தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் த.தே.கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்

தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு கல்லடி, நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை. தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று தமிழ் மக்களுக்கு சேவையாற்றவேண்டும்.

மேலும் தற்போது அரசாங்கத்தில் ஏற்றப்பட்ட மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையினையும் ஏற்படுத்தப்போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் போட்டிகள், பொறமைகள் பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடையும்.

அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் பாரிய கட்சியாக எமது கட்சி மாறும். அதற்கான சந்தர்ப்பம் இன்று வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது” என விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.