விருப்பமான ஆசிரியர்களை மாத்திரம் சொந்த மாவட்டத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும்.ஆளுநரின் உத்திரவு முரணானது.


கிழக்குமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களது மாவட்டங்களுக்கு கட்டாயம் இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டு;ம் எனக் கிழக்குமாகாண  ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்  அறிவித்துள்ளமை கிழக்குமாகாண கல்வி வளர்ச்சியில்  பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகக் கருதவேண்டியுள்ளது. அதாவது கடமை உணர்வுடன் வேறுமாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பியவர்கள் மாத்திரம் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு செல்வதற்கான உத்தரவை ஆளுநர் விடுப்பது பொருத்தமானதாக அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தழிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.


கிழக்குமாகாணத்தில்  கடமையாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தங்களது மாவட்டங்களில்  இடம்மாற்றம் பெற்றுச் செல்லவேண்டும் என ஆளுநரின் அறிவிப்பை கண்டித்து அது தொடர்பாகக் வியாழக்கிழமை இரவு  கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அவர் மேலும்  தெரிவிக்கையில் ஆளுநர் மேற்கொள்ளவுள்ள  ஆசிரியர் ; இடமாற்றமானது கிழக்குமாகாணத்தில் இருக்கும் மாவட்டங்களான திருகோண மலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆளணி வெற்றுடங்களுக்கு ஏற்ப  பல வருடங்களுக்கு முன்னர் நியமனம் பெற்றுக் கடமையாற்றி வரும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கு முரணாக கட்டாயமாக அவர்களது சொந்தமாவட்டங்களுக்குச் செல்லவேண்டும் எனத் தெரிவித்திருப்பது பொருத்தமானதல்ல
  ஏன் எனில் கல்வித்துறையை பொறுத்தளவில் ஒரு மாவட்டத்தில் அதிகமான கணித ஆசிரியர்கள் உருவாகலாம் இன்னுமொரு மாவட்டத்தில் அதிகமான விஞ்ஞான ஆசிரியர்கள் உருவாகலாம் வேறு சில மாவட்டங்களில் ஆங்கில மற்றும் ஏனைய பாடங்களுக்கான ஆசிரியர்கள் உருவாகலாம் எனவே இவர்கள் அனைவரையும் அனைத்து மாவட்டங்களுககும் நிலவுகின்ற ஆசிரியர் குறைபாடுகளை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சே அவர்களை வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

இவ்வாறு கடமையாற்றும் போது அவர்கள் விரும்பினால் மாத்திரம் அவர்களது மாவட்டத்திற்குச் செல்வதற்கு அனுமதி வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை தங்களது மாவட்டத்திற்குச் செல்வதற்கு விரும்பாது அதிகஷ்டப் பாடசாலைகளில் நீண்டகாலம் கற்பித்துவரும் ஆசிரியர்களை கட்டாயத்தின் பேரில் இடமாற்றம் செய்வது கிழக்குமாகாணத்தின் கல்வி வளர்சிக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் பெற்றோர்களது எதிர்ப்பையும் ஏற்படுத்தி  பாரிய  போராட்டங்களையும்  ஏற்படுத்தக்கூடும்
அதே வேளை ஆளுநர் அவர்கள் பாடசாலை ஆரம்பித்து இடைநடுவில் இவ்வாறான இடமாற்றத்தினை மேற்கொள்வதனால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகக் கூடும் அதாவது ஒரு இடமாற்றம் செய்வது என்றால்  வருட ஆரம்பத்தில் செய்யவேண்டும் அதனை விடுத்து   இடைநடுவில் இடமாற்றங்களை மேற்கொள்வது பொருத்தமானதாக இல்லை.
 இதனைக் கருத்தில் கொண்டு சொந்த மாவட்டத்திற்கு கடமையாற்ற விரும்பும் ஆசிரியர்களை மாத்திரம் இடமாற்றம் செய்து தங்களது மாவட்டத்திற்குச் செல்லாது வெளிமாவட்டத்தில் அதிகஷ்டப் பகுதிகளில் கடமையாற்ற விரும்பும் எந்த ஆசிரியர்களையும் கட்டாயமாக இடமாற்றம் செய்து கல்வியை சிரழிப்பதனை நிறுத்தவேண்டும்.
 இதற்கான தீர்வினை உடனடியாக  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் தலையிட்டு தங்களது மாவட்டத்திற்குச் செல்லவிரும்பும் ஆசிரியர்களை மாத்திரம் இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்