காட்டு மிராண்டிதனமான தாக்குதலில் 5 மாணவர்கள் வைத்தியசாலையில்

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களும் மற்றும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை பாடசாலையின் வாயிற்கதவை மூடி பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி தற்போது கடந்த ஓரிரு தினங்களாக நடைபெற்று வருகின்றது.

அதன் ஒருகட்ட விளையாட்டுப்போட்டி அருகிலுள்ள முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் அம் மைதானத்திற்குள் திடீரென புகுந்த சிலர் அங்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் முதலைக்குடா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேற்படி பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

 இவ்வாறு மாணவர்கள் மீது தமது காட்டு மிராண்டித் தாக்குதலை மேற்கொண்டவர்களை உடன் கைது செய்யுமாறும், இவ்விடயத்தில் பொலிஸார் துரிதமாகச் செயற்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்குழுவினர் நிலைமையை ஆராய்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி பாடசாலை மாணவர்களைத் தாக்கியவர்கைள கைது செய்வதாக உத்தரவாதமளித்துள்ளனர்.


மேலும், குறித்த மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார்.

பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதிவழங்கு, மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைது செய், முன்னேறும் வலயம் இது முதுகில் குத்தாதே!, உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.