சட்டவிரோதமான மரக்குற்றிகள் பறிமுதல்: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
மட்டக்களப்பு- கிரான், குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சோதனையை அவர்கள் நேற்று (சனிக்கிழமை) நடத்தியுள்ளனர்.

இதன்போது, வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மரக்குற்றிகள் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தப்பிச்சென்ற சந்தேகநபர்களை தேடும் பணியில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.