இலக்கியப் பணியில் முழுநிறைவுகண்ட அமரர் ஆறுமுகம் -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-


இலக்கியப் பணியில் முழுநிறைவுகண்ட
அமரர் ஆறுமுகம்


4வது நினைவுதினக் (21.02.2019) கட்டுரை
 

 -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-   


இன்று நம்மைவிட்டு தொலைதூரம் பயணித்துவிட்ட தலைசிறந்த கிழக்கிலங்கையின் இலக்கியப் படைப்பாளி எனது ஆருயிர் நண்பர் ஆறுமுகம் அவர்களை நினைக்கும் தோறும் பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதையொன்று எனது மனக்கண்ணில் நிளலாடும். 

உடைந்த கம்பிகள் மீ;ட்டுவது வசந்தராகம்
கல்லின் இதயத்தில் பிறந்தது ஒரு புதியமுளை
உதிர்ந்தன அதன் பழுப்பு இலைகள்
     இரவிலும் பாடுது குயில்
     கிழக்கில் தெரிகின்றது அருணோதயம்
     நான் புதியபாடலைப் பாடுகின்றேன்
     கலைந்துவிட்ட கனவுகளை எண்ணி யார் வருந்துவது?
     உள்ளிருந்து சீறிப்பாயும் கவலைகளால்
     எனது இமைகள் அடித்துக்கொள்ளலாம்
     தோற்றேன் எனநான் நிச்சயம் சொல்லமாட்டேன்
     சச்சரவுக்கும் இடம்தரமாட்டேன்
     காலத்தின் மண்டையோட்டில்
     அழித்து அழித்து எழுதிப்
     புதிய பாடல்கள் புனைவேன்

பயந்து கிடப்பவன் இயக்கமின்றிக்கிடப்பான் என்றால் வெறும் நம்பிக்கையை சுமந்து கொண்டிருப்பவனும் இயக்கமின்றித்தான் கிடப்பான். ஒரு படைப்பாளியிடம்தான் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையிருக்கும். அதே சமயம் என்னவாகிப்போகுமேர் என்ற கவலையும் இருக்கும். ஆனால் நம்பிக்கையில் கனவுகண்டுகொண்டு பயத்தில் உறைந்துபோய்க்கிடக்கமாட்டான். ஏனெனில் எதிர்காலத்துக்கென செயல்படுகின்றவன் அவன். அப்பாடலைக் கவனித்துப்பாருங்கள் கனவுகளில் சில கலைந்துபோய்வி;ட்டன. நிறைவேற்றங்கள் சிலவும் தவறிப்போய் பெருமூச்சை வரவழைக்கின்றன. எனினும் தீர்மானத்தைப்பாருங்;கள்.

ஆறுமுகம் பிறந்தது 1949. அவரது கல்விக்காலம் 1968 வரை கழிகின்றது. அதன்பின் 1969ல் வங்கிச்சேவையில் அவர் இணைந்துகொள்கின்றார். அவரது தொடக்க கால.ப் பணி   பெரும்பாலும் கல்விப்பணியாக அமைய 1980களின்பின் அவரது இலக்கியப்பணி தோற்றம் பெறுகின்றது.

கல்வி, சமூகம், சமயம், கலைஇலக்கியம், அரசியல் எனப் பல தளங்களில் கால்பதித்தவர் ஆறுமுகம். இலக்கியம், இலக்கிய வட்டம், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள், வெளியீட்டு நிறுவனம், புத்தகசாலை என தனது எண்ணங்களை உலாவவிட்டவர். தனக்கு இணக்கமானவர்களுடன் இணைந்துகொண்டு தொட்டபணிகளைத் துலங்கிடச்செய்த பெருமைக்கு அவர் உரியவர்.
                                                       
அவரது கலை இலக்கியப் பணிபற்றி ஒரு முன்னுரை கூறுவதாயின் ' ஆறுமுகம் கலை இலக்கிய சுவைஞர்கள் உள்ளத்தில் தேன்பிலிற்றும் ஒரு திருப்பெயர். எண்பதுகளின் தொடக்கம் முதல் மட்டக்களப்பின் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துக்கொண்ட ஆளுமை. முகமறியாத பலருக்கு முகவரிகொடுத்த தாய்மை. பத்தரை மாற்றுப் பதிப்புகளுக்கு ஆயிரம் ஆயிரமாக பணத்தை அள்ளிக்கொடுத்து விபுலத்தின்மூலம் அடியெடுத்துக்கொடுத்த அகரம். விளைவுகளையும் விபரீதங்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அயர்வறியாமல் உழைத்த சிகரம். தனது உறவுகளின் வாழ்வின் தீராத பக்கங்களையும் ஓயாது நேசித்த உன்னத உயிர்ப்பு.' இவ்வாறு துணிவுபடக் கூறலாம்.

ஆறுமுகம் அவர்களது கலை இலக்கியப் பணிகளை மூன்று பிரிவுகளி;ல் நம்மால் பாகுபடுத்த முடிகின்றது.
01. சுயமான செயல்பாடு
02. இலக்கிய அமைப்புகளூடாக மேற்கொண்ட பணிகள்
03. விபுலம் வெளியீ;ட்டு நிறுவனத்தின் மூலம் மேற்கொண்ட பணிகள்
                                                                                                                                           
அவரது சுயசெயல்பாடானது பெரும்பாலும் தனிமனிதப் பணியாகவே அமைந்திருந்தது. குறித்துச் சொல்வதாயின் அவரது கிராமம் மற்றும் அவரது பிரதேசத்துடன் தொடர்புபட்டதாக அதனை வரையறை செய்து கொள்ளலாம். மட்டக்களப்புத் தேசத்தில் தனியான சிறப்பியல்புகளை உள்ளடக்கிய பாரம்பரியம்மிக்க பழந்தமிழ்க் கிராமம் ஆறுமுகத்தின் கன்னன்குடா. பிற சக்திகளினால் சேதமடையாத அதன் பண்பாட்டுச் சொந்தக்காரர்களை இன்றும் நம்மால் காணமுடியும். ஆறுமுகத்தையும் ஊரையும் யாருமே வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆறுமுகம் என்றால் நமது நினைவுக்கு வருவது கன்னன்குடாவாகத்தானிருக்கும். அதேபோல் கன்னன்குடாவென்றாலும் ஆறுமுகம்தான் நமது மனக்கண்ணில் நிளலாடுவார். தனது மண்ணின் கிராமியக் கலைவடிவங்களை வளர்த்தெடுப்பதில் ஆறுமுகத்தின் பங்கும் பணியும் அவரது தொடக்ககாலப் பணியாக அமைந்திருந்தது. கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீ;ச்சரம் போன்றவை இதற்கு முக்கிய களமாயமைந்தன.
                                       
தென்மோடிக் கூத்தின் சிறப்பியல்பினை மட்டக்களப்புத் தேசத்தில் இன்றும் நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் பெருமை கன்னன்குடாவுக்கே உண்டு. கூத்துக் கலையை வளர்த்தெடுப்பதிலும் தனது பிரதேசத்தின் கூத்துக் கலைஞர்களை நாடறியச் செய்வதிலும் அவர் ஆற்றிய பணி மிகவும் மகத்துவமானது. பல்கலைக்கழகப் படிகளில் ஏறாத அவரின் வீ;ட்டுப் படியேறி பல்கலைக் கழகமே படிக்கின்ற அளவுக்கு அவரது ஆற்றல் வியாபித்திருந்தது. எனினும் நமக்கே உரித்தான கூத்துக்கலையை நவீனப்படுத்துவதெனில் அதன் பாரம்பரியமிக்க மரபுவழியை அடித்தளமாகக்கொண்டே கட்டியெழுப்பவேண்டும் என்பதில் ஆறுமுகம் உறுதியாக செயல்பட்டார். அவரது பொதுவான நோக்கம் நமது மரபு மாறாமல் கூத்துக் கலையை நவீனத்துவப்படுத்துவதால் அதனைத் தொடர்ந்தும் பாதுகாக்கமுடியும் என்பதாகவே அமைந்திருந்தது

நண்பர் ஆறுமுகம் அவர்களால் கன்னன்குடாவில் 2003ல் மேடையேற்றப்பட்ட சாம்பேந்திரன் முழுநீள தென்மோடி நாடகம் முழுக்கமுழுக்க மரபுவழி உருவாக்கம் பெற்றமை பலராலும் அறியப்பட்டதாகும். கண்ணகி அம்மன் ஆலயத்தில் அவரது ஓழுங்கமைப்பில் சிறப்பான பொங்கல் பூiயுடன் இடம்பெற்ற 'சட்டம் கொடுக்கும் நிகழ்வு' என்றும் நமக்கு பசுமையான நினைவாகவே இருக்கும். அப்பிரதேச அண்ணாவிமார், கூத்துக் கலைஞர்கள், தமிழார்வலர்கள், ஊர்ப்பெரியவர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பத்திரிகைத் துiறையினர்  என நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிகழ்வில் முன்னீடுகாரராக அப்பிரதேச தலைசிறந்த அண்ணாவியாரும் அனுபவம் மிக்க மரபுவழிக் கூத்துக் கலைஞரும் 90 வயதை தாண்டியவருமான பெரியார் நோஞ்சிப்போடியார் கலந்துகொண்டு ஆடல் கலைஞர்களை ஒவ்வொருவராக ஆடவும் பாடவும் செய்து தகுதி மற்றும் உடலமைப்பு என்பவற்றின் அடிப்படையில் அவர்களுக்கான பாத்திரங்கள் தெரிவுசெய்யப்பட்டு பனை ஓலையில் அதற்கான நியமனங்களை எழுதி  வழங்கப்பட்டமையும் தொடர்ந்தும் ஆறுமுகம் அவர்கள் களரி அமைத்தல், சலங்கை அணிதல், அடுக்குப் பார்த்தல், அரங்கேற்றம் என ஒவ்வொரு நிகழ்வாக செயல்படுத்தியமையும் நமக்கு ஒரு முன்னுதாரணமாகும்.
                                                                                                                           
அவர் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் வண்ணக்கராக கடமையாற்றிய காலத்திலும் அவரது கலை இலக்கியப் பணியினை முன்னெடுக்கவே செய்தார். ஆலய விழாக்களில்  இடம்பெற்றுவந்த கலைநிகழ்வுகள் மற்றும் அங்கு சிறப்பாக இடம்பெற்ற நமது பாரம்பரிய நிகழ்வான கொம்புமுறி விளையாட்டு என்பவற்றிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாகவே அமைந்திருந்தது. மிக முக்கியமாக இப்பிரதேச சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் ஆவணமான தான்தோன்றீ;ச்சரம் கும்பாபிஷேக மலரினை வெளிக்கொணர்வதிலும் இவரது உழைப்பு போற்றுதலுக்குரியதாகும்.
                                                                         
அமைப்பு ரீதியான ஆறுமுகத்தின் கலை இலக்கியப் பணியும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகவே அமையும். பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய வட்டம், வவுணதீவு கலாசார பேரவை, விமோசனா கலைவட்டம், வயல் சஞ்சிகைக் குழு, கண்ணகி கலை இலக்கியக் கூடல்,மட்டக்களப்பு எழுத்தாளர் பேரவை, ஆரத்தி, மாஸ்ரர் சிவலிங்கம் மணிவிழாக் குழு, பேராசிரியர் செல்வராசா மணிவிழாக் குழு என அவை விரிவுபட்டுச் செல்லும். இதில் குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சம் யாதெனில் பெரும்பாலான அமைப்புகளில் அவர் பொருளாளராக செயல்பட்டமையே. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. நிகழ்வுகளில் ஏதேனும் நிதி தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் தனது சொந்தப் பணத்தைப்போட்டு ஆறுமுகம் சமாளித்துவிடுவார் என்பதே அது. ஆறுமுகம் வங்கி முகாமையாளராக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக அமையும்.
                                                               
அடுத்து இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறும் அவரது கலை இலக்கியப்பணியாக அமைவது 'விபுலம் வெளியீ;ட்டு நிறுவனம்' ஆகும். இது அவருக்கு பெரும் சாதனையாக அமைந்ததுடன் மனதுக்கு மிகுந்த ஆறுதலையும் கொடுத்திருக்கின்றது. மட்டக்களப்புத் தேசத்தின் புத்திலக்கிய வளர்;ச்சிக்கு தனது கரத்தை நம்பி அவர் அடிக்கல் நாட்டியவர் என்று துணிந்து கூறலாம். ஆய்வு, கவிதை, கட்டுரை, நாடகம், வரலாறு, சமயம், தத்துவம் என சகல துறைகளிலும் தனது பதிப்புக் கொடையை அள்ளிக்கொடுத்தவர் ஆறுமுகம். அவரது எண்ணக் கருவில் விபுலம் மட்டும் தோன்றாமல் விட்டிருந்தால் பல படைப்புகள் வெறும் பேனாமுனை எழுத்துக்களாகவே மறைந்துபோயிருக்கும். பல்லாயிரம் ரூபா பெறுமதியான நூல்கள் விற்பனையின்றி தேங்கிய நிலையிலும் அவரால் முடிந்தவரை இப்பணியை தொடர்ந்தமை அவரது மனத் துணிச்சலையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக அமையும். ஆரம்ப காலம் முதலே அவரது பணிகளில் தோள் கொடுத்தவர்களில் முக்கியமானவர்களாக புதுக்குடியிருப்பு சதாசிவம் பிரான்சில் வாழும் நல்லரெத்தினம், வெல்லவூர்க் கோபால், பேராசிரியர் மௌனகுரு, காசுபதி நடராசா, வயல் சாருமதி, மகிழடித்தீவு திருநாவுக்கரசு, விரிவுரையாளர்  சு.சிவரெத்தினம், விரிவுரையாளர் ரவிச்சந்திரன் எனத் தொடரும் பட்டியலில் அவரது உடன் பிறப்புகள் மருமக்கள், உறவினர் எனப் பலரும் இணைந்துகொண்டனர். மிக முக்கியமாக அவரது அன்பு மனைவி திருமதி சாந்தினி ஆறுமுகம் அவர்களுக்கு இதில் முழுமையான முன்னுரிமையுள்ளது எனலாம்.                                                                         
                                                                                                     
1992ல் விபுலத்தின் முதல் வெளியீடாக வெளிவந்தது கலாநிதி மௌனகுருவின் 'பழையதும் புதியதும்' நூல். அதே ஆண்டில் அவர் வெல்லவூர்க் கோபாலின் 'கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர'த்தையும் வெளியிட்டார். ஆரம்பமே அவருக்கு பெருமகிழ்ச்சியை கொடுப்பதாக அமைந்தது. 'பழையதும் புதியதும்' தேசிய சாகித்திய விருதினையும் 'தான்தோன்றீ;ச்சரம்' இந்து கலாசார அமைச்சின் அருள்நெறி விருதினையும் பெற்றுத்தந்தன. அதனைத் தொடர்ந்து அவர் 1993ல் எதிர்மன்னசிங்கத்தின் 'புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை' மற்றும் கலாநிதி மௌனகுருவின் 'சுவாமி விபுலானந்தரின் காலமும் கருத்தும்' ஆகிய நூல்களை வெளியிட்டார். 1994ல் வெல்லவூர்க் கோபாலின் 'முற்றுப்பெறாத காவியம்' விபுலத்தின் ஐந்தாவது வெளியீடாக வந்ததுடன் சாகித்திய விருதினையும் அது பெற்றுக்கொடுத்தது. 1996ல் சித்திரலேகா மௌனகுருவின் 'பாரதியாரின் பெண்விடுதலை இயக்கம்' வெளிவந்தது. 1997ல் நான் தமிழகம் சென்று அங்கு தங்கியிருந்தமையால் ஆறுவருடங்களுக்குமேல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டாது போயிற்று. இக்காலத்தே அவர் 1998ல் கலாநிதி மௌனகுருவின் அவரது முனைவர் பட்ட ஆய்வான 'மட்டக்களப்பின் மரபுவழி நாடகங்கள்' மற்றும் 'இராவணேசன்' ஆகிய நூல்களை வெளியிட்டார். இதில் 'மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்' தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொடுத்தது. அதன்பின்னர் ஞா.சிவசண்முகத்தின் 'மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறும் மரபுகளும்' 2000ல் வெளிவந்தது. இதன்பின்னர் அவர் சு.சிவரெத்தினத்தின் 'சடங்குகளின் ஊடாக மட்டக்களப்பு' நூலை வெளியிட்டார். பின்னர் 2003 பிற்பகுதியில் வெல்லவூர்க் கோபாலின் 'தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்' நூல் விபுலத்தின் 11வது வெளியீடாக வெளிவந்தது. அதன் பின்னர் 2005ல் வெல்லவூர்க் கோபால் எழுதிய 'சுனாமி ஒரு மீள்பார்வை' நூல் அவரது அன்புமகள் சாகின்யாவின் மூன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு இலவச வெளியீடாக விபுலத்தின் 12வது நூலாக வெளிவந்தது. இந்நூல் பாடசாலை மாணவர்களின் நன்மைகருதி மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தின் பாடசாலை நூலகங்களுக்கும் பொது நூலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த இரு வெளியீடுகளாக சந்திரகுமாரின் 'பெருநதியின் புதியகிளை' நூலினையும் வடிவேல் இன்பமோகனின் 'இந்தியக் கலையும் இரசனையும்' நூலினையும் விபுலம் வெளிக்கொணர்ந்தது. விபுலத்தின் பதினைந்தாவது வெளியீடாக அவர் தனது தொகுப்பான 'கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும்' நூலினை வெளியிட்டார். அதன்பின் அதே ஆண்டில்  பேராசிரியர் மௌனகுருவின் 'மழை' நிருத்திய நாடகத்தை அவர் விபுலத்தின் 16வது வெளியீடாக வெளிக்கொணர்ந்தார். 

   
 ஆறுமுகம் தனது விபுலத்தின் மூலம் வெளிக்கொணர்ந்த பதினாறு வெளியீடுகளில் தனது பெயரில் ஒரேயொரு நூலையே வெளிக்கொணர்ந்தார். இங்கேயொரு தர்க்கப்பாடு எழுகின்றது. ஆறுமுகம் பல்துறைக் கலைஞராக இருந்தும் ஏன் அவர் தன்னை ஒரு கலை இலக்கியப் படைப்பாளியாக முன்னிறுத்தவில்லை என்பதே அது. இக்கேள்வி என்னுள்ளும் எழுந்திருக்கின்றது. அவரது ஆற்றல் குறித்து நான் நன்கு அறிவேன். சொல்லப்போனால் ஆறுமுகம்; தலைசிறந்த இலக்கிய கர்த்தாவாக பன்னூல் ஆசிரியராக தன்னை நிலைநிறுத்தக்கூடிய ஆளுமையைக் கொண்டிருந்தவர். அவரது அணிந்துரை, வெளியீ;ட்டுரை, பதிப்புரை என்பவற்றைப் படித்து நான் வியந்துபோயிருக்கின்றேன். ஒரு தடவை இக்கேள்வியை அவரிடம் நானே எழுப்பியதுண்டு. அதற்கு அவரளித்த பதில் இன்று வரை என்னைச் சிந்திக்கவைக்கின்றது. 'உங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கின்ற பேரும் புகழும் எனக்கும் கிடைக்கும்தானே' என்பதேயது. பாருங்கள் அவரது உளம் நெகிழும் வார்த்தைகளை இந்த மனப்பக்குவம்  யாருக்கு வரும்? தனது உழைப்பையும் நேரத்தையும் எதுவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது பணியாற்றிய கம்பரின் சடையப்ப வள்ளலை நான் ஆறுமுகத்தின் உருவில்தான் பார்க்கின்றேன்

                                                                                                           
என்னைப் பொறுத்தவரை விபுலத்துக்கு அப்பாலும் எனது கலை இலக்கியப் பணிக்கு அவர் தோள் கொடுத்தவர். மனுவேதா வெளியீடாக வந்த எனது எட்டு நூல்களுக்கும்  பேராதரவு தந்தவர். மட்டக்களப்பு வரலாறு மூன்றாம் பதிப்பினை பிரான்ஸ் நாட்டில் வாழும் திரு. அ.நல்லரெத்தினத்தின் உதவியுடன் மீள்பதிப்பு செய்து ஐரோப்பிய நாடுகளில் பரப்பியவர். வித்துவான் கமலநாதன் ஐயாவும் அவரது பாரியாரும் தொகுத்த மட்டக்களப்பின் பூர்வீக சரித்திரம் நூலினை என்னையும் இணைத்துக்கொண்டு விபுலத்தின் சார்பில் சிறப்பானதொரு வெளியீட்டு விழா நடாத்தியதோடு அவர்கள் இருவரையும் கௌரவித்த பெருமைக்குரியவர்.
               
அமரர் ஆறுமுகத்தின் கலை இலக்கியப் படைப்புலகம் மிகவம் விசாலமானது. அது தன்னலமற்ற தூய பணியை முன்னிறுத்துவது. நமது சரித்திர பூமியில் என்றுமே பெயர்த்தெடுக்கமுடியாத பெரும் குன்றாக அவர் விளங்கினார். நமது வரலாற்றுப் புதினங்களை – தொலைந்துபோன நமது சரித்திரப் புதையல்களை, நமது மரபுவழி பண்பாட்டுக் கோலங்களை தேடியெடுத்து உயிரூட்டி உலாவவிடவேண்டுமென்ற உறுதியுடன் அவர் செயல்பட்டார். அதில் பெரும் வெற்றியும் கண்டார்.

நண்பர் ஆறுமுகம்..... அவர் ஒரு சாமானியர் ஆனால் சாதனையளர். குறித்துச் சொல்லப்போனால் அவர் காலத்தின் குரல். அவரை அறிவதும் அவரை உணர்வதும் நம்மோடொத்த இலக்கியவாதிகளுக்கும் நாளைய தலைமுறையினருக்கும் வாழ்வில் பெருமிதமாகவே அமையும்.