பாடநெறி ஒன்றைத் தெரிவு செய்யுமுன் நீங்கள் கவனிக்க வேண்டியவை

உயர் தரத்தின் பின்னர் பலர் கோர்ஸ் செய்வதற்காக தமது காலத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர்.

பாடநெறித் தெரிவு வெற்றிகரமாக அமைந்தால் அவர் வெற்றிபெற்றவராகின்றார்.

சிலர் இரண்டு மூன்று வருடங்களின் பின்னர் வாழ்க்கையில் தாம் எங்கே இருக்கிறோம் என்று கண்டறியமுடியாத தூரத்தில் விரக்தியடைந்து தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ளவதற்கும் முடியாது தவிக்கின்றனர்.

எனவே, ஒரு பாடநெறியைத் தெரிவு செய்யுமுன் பின்வரும் அம்சங்களைக் கட்டாயம் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதையை தௌிவாக வகுத்துக்கொள்ளுங்கள். வீணான ஏமாற்றங்களைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

பாடநெறி ஒன்றைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை


1. பாடநெறியை வழங்கும் நிறுவனமும் அதற்கான அங்கீகாரமும்

பாடநெறி ஒன்றைத் தெரிவு செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முதலாவது அம்சம் குறித்த நிறுவனம் பற்றியதாகும்.

மூன்று வகையான நிறுவனங்கள் பாடநெறிகளை வழங்குகின்றன.
1. அரச நிறுவனங்கள்
2. அரை அரச நிறுவனங்கள் (Semi Government)
3. தனியார் நிறுவனங்கள்

அரச நிறுவனங்கள் மற்றும் அரை அரச நிறுவனங்கள் இரண்டினதும் பாடநெறிகள் அங்கீகரிக்கப்பட்டவை தான்.

ஆனால் தனியார் வழங்கும் பாடநெறிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும்.

பல நிறுவனங்கள் புகைப்படங்களையும் க்ரபிக் படங்களையும் காட்டி ஏமாற்றுகின்றனர்.


தனியார் நிறுவனங்கள் சில வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்ற பாடநெறிகள் என்று விளம்பரம் செய்து மாணவர்களைக் கவர முயற்சிக்கின்றனர்.

அது தொடர்பாக மிக அவதானமாக தெரிந்து கொள்ளுங்கள்.



2. பாடநெறியின் அங்கீகாரம்

பாடநெறிகள் இரு அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

1. தேசிய தொழில் தகைமை (NVQ)
2. இலங்கை தரப்படுத்தல் சட்டகம் (SLQF)


எனவே நீங்கள் தெரிவு செய்யும் பாடநெறி இவை இரண்டில் அல்லது ஒன்றில் என்ன தரத்தில் உள்ளது என்பதை அவதானியுங்கள்.

இவ்வாறான தரப்படுத்தல் இல்லாத பாடநெறிகளை செய்யாதிருப்பது ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும்.


இலங்கை தரப்படுத்தல் சட்டகத்தை பார்வையிட 


3. தொழில் சந்தைக்கு பொருத்தமான பாடநெறி

தொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதற்கான பாடநெறிகளையே நாம் தெரிவு செய்ய வேண்டும். தொழில் சந்தையைக் கருத்தில் கொள்ளாது அனைவரும் செய்கின்றனர் என்ற அடிப்படையில் ஏதாவது ஒரு பாடநெறியில் இணைந்து வெற்றிகரமாக முடித்ததன் பின்னர் தொழில் தேடி பலர் அலைந்து திரிகின்றனர்.

எனவே, தொழில் சந்தைக்குப் பொருத்தமான பாடநெறி ஒன்றைத் தெரிவு செய்வது ஆரோக்கியமானது.

பட்டப் பாடநெறி, உயர் தேசிய டிப்ளோமா முதலானவை தொழில் சந்தையில் வரவேற்புடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஏனைய பாடநெறிகள் தொடர்பாக கவனமாக தெரிவு செய்யுங்கள்

4. பொருத்தமான அல்லது விருப்பமான துறையைத் தெரிவு செய்தல்

உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கற்றல் துறையைத் தெரிவு செய்யுங்கள். அதன் விருப்பு பட்டியலை தொழில் சந்தைப் பொருத்தப்பாட்டோடு ஒப்பிட்டு பாருங்கள். ஏனெனில் உங்கள் விருப்பு வெறுப்பு பாடநெறியை வெற்றிகரமாக முடிப்பதில ்செல்வாக்குச் செலுத்தும்.


5. பாடநெறிக் கட்டணம்

அரச உயர் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் கட்டணமற்ற பாடநெறிகளையே வழங்குகின்றன. அரை அரச நிறுவனங்கள் மானிய அடிப்படையிலும் இலவசமாகவும் பாடநெறிகளை வழங்குகின்றன.

கட்டணம் செலுத்தப்பட வேண்டிய பாடநெறிகளாயின் உங்கள் குடும்ப வருமானத்தை கருத்திற் கொண்டு பாடநெறியைத் தெரிவு செய்யுங்கள். கடந்த காலங்களில் பல்வேறு பாடநெறிகளில் பதிவு செய்த மாணவர்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அவற்றை வெற்றிகரமாக முடிக்காது இடை நடுவில் விலகிச் சென்றுள்ளனர்.


பாடநெறியின் முழுக்கட்டணத்தையும் செலுத்துவதற்கான பொருளாதார பலத்தை கருத்தில் கொள்ளுங்கள்.

பல சமூக அமைப்புக்கள் புலமைப் பரிசில்கள் வழங்குகின்றன. எனினும் அவற்றை முழுமையாக நம்பி பாடநெறிக்கு பதிவு செய்வது ஆரோக்கியமில்லை.

தொழில்நுட்பக் கல்லூகள் போன்றவற்றில் நீங்கள் இணைந்து கற்பதற்கு இலவசமாக அனைத்து வசதிகளும் தந்து நாளாந்தம் ஒரு சிறிய தொகையையும் தருகின்றனர்.

தற்போது அரசாங்கம் உயர் கல்விக்கான வட்டியற்ற கடன் வழங்குகின்றது. அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் 7 க்கு மாத்திரமே அரசாங்கம் இந்த கடனுதவியை வழங்குகின்றது.



6.பாடநெறியின் காலப்பகுதி

பாடநெறி ஒன்றின் தன்மை அல்லது மட்டத்திற்கு ஏற்ப பாடநெறியின் காலப்பகுதி மாற்றமடையும். ஆனால் தற்போது இலங்கை தரப்படுத்தல் சட்டகத்தின் படி குறிப்பிட்ட கற்றல் நேரமே பாடநெறியின் தரத்தை தீர்மானிக்கிறது.

நீண்ட காலத்தைக் கொண்ட பாடநெறிகளைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள். அதே நேரம் மிகக் குறைந்த காலத்தைக் கொண்ட பாடநெறிகளையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.

7. உங்கள் பிரதேசத்திற்கும் கல்வி நிறுவனத்திற்குமிடையிலான தூரம்

தூரப் பிரதேசத்தில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுவதற்கு மேலதிக செலவு ஏற்படுவதைப் போலவே சிரமங்களும் அதிகம்.

அவ்வாறு தூரப்பிரதேசங்களில் கற்பதற்கான பாடநெறியை வழங்கும் நிறுவனத்தைத் தெரிவு செய்யும்போது தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் ஆரோக்கியம் முதலானவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்.

8. தீர்மானிக்க முன்னர் தெரிவுப்பட்டியலைத் தயார் செய்யுங்கள்

பாடநெறியையும் நிறுவனத்தையும் தெரிவு செய்யுமுன்னர் உங்களுக்கு பொருத்தமான ஐந்து பாடநெறிகளைத் தெரிவு செய்யுங்கள். அவற்றில் மிகப் பொருத்தமானது என்ற ஒழுங்கில் பட்டியல் தயார் செய்து முதலாவது பாடநெறியை தெரிவு செய்யுங்கள்.

பாடநெறியை இறுதி செய்ய முன்னர் உங்கள் ஆசிரியர்கள் அல்லது பெற்றாருடன் அல்லது பொருத்தமான ஒருவருடன் கலந்துரையாடுங்கள்