கோயிலாகட்டும் புதைக்கின்ற மயானமாகட்டும் அது தமிழன் என்றால் நீதி மன்றேறித்தான் பெறவேண்டும் : எழுத்தாளர் டணிஸ்கரன் தெரிவிப்பு.





என் பாட்டன் முப்பாட்டன் பூட்டன் எங்கள் முன்னோர்கள் கூடிவாழ்ந்த இந்த பூர்வீக நிலத்தில் நாங்கள் கும்பிடுகின்ற கோயிலாகட்டும் புதைக்கின்ற மயானமாகட்டும் அது தமிழன் என்றால் நீதி மன்றேறித்தான் பெறவேண்டும் என, எழுத்தாளர் டணிஸ்கரன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய இளைஞர் சேனையின் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொண்டாட்டங்களாலும் கோயில்களாலும் கட்டமைக்கப்பட்டு ஒற்றுமைப்பட்டிருந்த ஓர் இனம் எம் தமிழ் இனம் ஆனால், இன்றைய நிலை நாம் செல்லும் பாதை எது என்பது நாமறிந்த ஒன்று. எத்தனை போராட்டங்கள், மாராட்டங்கள். கிட்டத்தட்ட 23801 வாக்காளர்களைக் தன் நிர்வாகத்தின் கீழே வைத்திருக்கின்ற கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் கூட இன்னும் தரமுயர்த்தப்பட்டபாடில்லை.

இழந்த நாற்பது ஆண்டுகள் என்பது வெறும் நாட்களையும் இலட்ச்சாதிலட்ச மக்களையும் மட்டுமல்ல அது எங்கள் இலட்சியங்களையும் பொருளாதாரத்தினையும் கல்விசார் வளங்களையும் கரையொதிக்கியிருக்கிறது.

நாங்கள் இழந்த பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அத்தனையையும் மீட்டெடுப்போம். ஓன்றுபட்டு உழைப்போம் என திடசங்கல்பம் எடுப்போம். எங்களுக்குத் தேவையானதெல்லாம் மழை ஓய்ந்தபின் குடைபிடிக்கும் காளான்கள் அல்ல. கதைகளிலே மாயக்கண்ணன் தூக்கிப்பிடித்ததைப் போன்ற மலைகளே.


வெறும் வீர வசனங்களுக்கும் போலி வார்த்தைகளுக்கும் செவி சாய்த்து எங்களை நாங்களே அழித்துக்கொள்ளும் மடையர்களாக நாம் இருநதுவிடாமல் எமது பொருளாதாரம், கல்விசார் வளம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு என எமக்குத் தேவையானவற்றை நாங்கள் ஒவ்வொருவரும் உழைத்துப் பெறவும் பாதுகாக்கவும் பாடுபட்டு உழைக்கவேண்டும்.

சமூக சேவைக்கென கைகோர்த்த நாங்கள் எம் இனத்தின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து எம் இளைய சந்ததியினரின் கரங்களில் ஒப்படைப்போம் என்றார்.