இனங்களுக்கு இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான தேசப்பற்று நாட்டில் இல்லை



இனங்களுக்கு இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவதற்கான தேசப்பற்று நாட்டில் இல்லை என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் ராஜித்த சேனாராட்ன தெரிவித்துள்ளார்.

தேசியக் கொள்கை இல்லாத அரசியல் நாட்டின் சீர்குலைவிற்கான காரணமாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சிலர் இனம், மதம், குலம் போன்ற விடயங்களை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இனங்களுக்கு இடையில் வேற்றுமை ஏற்படுவதற்கான பிரதானகாரணியாக இது அமைந்திருக்கிறது. தென்பகுதியை போன்று வடபகுதியும் அபிவிருத்தி செய்யப்படுவது அவசியமாகும். வடபகுதியின் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம்ஆரம்பிக்கும்போது சிலர் இனவாதத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள். கடந்த காலத்திற்கு மாத்திரம் அவசியமாக இருந்த சில இராணுவ முகாம்கள் தற்சமயம் அகற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த காணிகளை அபிவிருத்திக்காக பயன்படுத்துவது அவசியமாகும். வடபகுதிக்கு சில இராணுவ முகாம்கள் தற்சமயம் அவசியம் கிடையாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். இதன் மூலம் வடபகுதி மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.