உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்; சு.க சார்பில் மைத்திரியே வேட்பாளர்




உரிய காலத்துக்கு முன்னர் எச்சந்தர்ப் பத்திலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாதென லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நேற்று (09) திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதன்படி 2020 ஜனவரியில் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இவ்வருட நவம்பர் மாதம் உரிய திகதியில் அறிவிக்கப்படுமென சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க சுதந்திரக்கட்சி ஏகோபித்த தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த சமரசிங்க எம்.பி இவ்வாறு தெரிவித்தார். உரிய காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாயின் ஜனாதிபதியே அதற்குரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி தேர்தலை விரைவுபடுத்தும் தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தனது பதவிக் காலத்தில் நாட்டு மக்களுக்காக இன்னும் பல விடயங்களை நிறைவேற்ற வேண்டிய தேவை தனக்கு உள்ளதாக ஜனாதிபதி பொதுக் கூட்டங்களில் வலியுறுத்தி வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்துக்கு முன்னர் அவர் நடத்துவாரென எதிர்பார்க்க முடியாதென்றும் அவர் கூறினார்.

"எதிர்வரும் நவம்பரில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார். இதன்போது அவர் சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரது பெயரையும் அறிவிப்பார். ஆனால் ஜனாதிபதியே மீண்டும் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு.இதற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தமது ஏகோபித்த விருப்பத்தை தெரிவித்துள்ளனர். கட்சியின் விருப்பத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வாரா? இல்லையா? என்பது பற்றி எமக்குத் தெரியாது. எனினும் அவர் அதனை எற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பம். நாம் அதனை ஜனாதிபதியிடம் வலியுறுத்திக் கூறுவோம்," என்றும் மஹிந்த சமரசிங்க எம்.பி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பான சுதந்திரக் கட்சியின் விருப்பத்துக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ஆதரவு வழங்குமென எதிர்பார்க்கின்றோம். சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பாரிய முன்னணி சார்பில் ஜனாதிபதியை மீண்டும் வேட்பாளராக களமிறக்கினால் அவருடைய வெற்றி நிச்சயமென்றும் அவர் கூறினார்.

மேலும் எந்தவொரு அரசியல் கட்சியும் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்துக்கு முன்னர் நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாக தான் கேள்விப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது-

சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்ந்த வேறொரு தலைவர் இல்லையென்றுதான் கூற வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்தில் நான் அங்கம் வகித்தவரென்ற வகையிலும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் இவரைப் போன்ற நாட்டுப் பற்றுமிக்க சிறந்த தலைவர் ஒருவரைக் காணவில்லை.