ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்- கோத்தபாய



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவேண்டும் என்பது எங்களிற்கு தெரியும் நீங்கள் தயார் என்றால் நான் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏனைய உலக நாடுகளை போன்று முன்னோக்கி நகரவேண்டுமானால் இலங்கையர்கள் என்ற பொதுவான அடையாளத்தினை உருவாக்கவேண்டும்,இலங்கையின் பலரின் எதிர்பார்ப்பாக இது உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மீண்டும் இலங்கையர்கள் என்ற எண்ணக்கருவை பலப்படுத்தவேண்டும் இந்த சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறுமை தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க சவாலாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள கோத்தபாயராஜபக்ச இது குறித்து கூட்டாக கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய அரசமைப்பு குறித்து விவாதங்கள் இடம்பெறுகின்றன பல கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச புதிய அரசமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் மக்கள் இலங்கை என்ற அடையாளத்தை உணரச்செய்யவேண்டும்,அவ்வாறான புரிந்துணர்வை உருவாக்கினால் அவர்கள் பிளவுபடாமல் இலங்கையர்களாக வாழ்வதன் அவசியத்தை உணர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

சில அரசியல்வாதிகள் தேசியவாதத்தையும் இனவாதத்தையும் ஒன்றாக காண்பித்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இலங்கையர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்ககா தேசியவாதத்தை தழுவவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

தனிப்பட்ட உரிமைகளிற்கு முக்கியத்துவத்தை அளிப்பதை விட சமூக உரிமைகளில்முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயலவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்