வாழைச்சேனை வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை




வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்து தரப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த வைத்தியசாலைக்கு, 12 வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாகாண வைத்தியசாலைகளிலும் நிறைய குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஆளணிப்பற்றாக்குறை பௌதீகப்பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

மத்திய அரசுடன் உறவைப்பேணி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி முடியுமானளவு விரைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல நிர்வாக ரீதியான பிரச்சனைகள், இன ரீதியான முரண்பாடுகள், கல்வி, சுகாதாரம் என சகல துறைகளிலும் இருக்கின்ற சகல பிரச்சனைகளையும் தீர்த்துவைக்க வேண்டுமென செயற்பட்டு வருகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் ஐந்து வலயங்கள் ஆசிரியர் பற்றாக்குறையால் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்ய பல முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றேன்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்தி பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.