கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களின் செயற்பாடுகள் மூலம் சிறுவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்



ரவிப்ரியா

இன்று சிறுவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். சிறுவர் துஸ்பிரயோகம் தினச் செய்தியாக நாளும் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இன்னிலையில் அவர்களின் பாதுகாப்பு நிச்சயமற்றதாக மாறிவருகின்றது. எனவே அதை உறுதிப்படுத்தும் பாரிய முக்கிய பொறுப்பை கிராம சிறுவர் அபிவிருத்திக் குழுக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற் குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கு உலக தரிசனத்தின் அனுசரணையுடன் காகிதாதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு செயலக மண்டபத்தில் நடைபெற்றபோது,அதற்கு தலைமை தாங்கிப் பேசிய பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

நீங்கள் செயற்திறன் மிக்க குழுக்களாக மாற வேண்டும். நீங்கள் பிரச்சனைகளை இனம் காண்பதற்கும்.அறிக்கையிடுவதற்கும் உரிய தொடர்புகளை மேற்கொள்வதற்கம் காகிதாதிகள் அவசியம்.;எனவேதான் உங்கள் செயற்திறன்களை திறம்பட மேற்கொள்வதற்காக அனைத்துக் குழுக்களுக்கும் இன்று உலக தரிசன அமைப்பினரால் காகிதாதிகள் வழங்கி வைக்கப்படுகின்றது. எனவே நீங்கள் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்.

சிறுவர்கள் உண்மையிலேயே மலர் போன்றவர்கள்.மலர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பும்  பராமரிப்பும் கொடுக்கின்றோமோ அவ்வளவு அழகாகவும், ஆரோக்கியமாகவும் அப் பூக்கள் மலரும். எமக்கு உண்மையான மன மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஏற்படுத்தும். இதே போல் தான் நாமும் அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் தான் அவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது என்பதை மறந்து விடலாகாது.

குடும்பங்களைப் பொறுத்த வரையில் பெற்றோரே முதன்மையான பாதுகாவலர்கள். அதன் பின் பாடசாலைகள் பிரதான பங்கு வகிக்கின்றது .இதே போல் சமூக மட்டத்தில் இக் குழுக்கள் சிறப்பாக இயங்கும்போது, கிராமத்தில் உண்மையான சிறுவர் பாதுகாப்பை எற்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

ஏனைய குழுக்கள் பல்வேறு  நோக்கங்களோடும், சில தேவைகளுக்காகவும்; சிலவேளை இலாப நோக்கோடும் கூட இயங்கலாம். ஆனால் இக்குழுக்களின் செயற்பாடானது முழுக்க முழுக்க சிறுவர் அபிவிருத்தி என்ற இலக்கை அடைவதற்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே உங்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் மூலம் சிறுவர்களின் எதிர்காலம் ஆத்மதிருப்தி அளிப்பதாகவும்,சமாதானம் சகவாழ்வ நிறைந்ததாகவும்,காணப்படுவதடன், கடவுளின் வெகுமதிக்குரியதாகவும் மாறும். முற்பகல் செய்யின் பிற்பகல் கடவுளின் அருளால் பிரமாத அறவடையும் கிடைப்பது உறுதி.

எனவே நீங்கள் இனம் காணும் பிரச்சனைகளை செயலகத்திற்கு உடனுக்கு டன் அறிவிப்பதுடன்,பல்வேறு மட்ட திணைக்கள அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவதும் முக்கியம்.

சிறுவர்களை கனிவுடன் அணுக வேண்டும். கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தவோ, ஒப்பீட்டு ரீதியாக அவர்களை சுட்டிக்காட்டவோ கூடாது. எனவே உங்களின் கையில் தான் சிறவர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்படடிருக்கின்றது என்பதை உணர்ந்து மிகுந்த சமூகப் பொறுப்பு டன் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்

இந் நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை இணைப்பாளர் வி.குகதாசன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வி.குகராஸ், உலக தரிசன திட்ட உத்தியோகத்தர் எஸ்.தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். குழுக்களுக்கு காகிதாதிகள் அடங்கிய பொதிகளும் சம்பிரதாயபூர்வமாக வழங்கிவைக்கப்படடது.