யானையிடமிருந்து தங்களை பாதுகாத்து தருமாறு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!



மு.கோகிலன்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை பிரதேச மக்கள் இன்று புதன் கிழமை (20) யானையிடமிருந்து தங்களை பாதுகாத்து தருமாறு கோரி கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மேற்குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயார் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் பிரதேசத்தின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தனையும் ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
இன்று காலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கூடிய மக்கள் வாசங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் உயிர்கள் மிருகங்களுக்கு பலி கொடுக்கவா.. யானையினால் தொடரும் உயிரிழப்பை தொடர்ந்து தடுத்து நிறுத்து. யானைகளை சரணாலயத்தில் கொண்டு விடு இல்லேயேல் எங்களை சரணாலயத்தில் அடைத்து விடு.யானைகளை பாதுகாக்கும் அரசே மனிதர்களையும் காப்பாற்று, தமிம் அரசியல் வாதிகளோ யானையுடன் கொண்டாட்டம் தமிழ் மக்கள் திண்டாட்டம்.என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

மாலை நேரமாகியதும் யானைகள் ஊருக்குள் வருவதனால் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமது விவசாயம், சிறுதோட்டப்பயிர்களை நீண்டகாலமாக சேதப்படுத்தி வருவதாகவும் அதற்கான தீர்வு எதுவும் கிடைக்க வில்லையென தெரிவிக்கின்றனர்.மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பல்வேறு தரப்பினர்களினாலும் இப்பிரச்சினை தொடர்ந்து முறையிடப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.தங்களுக்கு யானையிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவுவிடம் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் யானை வேலி அமைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சினை அரசாங்க அதிபர் ஊடாக கேட்டுக்கொள்வதாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்