மணல் அகழ்விற்கான அனுமதி இடைநிறுத்தம்!



திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல்வரை நாளை (வெள்ளிக்கிழமை) அமுலுக்குவரும் வகையில் இந்த அனுமதிகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய மாவட்டத்தின் அனைத்து மணல் அகழ்வு நடவடிக்கைகளும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படும் என பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல தெரிவித்துள்ளார்.

மணல் அகழ்விற்கான அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் முறையான அனுமதிகளை கொண்டிருப்போருக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.