நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஒலிபெருக்கி சாதன தொகுதிகள் கையளிப்பு




(அகமட் எஸ். முகைடீன்)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு பள்ளிவாசல்களுக்கு ஒலிபெருக்கி சாதன தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு மத்திய முகாம் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேற்று (10) வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி. நிசார் ஹாஜி தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து சாளம்பைக்கேணி 1 மபாஸா ஜூம்ஆ பள்ளிவாசல், சாளம்பைக்கேணி 2 மஸ்ஜிதுல் சாலிஹீன் ஜூம்ஆ பள்ளிவாசல், சாளம்பைக்கேணி 5 நூராணியா தைக்கா பள்ளிவாசல் மற்றும் சாளம்பைக்கேணி 3 நூராணியா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றிற்கான ஒலிபெருக்கி சாதன தொகுதிகளை கையளித்தார்.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.கே. ஸமட், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ், மத்திய முகாம் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் அஸ்ஷேக் சுல்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்களான முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசல் பிரதித் தலைவர் ஐ.எல். சலீம், எம்.ஐ. ரஜாப்தீன், ஏ.எல்.எம். இம்தியாஸ் மற்றும் நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு காபட் வீதி அமைத்தல், கிராமிய வீதிகளை கொங்றீட் வீதியாக புனரமைத்தல், அமீர் அலி விளையாட்டு மைதான அபிவிருத்தியினை முழுமைப்படுத்தல் போன்றவை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்னெடுப்பதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார்.