இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வருடாந்த கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மரணமாஸ் அணி சம்பியனானது


(சிவம்)

இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாணப்பிரிவின் வருடாந்த கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மரணமாஸ் அணி  சிக்ஸ் தண்டர்ஸ் அணியை வெற்றி கொண்டு நடப்பு ஆண்டக்கான சம்பியனாகத் தெரிவானது.

அணிக்கு 5 பேர் கொண்ட ஆறு ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் 7 அணிகளுக்கிடையேயான மோதல் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது.

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் 65 பொறியியலாளாகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசில்களை இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் கிழக்கு மாகாண தவிசாளர் வி.ராஜகோபாலசிங்கம் மற்றும் மாவட்ட இணைத் தவிசாளர் வி.கருணநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

எந்திரி வி.ராஜகோபாலசிங்கம்  வெற்றிக் கிண்ணங்களை   வழங்கி வைத்து உரையாற்றுகையில் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள ஏனைய தொழில்சார் அமைப்புக்களுடன் இணைந்து சினேகபூர்வ போட்டிகளை நடாத்துவதன்மூலம் எமக்கிடையேயான புரிந்துணர்வுகளை மேலும் அதிகரிப்பதோடு நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் முகங்கொடுப்பதற்கான உந்து சக்தியை எமக்கு இத்தகைய போட்டிகள் அளிக்கின்றன எனவும் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.