புதிய தேசிய பாடசாலைகள் உருவாக்க அரசாங்கம் திட்டம்


தேசிய கொள்கையை வெளியிட்டது கல்வி அமைச்சு
நாட்டில் புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்குதல் சம்பந்தமான புதிய தேசியக் கொள்கையொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தேசியக் கொள்கை மாகாணக் கல்வியமைச்சுக்கள், மாகாணப் பிரதம செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு திட்டமிடல் பிரிவு அறிவித்துள்ளது. 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளை புதிதாக உருவாக்கும் தேசிய கொள்கை அடிப்படையில் புதிய தேசிய பாடசாலையில்  தரம் ஆறு முதல் தரம் 13வரையான வகுப்புகளை மாத்திரம் வைத்திருக்க அனுமதிக்கப்படும். ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் அனுமதிக்கப்படமாட்டாது. 
ஒரு வகுப்பில் 35மாணவர்களை வைத்திருக்கலாம். ஒரு நாளைக்கான மாணவர் வரவு ஒரு வகுப்பில் 30ஆக இருத்தல் அவசியமென்பதுடன் ஒரு பிரிவில் சமாந்தர வகுப்புக்கள் ஐந்து ஆக மட்டுப்படுத்த வேண்டும். 
உருவாக்கப்படும் புதிய தேசியப் பாடசாலை இன நல்லிணக்கம், ஒற்றுமை என்பவற்றை பிரதிபலிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். ஒரு இனத்தவருக்கோ, ஒரு பிரிவினருக்கோ தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படமாடடாது. 
புதிய தேசிய பாடசாலைகளில் சகல பௌதீக வள வசதி, விளையாட்டு மைதான வசதி, கற்றல், கற்பித்தலுக்கான விசேட அலகுகள் என்பன முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். 
தேசிய பாடசாலை ஏற்படுத்தப்படும் ஐந்து வருடத்திற்குள் க. பொ. த. உயர்தர பரீட்சைகள் மூலம் 25சத வீதத்திற்கு மேல் கலை, வர்த்தக பிரிவுகள் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருப்பதோடு, 20சத வீத மாணவர்கள் விஞ்ஞான, கணித, தொழில் நுப்பவியல் பிரிவுகள் மூலம் பல்கலைக்கழக அனுமதியை ப் பெற்றிருத்தல் அவசியமாகும். 
ஒவ்வொரு 20,000பேருக்கும் ஒரு தேசிய பாடசாலை என்ற அடிப்படையில் இட அமைவு, போக்குவரத்து, புவிவியல் சூழல் அடிப்படையில் அமைக்கப்படும். 
தேசிய படாசாலைகளை புதிதாக உருவாக்கல் தொடர்பான நியமங்களின்படி ஒரு பிரதேச செயலாளர் பிரிவிற்கு அல்லது வலயமொன்றுக்கு ஒன்று வீதம் எதிர்காலத்தில் அமைக்கப்படும். 
புதிதாக உருவாக்கப்படும் தேசிய பாடசாலைகளில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக கற்க வேண்டும். தனித்தனியான தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படமாட்டாது. 
புதிய தேசிய பாடசாலைகள் கல்வியமைச்சு செயலாளர், உயர் கல்வி அமைச்சு செயலாளர், நிதி அமைச்சு செயலாளர், தேசிய பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழுவினரால் ஆராய்வுக்குட்படுத்தி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் அனுமதி கிடைத்ததும் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.