கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் பற்றிமா கல்லூரி விளையாட்டு மைதானம் சீரமைப்பு




(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று புதன்கிழமை  கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டன.


கல்முனை மாநகர சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் சுமித்ரா அவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

நேற்று காலை தொடக்கம் கல்முனை மாநகர சபையின் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது மைதானத்தில் காணப்பட்ட பற்றைக்காடுகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டதுடன் விளையாடுவதற்கு இடையூறாக இருந்து வந்த பாரிய மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதுடன், ஏற்கனவே அங்கும் இங்குமாக காணப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் கழிவுப்பொருட்கள் யாவும் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

இப்பணிகளை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஆகியோர் நேரடியாக கண்காணித்து நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி அடுத்த ஒரு சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் மைதானத்தை அவசரமாக ஒழுங்கமைக்கும் பாரிய வேலைத்திட்டத்திற்கு மாநகர சபை அனுசரணை வழங்கியமைக்காக முதல்வர், ஆணையாளர் மற்றும் உறுப்பினர் சுமித்ரா ஆகியோருக்கு கல்லூரி சமூகம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.