; இந்தப் பாலம் இல்லாவிட்டால் இன்னொரு பாலத்தை நாடிச் செல்லத்தான் போகின்றார்கள். அதற்காக பாலத்தையும் அதிகாரிகளையம் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

ஆனால் இப்பாலத்தை மக்களுக்கு பிரயோசமானமுறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொழுது போக்குத்தளமாகவும், மாநகர சபைக்கு வருமானம் தரக்கூடிய இடமாகவும் இதனை மாற்றியமைக்க முடியும். கல்லடிப்பாலத்தை மூன்று பக்கங்களும் கண்ணாடியால் அடைக்கப்பட்ட பகுதியாக மாற்றி அதற்குள் சுற்றலாப் பயணிகளைக் கவரக்கூடிய விதத்தில் கடைத்தொகுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், அல்லது சிறுவர் விளையாட்டு தளம், அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட கைப்பணி காட்சி சாலைகள் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.
சுற்றலாத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்களிடம் இது போன்ற ஏராளமான ஆலோசணைகளைப் பெறலாம். மட்டக்களப்பின் அடையாளங்களின் ஒன்றாகத் திகழும் கல்லடிப்பாலத்தை பயனுள்ள பாலமாக மாற்றியமைக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? வெறுமனே இப் பாலத்தில் தற்கொலைகள் தான் நடைபெறுகின்றது என பேசிக்கொண்டிருப்பதினால் பயனில்லை.

இது போல பயன்படுத்தப்பட வேண்டிய வளங்கள் பல மட்டக்களப்பில் இன்னும் கவனிக்கப்படாமலே கிடக்கின்றன.
வடக்கு மாகாணத்தோடு ஒப்பிடும் போது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்பது மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதனை மறுக்க முடியாது. வறுமையும், துயரமும் சூழ்ந்த கிழக்குமாகாணத்தின் முத்தாகத் திகழும் மட்டக்களப்பு நகரை அழகிய நகராக நாம் மாற்றியமைக்கவேண்டாமா?

கல்லடிப்பாலம் காண்போரைக் கவரும் கண்கவர் பாலமாக எப்போது மாற்றியமைக்கப்படும்? கிழக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.