பயங்கரவாத தடைச்சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை எதிர்ப்போம் என மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு



(க. விஜயரெத்தினம்)

அரசாங்கம் நாட்டிலுள்ள மக்களின் நன்மைகருதி பயங்கரவாதச் சட்டம்,மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்கள் பொதுமக்களின் நன்மைகருதியும்,நாட்டினது இறையாண்மை பாதுகாக்கும் நோக்கிலும் குறித்த இருசட்டங்களையும் நீக்குமாறு மட்டக்களப்பில் பாரியதொரு கவனயீர்ப்பு கண்டன ஆட்பாட்டம் ஒன்று இன்று(22.2.2019)காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்,சிவில் அமைப்புக்கள்,பனிச்சையடி கிராமமட்ட விழிப்புக்குழு,ஒன்றிணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கண்டன ஆட்பாட்டத்தை நடாத்தியிருந்தார்கள்.இவ் ஆட்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவி திருமதி.செல்வி மனோகர்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,இஸ்லாமிய இந்து,கிறிஸ்தவ மதத்தலைவர்கள்,பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தமது கண்டனத்தை தெரிவித்தார்கள்.

"இராணுவ அரசு எமக்கு வேண்டாம்" ,"அநீதியான சட்டங்கள் சட்டங்களே அல்ல அதற்கு மக்கள் கட்டுப்பட மாட்டோம்","PTA, CTA சட்டமானது ஜனநாயகத்துக்கான சாவுமணி" ,"பாராளுமன்ற உறுப்பினர்களே நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ஜனநாயகத்தை விற்க வேண்டாம்", "பயங்கரவாதச்சட்டமும்,பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமும் எமக்கு வேண்டாம்", "பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நிரந்தர அவசரகால நாடொன்றுக்கு வழிவகுக்கும்" ,"தேவையற்ற கைது சித்திரவதை,பொலிஸ், இராணுவ அராஜகம் இவை அனைத்தும் பயங்கரவாதச்சட்டமாகும்" ,"நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகளாக்கும்" என ஆட்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறும், தமது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தார்கள்.

குறித்த பயங்கரவாதச்சட்டம்,பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை ஜனாதிபதி, பிரதமர் போன்றோர்கள் கவனத்தில் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பு,இறைமைக்கு குந்தகம் விளைவிக்காமல் நீக்கவேண்டும் என்பதுதான் இந்த ஆட்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.