பெரியகல்லாறு ஊர்வீதியை காப்பற் வீதியாக மாற்றித்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை




ரவிப்ரியா

மண்முனை தென் எருவில் பிரதேச சபைக்குட்பட்ட பெரியகல்லாற்றில் உள்ள வீதி அபிவிருத்தித்திணைக்களத்திற்குச் சொந்தமான 1.3 கிலோ மீற்றர் நீளமான காட் றோட் என அழைக்கப்படும் ஊர்வீதியை காப்பற் வீதியாக அமைத்துத் தருமாறு இங்கள்ள பொதுமக்களும் அமைப்புக்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது நாடு தழுவிய ரீதியில் கிறவல் மற்றும் தார் வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றம் பெற்றுவரும் நிலையில் குறித்த தார் வீதியானது, நீண்டகாலமாக கவனிப்பாரற்று போக்குவரத்துச் செய்யமுடியாத நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது. பள்ளமும் படுகுழியும் நிறைந்த வீதியாகக்காட்சியளிக்கின்றது. மழைகாலங்களில் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நோயாளிகள், பக்தர்கள்.மாணவர்கள் மற்றும் பாதசாரிகளம பாதசாரிகளும் சாரதிகளும் பலத்த அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.

பெரியகல்லாறு பிரதான வீதிக்குச் சமாந்தரமாக கிழக்குப் பக்கமாக ஆலடிச் சந்தியில் இருந்துஆரம்பிக்கும் இவ்வீதி கிராமத்தை முழுமையாக 1.3 கி.மீ ஊடறுத்து பிரதான வீதியை ஊர் முடிவக்கு அண்மித்துச் சந்திக்கின்றது.

பிரதான வீதியிலும் பார்க்க பொதுமக்களால் பாதுகாப்பிற்காக  இவ் வீதியே பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வீதியில் சேமக்காலை, மூன்று பிரதான பாடசாலைகள், வைத்தியசாலை, சமுர்த்திவங்கி, பொது விளையாட்டு மைதானம், பிரசித்திபெற்ற 5 இந்து ஆலயங்கள் 4 கிறிஸ்தவ ஆலயங்கள்,பொதுசந்தை மற்றும் கடற்கரைக்குச் செல்வதற்கு இந்த வீதி பொதுமக்களாலும், மாணவர்களாலும்விளையாட்டு வீரர்களாலும், பக்தர்களாலும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே அவர்கள் இவ்வீதியைப் பணன்படுத்தும்போது பலத்த அசௌகரியங்களுக்கும், சிரமங்களுக்கும்முகம் கொடுத்து வருகின்றனர்.

அயற் கிராமங்களில் இருந்து வைத்தியசாலை மற்றும் சமுர்த்தி வங்கிக்கு வரும் பொதுமக்களும்இவ்வீதியையே முழுமையாகப் பயன்படுத்துகின்றனர்.

எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இவ் வீதி இன்னமும் காப்பற் வீதியாக மாற்றப்படால் இருப்பது குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர். இவ்விடயத்தில் புதிய கௌரவ ஆளுனர்  அவர்களும் தனது கவனத்தைப் பூரணமாகச் செலுத்தவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். புதிய நிதி ஒதுக்கீட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.