Monday, February 11, 2019

கல்முனையில் 500 வருடங்கள் பழமைவாய்ந்த தமிழர்களின் சரித்திரம் கூறும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம்

ads
செ.துஜியந்தன்

கல்முனை நகரில் 500 வருடங்கள் மிகப்பழமை வாய்ந்த கல்முனை ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 08 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. தொடர்ந்து பதிமூன்று தினங்கள் நடைபெறும் ஆலய உற்சவத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்;கிழமை வேட்டைத்திருவிழா நடைபெறவுள்ளது. 18 ஆம் திகதி திங்கட்கிழமை முத்துச்சப்புற ஊர்வலம் கல்முனை நகர் ஊடாக வலம் வரவுள்ளது. இதில் கல்முனைவாழ் தமிழ் மக்களின் கலை பண்பாட்டு அம்சங்கள் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. 19ஆம் திகதி தீர்த்தோற்சவமும், 20ஆம் திகதி வைரவர் பூசையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்முனை ஸ்ரீ
தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மைவாய்ந்ததாகும்.

கல்முனை நகரில் புதுப்பொலிவுடன் கம்பீரமாய் காட்சியளிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் இங்குள்ள தமிழ் மக்களின் இருப்பை, பழமையை பறைசாற்றும் ஆலயமாக இருந்து வருகின்றது. ஒரு இனத்தின் இருப்பை அதன் மொழி, கலை.கலாசார, பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களே எடுத்துக்காட்டுகின்றன. அதில் முக்கியமான இடமாக வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவ் வழிபாட்டுத்தலங்களை வைத்துத்தான் எம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

கல்முனை வாழ் தமிழ் மக்களின் இருப்பையும், சரித்திரத்தையும் பறைசாற்றி நகரின் பிரதான வீதியில் கம்பீரமாய் தோற்றமளிக்கும் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சியும் அற்புமானதாகும்.
இவ் ஆலயம் பற்றி குறிப்பிடுகையில் 500 வருடங்கள் பழைமைவாய்ந்த ஆலயம் என திரு காசிநாதன் தனது ஏடுகளில் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய 500 ஆண்டுகளிற்குமுன் தற்போது பிரதான வீதியாக விளங்கும் அன்று நீர் வளம் பொருந்திய செழிப்பான நிலப்பகுதியை உள்ளடக்கியிருந்தமையால் தமிழ் மக்கள் இப்பகுதியில் வதிவிடங்களை அமைத்து பள்ளம் பார்த்து பயிர்செய்து மழைநீரை தேக்கிவைத்து பாசன வசதிக்காய் குளங்களை அமைத்து அருகாமையில் காடுகளை அழித்தும் வயல்களாக்கி வேளாண்மையில் ஈடுபட்டும் செல்வச்செழிப்புடன் வாழ்ந்துவந்தார்கள்.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்துவந்த பகுதியின் மத்தியில் குளக்கரையின் ஓரமாய் மணற்திட்டியும் மறுபுறம் ஆழமான பள்ளமும் அது நிறைய தாமரை மலர்களையும் கொண்ட தடாகம் போல் காட்சியளித்தது. வேளாண்மை செய்வதற்காக வயலுக்குச் செல்பவர்கள் இதன் கரையோரமாகவே செல்வர். ஒருநாள் இப்பாதையோரமாக கருங்கல் ஒன்று தென்பட்டது சிவனடியான் என்பவர் அக்கல்லினை கடந்து செல்லும் போது அவரின் வலதுகால் பெருவிரல் தாக்குண்டு இரத்தம் சொட்டியது. இதனால் கோபம் கொண்ட அவர் கல்லினைத்தூக்கி அருகாமையில் இருந்த ஆழமான பள்ளத்தினுள் எறிந்துவிட்டுச்சென்றார். மறுநாள் அக்கல் பாதையில் தென்பட்டது இதனால் ஆத்திரம் கொண்ட அவர் மீண்டும் தூக்கியெறிந்துவிட்டுச்சென்றார். இப்படியாக பல நாட்கள் தூக்கிவீசப்படுவதும் கல் மீண்டும் தென்படுவதுமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தது.

இது இப்படியிருக்க ஓர் இரவு சிவனடியானின் கனவில் ஓர் உருவம் தோன்றி அடியானே உன்னால் வீசப்படும் கல் சாதாரண கல் அல்ல எனக்கூறியதும் அக்கல் விநாயகப்பெருமானின் முகச்சாயலுடன் தாமரைதடாகத்தின் மேலால் மிதந்துவந்து தரையிலே அமர்ந்ததும் அவ்வுருவம் மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் கனவினில் கண்ட விநாயகப்பெருமானின் முகத்தினை ஒத்த கல் இருப்பதை கண்ட அவர் அயலில் உள்ளவர்களை அழைத்துவந்து தான் இரவு கண்ட கனவினை கூறியதும் எல்லோரும் சேர்ந்து அக்கல்லினை தூக்கி அருகிலிருந்த மணல்மேட்டில் விநாயகர் வடிவிலான அக்கல்லினை வைத்து பச்சை இலைகுழைகளினால் பந்தலிட்டு தரையில் கண்டெடுக்கப்பட்டமையால் தரவைப்பிள்ளையார் எனப்பெயர் சூட்டியும் வணங்கிவந்தனர்

இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த இந்துக்களின் வழிபாட்டிற்காக முதன்முதல் தோன்றிய வணக்கஸ்தலமாகையால் அயல் கிராமங்களில் வசித்து வந்த மக்கள் தினமும் கால்நடையாகவும் மாட்டுவண்டில்கள் மூலமாகவும் வந்துவணங்கிச்செல்வார்கள். தரவைப்பிள்ளையார் மீது நம்பிக்கைகொண்டு அருள் பெற்ற மக்கள் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்ற அவா ஏற்பட்டமையால் வைரமான மரங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு கோயில் அமைத்தார்கள். ஓர் சிவராத்திரி தினத்தன்று திரு. ஆறுமுகம் என்பவரின் தலைமையில் ஒன்றுகூடிய கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்;பட்டது.

1. ஆலயம் உள்ளபகுதி தாழ்நிலம் ஆகையால் மணலிட்டு சீராக்கல்
2. உறுதியான மரங்களைக்கொண்டு ஆலயம் புனரமைக்கப்படல்
3. பூசகர் தெரிவு மற்றும் தினப்பூசைக்கான ஏற்பாடு
4. தீர்த்தக்கிணறு ஒன்றினை அமைத்தல்

இத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்ட மக்கள் இரவு பகல் பாராது தங்கள் பங்களிப்புக்களைச்செய்தனர். ஆலயப்பகுதி மாட்டு வண்டில்கள் மூலமாகவும் கூடைகளிலும் மண்சுமந்து நிரப்பப்பட்டது. உறுதியான பாலை முதிரை இராணை போன்ற மரங்களால் ஆலயம் அமைக்கப்பட்டது. பூசகராக நாகைய்யா என்பவர் நியமிக்கப்பட்டு தினப்பூசையும் இடம்பெற்றது. பின்னர் பெருத்த மரங்களை தோண்டி தீர்த்தக்கிணறும் அமையப்பெற்றது.
தீர்மானங்கள் யாவும் தங்குதடையின்றி நிறைவேற்றப்பட்டமையால் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக பரிபாலனசபை ஒன்று நிறுவப்பட்டது. இதன் தலைவராக திரு. ஆறுமுகம் என்பவரும் காரியதரிசியாக திரு. மயித்தாரும் பொருளாளராக திரு. வ.சின்னத்தம்பியும் இவர்களுடன் மேலும் ஜந்து உறுப்பினர்களும் மக்களால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டு சபை இயங்கத்தொடங்கியது. இவர்கள் காலத்தில் முதன்முதல் நடைபெற்ற உற்சவம் 'திருவாதிரை' ஆகும். இக்காலப்பகுதியில்தான் தரவையில் கண்டெடுக்கப்பட்டமையாலும் பல சித்திகள் செய்தமையாலும் 'தரவைச்சித்தி விநாயகர் ' எனப்பெயர் சூட்டப்பட்டது.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பிலிருந்து தென்புறமாக அமைந்த பிரதான பாதையின் அருகேதான் ஆலயம் அமையப்பெற்றிருந்தது. வழிப்போக்கர்கள் வழிபடவும் கதிர்காமம் போன்ற தலங்களுக்கான யாத்திரை செய்வோர் தங்கிச் செல்லும் மையமாகவும் காணப்பட்டது. மட்டக்களப்பின் மாகாண அதிபராய் இருந்த சேர். கென்றி வோட்ஸ் என்பவர் தென்பகுதிக்கு குதிரை வண்டி மூலம் தனது கடமைகளை மேற்கொள்வது வழக்கம். அப்படி ஒரு நாள் தெற்குப்பயணத்தினை மேற்கொள்ளும் போது ஸ்ரீ தரைவச்சித்தி விநாயகர் ஆலயத்தினை அண்டியதும் திடீரென குதிரை நின்றுவிட்டது.

குதிரையோட்டி எவ்வளவோ முயன்றும் வண்டி நகரவில்லை. இறங்கிவந்து பார்த்தபோது கோயிலில் பூசை நடைபெறுவதை கண்ட குதிரையோட்டி மாகாண அதிபருக்கு அதனை தெரியப்படுத்தியதும் அவர் இறங்கிவந்து பூசையில் கலந்துகொண்டு வண்டியில் ஏறியதும் குதிரை நகரத் துவங்கியது. தான் மேற்கொண்ட பயணத்தை முடித்து மீண்டும் வரும்போது ஆலயத்தின் முன் நின்றவர் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து ஆலயத்தினை பராமரிக்கும் சமூகத்தினரின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக அன்றைய காலப்பகுதியிலிருந்த பரிபாலனசபைக்கு சட்டபூர்வமான அதிகாரத்தினை வழங்கி ஆலயத்தின் தென்புறம் தற்போதய செய்லான் வீதியின் மேற்குப்பக்கம் இருந்த வடிகான் வாயிலிலிருந்து வடக்கு நோக்கி ஏழு சங்கிலிப்பூமியும் ஆலயத்தினை பரிபாலிப்பதற்காக அக்காலத்தில் குடியிருந்த மக்களுக்கு 73 ஏக்கர் விவசாய நிலத்தினையும் சட்டபூர்வமாக வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட நிருவாகத்தினர் கோயில் பூசகரின் வேதனம் கொடுப்பதற்காக 5 ஏக்கரினையும் உதவிப்பூசகருக்கு 1 ஏக்கரினையும் கல்முனை 01 பிரிவில் அமைந்துள்ள ஆலயத்தில் எம்மினத்தவர் இணைந்திருந்தமையால் அதற்கென ஒரு ஏக்கரினையும் வழங்கியபின் மிகுதியை வருடாந்தம் உரியசந்ததியினர் சுழற்சிமுறையில் பங்கீடு செய்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுவரை இம்முறை வழக்கத்தில் உள்ளது.

ஆலயத்தின் மீது பற்றுதிகொண்ட மாகாண அதிபர் நிரந்தர ஆலயம் அமைப்பதற்காக ஒரு சிறந்த பறங்கி இனத்தவ சிற்பக்கலை கலைஞரை அறிமுகப்படுத்தி கொடுத்ததின்பேரில் மிகவும் பெறுமதி வாய்ந்ததும் மிகவும் அழகிய செயற்பாடுகளுடன் கூடிய நிலைகளையும் பிரம்மிக்கத்தக்க வகையிலான சிற்பக்கலையம்சம் பொருந்திய மரத்தினாலான தூண்களையும் நிறுவி ஆலயத்தினை ஆச்சரியப்படும் அளவிற்கு அழகுகள் செய்துதந்தார். பல வருடங்கள் தொடர்ந்த ஆலயப்பணி கற்பக்கிரகம் அர்த்த மண்டபம் மகாமண்டபம் நிருத்த மண்டபம் பரிவாரக் கோயில்கள் மடப்பள்ளி உட்பிரகாரம் ; சுற்றுமதில் போன்றவைகளை உள்ளடக்கியதும் கட்டிடங்கள்; ஸ்தூபிகள் சிற்பங்களாலும் ஓவியர்களின் கைவண்ணமும் பெற்றிருந்ததால் நித்திய நைமித்திய கிரியைகள் செவ்வனே நடைபெற்றுவந்தது.

இவ்வாலயம்; அமையப்பெற்ற இலங்கைத்தாயின் கிழக்குக்கரையோரப்பகுதி பல இயற்கை அழிவுகளிற்கு உள்ளாகியது குறிப்பாக 1907இல் சூறாவளி 1915இல் பெருஞ்சூறாவளி 1957இல் பெரு வெள்ளம் மற்றும் 1978இல் பெருஞ் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களில் பரந்தவெளியிலிருந்த கோயிலுக்கும் அதுசார்ந்த கட்டிடங்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை இது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஆனால் 1986 காலப்பகுதியில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தின் போது 1986.12.13 அன்று ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் மூல விக்கிரகத்தின் கழுத்தில் சங்கிலியால் பிணைத்து உழவு இயந்திரம் கொண்டு இழுத்து அழுக்குக்கானுக்குள் போட்டதுமல்லாது உள்ளடங்கிய கட்டிடங்கள் மதில்கள் யாவும் தரைமட்டமாக்கப்பட்டது. அதே தினத்தில் இவ்நிருவாகத்தின் பொறுப்பிலிருந்த கடற்கரை கண்ணகை அம்மன் ஆலயமும் நாசகார கும்பலினால் இடித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று புதுப்பொழிவுடன் காட்சிதரும் கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயமானது தமிழ் மக்களின் வரலாற்று தடயங்களில் ஒன்றாக மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் தினமும் கூட்டுப்பிரார்த்தனை, சமயசொற்பொழிவுகள் ஆகியன நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் 500 வருடங்கள் பழமைவாய்ந்த தமிழர்களின் சரித்திரம் கூறும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் Rating: 4.5 Diposkan Oleh: Office
 

Top