மகிளுர்முனை சக்தி வித்தியாலய வீதியை தார் வீதியாக மாற்றித்தருமாறு கல்விச்சமூகம் கோரிக்கை!




ரவிப்ரியா

ஓந்தாச்சிமடம் மகிளுர் பிரதான வீதியில் இருந்து ஆரம்பமாகி மீன்பிடி துறைமுகத்தில் முடிவடையும் சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நீளமான மகிளுர்முனை சக்திவித்தியாலய வீதியை தார் வீதியாக மாற்றித் தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் பிரதேச கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ் வீதியை தினமும்  சுமார் 300 மாணவர்களும், பாடசாலையின் 25 ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் மழை காலங்களில் இவ் வீதியால் மாணவ சீருடை அணிந்தோ அல்லது சப்பாத்து அணிந்தோ இவ்வீதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பிறேமதாச காலத்து வீடமைப்பு திட்டமும் (50வீடுகள்) இவ் வீதியை அண்டியே இருக்கின்றது. இவ்வீதி மீன்பிடி துறைமுகத்தில் முடிவடைவதால் மீனவர்களுக்கும் இது முக்கிய வீதியாகக் காணப்படுகின்றது.

அத்துடன் தபாலகம், இரு கிறிஸ்தவ ஆலயங்கள், விஸ்ணு ஆலயம் என்பனவும் இவ் வீதியிலேயே அமையப் பெற்றுள்ளது. இவ்வீதி பல வருடங்களாக சீர் செய்யப்படாமல் இருக்கின்றது. இதனால் இவ் வீதியை தினமும் பயன்படுத்தும்; மாணவர்கள் ஆசிரியர்கள், மீனவர்கள். மற்றும் பொதுமக்கள் என பல தரப்பும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே கிராமத்தின் அத்தியாவசிய தேவையாக இதைக் கருத்திற்கொண்டு இவ்வீதியை தார் வீதியாக மாற்றித் தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் பிரதேச கல்விச் சமூகம் கோரிக்கை விடுக்கின்றது. .