பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தமும் அதற்கான தீர்வும்

மனஅழுத்தம் (Stress)  என்பது இன்று பலருக்கு பெரும் பிரச்சினையான ஒரு விடயமாக உள்ளது.
மனஅழுத்தம் (Stress) தான் எனக்கு இருக்கும் பெரிய பிரச்சினை என்று நம்மில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
முதலில் நாம் மனஅழுத்தம் (Stress) என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
இது ஒரு நோய் அல்ல. அது ஒரு வகையான அறிகுறி(Symptoms) . ஒரு பிரச்சினைக்கான அறிகுறி என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனஅழுத்தம் (Stress)என்பது நம் மீது நாம் திணித்துக் கொள்ளும் அல்லது பிறரால் திணிக்கப்படும் அழுத்தம் (Pressure)  தான்.
நான் இதை தான் செய்ய வேண்டும்,  இவ்வளவு செய்ய வேண்டும் என்று நமக்கு நாமே ஒரு அழுத்தத்தை கொடுக்கிறோம்.


இந்த அழுத்தத்திற்கு பெண்கள் அதிகம் ஆளாகின்றனர்.
நம் சமூகத்தில் பெண்களுக்கான வரையறைகள் அதிகம்.
உதாராணமாக ஒரு உடையை தெரிவு செய்வதில் கூட சில பெண்கள் நிறைய சிந்திக்க வேண்டி உள்ளது.
காரணம் யார் என்ன சொல்வார்களோ என்ன நினைப்பார்களோ என்ற பயம்.
தாம் விரும்பியதை செய்வதில் தயக்கம், சமூகம் அதை எப்படி ஒரு கோணத்தில் பார்க்கும் என்பது முக்கியமான பிரச்சினை.
பெண்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும், அது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தான் அவர்களது குடும்பத்தின் வளர்ச்சி உள்ளது என்பது.

மனஅழுத்தத்தின் உச்சம் சிலருக்கு தற்கொலையில் முடிகிறது. பெரும்பாலும் திருமண வாழ்வில் தோழ்வியடையும் போதும் பிள்ளை பேறுக்கு பின்னாலும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் சில பெண்கள்.
எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதும் ஒரு வித அழுத்தம் தான்,  நாம் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாது போகும் சமயத்தில் அதிக மன அழுத்தத்திற்குள் தள்ளப்படுறோம். பொதுவாக ஆண்களை விட பெண்களிடம் கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆண்கள் ஒரு சமயத்தில் ஒரு வேலையில் தான் கவனம் செலுத்துவார்கள் ஆனால் பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்தும் ஆற்றல் கொண்டவர்கள்.
இந்த ஒரு விடயம் கூட அவர்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று கூறலாம்.

பெண்களை பொறுத்த வரையில் மனஅழுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு.
திருமணம்,வேலை,குழந்தை என்று எல்லா சந்தர்ப்பங்களிலும்  பெரும்பாலான பெண்கள் சுற்றி இருப்பவர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டு மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இளம் வயது பெண்களுக்கு வேலையிலும், வேலை செய்யும் இடத்திலும் எதிர்பாலினரால் ஏற்படும் அழுத்தம்
திருமணத்தின் பின் குழந்தையின்மை ஒரு மனஅழுத்தம் என்றால் குழந்தை பிறந்த பின் குடும்பத்தினரால் ஏற்படும் அழுத்தங்கள் அதிகம்.
கணவன், பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தை பராமரிப்பு பற்றி பல அழுத்தங்களை பெண்களில் திணிக்கிறார்கள். தூக்கமின்மை மற்றும் தன்னையும் குழந்தையையும் கவனித்து கொள்ள வேண்டும் அதையும் சரியான முறையில் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அதிக மனஅழுத்தத்திற்கு காரணமாகிறது.
அதிலிருந்து வெளிவருவது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.

தீர்வுகள்

இந்த மனஅழுத்தத்தில்(Stress) இருந்து வெளிவர வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்போம். 
சரியான சமயத்தில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும். நான் இதை தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த முடிவில் தீர்மானமாக இருக்க வேண்டும். குடும்பமா வேலையா என்று வரும் போது இது தான் என்று உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.
நாம் சிலவற்றை தேர்த்தெடுக்கும் போது சிலவற்றை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும்.
எது வேண்டும் என்பது நம்முடைய சுய முடிவில் உள்ளது.
எல்லோராலும் ஒரே விதமான முடிவுகளை எடுக்க இயலாது. அது நமக்கு எதில் எவ்வளவு சாதகமான விசயங்கள் உள்ளது என்பதை பொறுத்ததே.
முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அப்படி மாற்றிக் கொண்டே இருந்தீர்களென்றால் நீங்கள் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவருவது கடினம்.
உங்களுக்கு மனஅழுத்தம் (Stress) தரும் பிரச்சினைகளை ஒரு இடத்தில் குறித்து வையுங்கள் அதற்கான தீர்வு என்று நீங்கள் நினைக்கும் முடிவுகளையும் அதில் குறித்துக் கொள்ளுங்கள், ஏன் எழுதி வைக்க வேண்டும் என்றால் நம் மூளையில் நொடிக்கு பல சிந்தனைகள் வந்து போகின்றன.  ஆகவே நம் பிரச்சினைகள் என்ன? அதன் தீர்வு என்ன? என்பதை சரியான முறையில் கையாள வேண்டும்.

உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள். நம்பிக்கையான யாராவது ஒருவரிடம் உங்கள் பிரச்சினைகளை பற்றி மனம் திறந்து பேசுங்கள், அது உங்கள் குடும்பத்தினரோ கணவரோ அல்லது தோழியோ யாராக இருந்தாலும்  அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள்.
உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல பழகிக் கொள்ளுங்கள், அது சரியோ தவறோ  எதுவாக இருந்தாலும்.

-சகி-