கல்முனை மாநகர மேயருக்கு எதிராக பெரியகல்லாறு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் !




கல்முனை மாநகர மேயர் அத்துமீறி செயற்படுவதாக தெரிவித்து, மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்முனை மாநகரசபையினால் பெரியகல்லாறு பகுதியூடாக குப்பை கொண்டு செல்லும் லொறியினை பிரதேச மக்கள் நேற்று தடுத்து நிறுத்தியுள்ளனர், இதன் காரணமாக மாநகர சபை மேயருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய மக்கள் இன்று (வியாழக்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது குறித்த பகுதிக்கு விஜயம் செய்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆர்பாட்டத்தின் போது எமது எல்லையை உறுதிப்படுத்துங்கள், உங்கள் கழிவுகளை எங்கள் தலையில் கொட்டாதீர்கள், எமது குழந்தைகளை சுவாச நோய்க்கு பலியாக்காதே, பெரிய கல்லாறின் சூழல் சுற்றாடலை அசுத்தம் செய்யாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.